» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வளைகுடாப் போரில் அதிரடி திருப்பம்: 4,000 கி.மீ. தூரம் பாயும் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:47:13 AM (IST)

வளைகுடாப் போர் 4-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவாக 4,000 கி.மீ. தூரம் சென்று தாக்கக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளை வீசி ஈரான் உலக நாடுகளை அதிச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் முக்கியத் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளன. இருப்பினும், ஈரான் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குச் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேலின் 'அயர்ன் டோம்' பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி ஈரானின் ஏவுகணைகள் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் நகரங்களைத் தாக்கி வருகின்றன.
ஈரானின் வான்படை மற்றும் கடற்படை முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், ஈரான் தனது அடுத்தகட்ட ஆயுதத்தை ஏவியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் அமைந்துள்ள அமெரிக்க - இங்கிலாந்து கூட்டுப் படைத்தளத்தை நோக்கி ஈரான் இரண்டு ஏவுகணைகளை வீசியுள்ளது.
ஈரான் கடற்பகுதியிலிருந்து சுமார் 4,000 கி.மீ. தொலைவில் உள்ள இந்தப் படைத்தளத்தை நோக்கி வீசப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று நடுவானில் வெடித்தது. மற்றொன்றை அமெரிக்கக் கடற்படை 'எஸ்.எம்.3' (SM-3) இடைமறிப்பு ஏவுகணை மூலம் அழித்தது.
இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட 'கொரம்சாகர்-4' (Khorramshahr-4) ரக ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டவை. தங்களின் ஏவுகணைத் திறன் 2,000 கி.மீ. மட்டுமே என்று கூறிவந்த ஈரான், தற்போது 4,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கியதன் மூலம் தனது உண்மையான ராணுவ பலத்தை உலகிற்கு நிரூபித்துள்ளது.
சர்வதேசக் கண்டனமும் போர் தீவிரமும்:
இங்கிலாந்து கண்டனம்: டியாகோ கார்சியா மீதான தாக்குதலுக்கு இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் ஈரான் ஏற்படுத்தும் தடைகள் சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறியுள்ளது.
அணுசக்தி மையம் மீது தாக்குதல்: ஈரானின் முக்கிய யுரேனியம் செறிவூட்டும் மையமான நடான்ஸ் (Natans) அணுசக்தி தளம் மீது போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கியுள்ளன. இது குறித்து சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
உயிர்ச் சேதம்: லெபனானில் ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 1,000-க்கும் மேற்பட்டோரும், ஈரானில் சுமார் 1,400 பேரும் இதுவரை பலியாகியுள்ளனர்.
போர் நிறுத்தம் குறித்த பரிசீலனை: அமெரிக்காவின் இலக்குகள் எட்டப்படும் நிலையில் இருப்பதால், ராணுவ நடவடிக்கைகளைக் குறைப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாக அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதே சமயம், வளைகுடாப் பகுதிக்குக் கூடுதல் கப்பல்கள் மற்றும் 2,500 வீரர்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, ஈரான் எண்ணெய் மீதான சில தடைகளை நீக்குவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுற்றுலாப் பயணிகளுக்குத் தாய்லாந்து வைத்த செக்: விசா விலக்கு பட்டியலிலிருந்து இந்தியா நீக்கம்
சனி 23, மே 2026 5:50:24 PM (IST)

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலின் மாஸ்டர் மைண்ட் ஹம்சா புர்ஹான் பாகிஸ்தானில் சுட்டுக் கொலை!
சனி 23, மே 2026 10:51:47 AM (IST)

ஈரான் விவகாரத்தில் நான் சொல்வதைத் தான் நெதன்யாகு செய்வார் - ட்ரம்ப் பேட்டி!
வியாழன் 21, மே 2026 3:47:10 PM (IST)

இந்தியா - இத்தாலி உறவில் புதிய சகாப்தம்: மோடி - ஜார்ஜியா மெலோனி கூட்டு அறிக்கை!
புதன் 20, மே 2026 4:52:04 PM (IST)

நார்வே பெண் நிருபரின் கேள்விக்குப் பதிலளிக்காமல் சென்றார் பிரதமர் மோடி! – ராகுல் காந்தி சாடல்!
செவ்வாய் 19, மே 2026 3:39:00 PM (IST)

உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி: குப்பையில் வீசப்பட்ட சீன அரசின் பரிசு பொருட்கள்!
திங்கள் 18, மே 2026 5:40:25 PM (IST)



உலக உண்மைMar 23, 2026 - 06:58:47 AM | Posted IP 172.7*****