» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இந்து அறநிலையத் துறையின் பொற்காலம் ஸ்டாலின் ஆட்சி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு

ஞாயிறு 8, செப்டம்பர் 2024 5:40:34 PM (IST)



தலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி காலம் இந்து சமய அறநிலையத் துறையின் பொற்காலமாக திகழ்கிறது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். 

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் முன்னிலையில் 117 ஆண்டுகளுக்கு பின், இன்று (08.09.2024) நடைபெற்ற ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களில் ஒன்றான திருநெல்வேலி மாவட்டம் மானூர், அருள்மிகு அம்பலவாணசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழாவில் பங்கேற்று சிறப்பித்தார்.

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, மானூர், அருள்மிகு அம்பலவாணசுவாமி திருக்கோயிலானது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களில் ஒன்றாகும். இத்திருக்கோயிலுக்கு 117 ஆண்டுகளுக்கு பின் இன்றைய தினம் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் 2021 – 2022 ஆம் நிதியாண்டில் இது போன்ற நிதிவசதி குறைவாக உள்ள தொன்மையான திருக்கோயில்களை புனரமைக்க ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வழங்கியதில் கரூர் சித்தரால் ஆறாவது சபையாக போற்றப்பட்ட இத்திருக்கோயில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது பெருமகிழ்ச்சியை தருகின்றது. 

மானூர் அருள்மிகு அம்பலவாணசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 173 ஏக்கர் நன்செய் நிலங்களும், 28 ஏக்கர் புன்செய் நிலங்களும் குத்தகைக்கு விடப்பட்டு, அதன் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் இத்திருக்கோயிலின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும்.
 
தமிழ்நாடு முதலமைச்சர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்திட 2022-23 ஆம் நிதியாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தலா ரூ. 100 கோடியை அரசு மானியமாக தந்து இதுவரை ரூ. 300 கோடி வழங்கியுள்ளார். இத்துடன் உபயதாரர் நிதி ரூ. 142 கோடியையும் சேர்த்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணி நடைபெறுகின்றது, அதில் 35 திருக்கோயில்களில் பணி நிறைவுற்று குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

இந்த அரசு பொறுப்பேற்றபின், கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலுக்கு 400 ஆண்டுகளுக்கு பிறகும், காஞ்சிபுரம் மாவட்டம், சாத்தனஞ்சேரி, அருள்மிகு கரியமாணிக்க வரதராஜ பெருமாள் திருக்கோயிலுக்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு பிறகும், திருநெல்வேலி மாவட்டம், அரிகேசவநல்லூர், அருள்மிகு பெரியநாயகி சமேத அரியநாத சுவாமி திருக்கோயிலுக்கு 123 ஆண்டுகளுக்கு பிறகும், 16 திருக்கோயில்களுக்கு 100 ஆண்டுகளுக்கு பிறகும், 60 திருக்கோயில்களுக்கு 100 முதல் 50 ஆண்டுகளுக்கு பிறகும் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் 55 திருக்கோயில்களின் குடமுழுக்குடன் சேர்த்து இதுவரை 2,098 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான ஆட்சிப் பொறுப்பேற்ற பின் 805 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.6,703 கோடி மதிப்புள்ள 6,853 ஏக்கர் சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. 1,72,376.95 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு திருக்கோயில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ.92.23 கோடி மதிப்பீட்டில் 47 புதிய இராஜகோபுரங்கள் கட்டும் பணிகளும், ரூ.59 கோடி மதிப்பீட்டில் 97 புதிய மரத்தேர்கள், ரூ.11.92 கோடி மதிப்பீட்டில் 53 தேர்கள் மராமத்துப் பணிகளும், ரூ.28.44 கோடி மதிப்பீட்டில் 172 திருத்தேர் கொட்டகைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு ரூ.29 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தங்கத் தேர்களும், ரூ.27.16 கோடி மதிப்பீட்டில் 9 புதிய வெள்ளித் தேர்களும் உருவாக்கும் பணி தொடங்கப்பட்டு, அதில் திருத்தணி வெள்ளித்தேர் பணி முடிவுற்று பக்தர்கள் பயன்பாட்டிலும், பெரியபாளையம் தங்கத்தேர் பணி நிறைவு பெறும் நிலையிலும் உள்ளது. ரூ.3.07 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திருக்குளங்கள்,ரூ.120.33 கோடி மதிப்பீட்டில் 220 திருக்குளங்கள் சீரமைக்கும் பணிகளும், ரூ.301.67 கோடி மதிப்பீட்டில் 85 புதிய திருமண மண்டபங்கள், ரூ.86.97 கோடி மதிப்பீட்டில் 121 புதிய அன்னதானக் கூடங்கள், ரூ.187.05 கோடி மதிப்பீட்டில் 28 புதிய பக்தர்கள் தங்கும் விடுதிகள், ரூ.136.66 கோடி மதிப்பீட்டில் 89 குடியிருப்புகள் கட்டும் பணிகளும், பெருந்திட்ட வரைவின் (ஆயளவநச Pடயn) கீழ், ரூ.1,530.96 கோடி மதிப்பீட்டில் 19 திருக்கோயில்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மலைத் திருக்கோயில்களுக்கு பக்தர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி தரிசனம் மேற்கொள்ளும் வகையில் ரூ.20.30 கோடி செலவில் சோளிங்கரிலும், ரூ.9.10 கோடி செலவில் அய்யர்மலை திருக்கோயிலிலும் கம்பி வட ஊர்தி (சுழிந ஊயச) அமைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளன.

ரூ.26 கோடி மதிப்பீட்டில் திருநீர் மலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய திருக்கோயில்களுக்கு கம்பி வட ஊர்தி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, பழனி – இடும்பன்மலை, அனுவாவி, திருக்கழுகுன்றம் ஆகிய திருக்கோயில்களுக்கு கம்பி வட ஊர்திகள் அமைக்கும் பணிக்கு தேவையான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், ரூ.3.55 கோடி மதிப்பீட்டில் சுவாமி மலை திருக்கோயிலுக்கும், ரூ.5.20 கோடி மதிப்பீட்டில் மருதமலை திருக்கோயிலுக்கும் மின்தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.5,372.72 கோடி மதிப்பீட்டில் 20,252 பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநில வல்லுநர் குழுவால் 9,961 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள ஆண்டுதோறும் தலா 1,000 என்ற எண்ணிக்கை 1,250 ஆகவும், நிதியுதவி தலா ரூ.1 லட்சம் என்பது ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு இதுவரை 3,750 கிராமப்புற திருக்கோயில்களுக்கும் 3,750 ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற திருக்கோயில்களுக்கு ரூ. 150 கோடி திருப்பணி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் இந்நிதியுதவி ரூ. 2.50 இலட்சமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இந்த திருப்பணிகள் நடைபெறுவதை அலுவர்கள் மற்றும் பொறியாளர்களால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்படும்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் எச். சி.எல். நிறுவனத்தின் மூலம் நடைபெற்று வரும் திருப்பணிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை எவ்வித இடையூறும், தடைகளும் விதிக்கவில்லை என்பதனை உறுதியாக தெரிவித்துக் கொண்டு, அந்த நிறுவனத்தினர் வருகின்ற 07.07.2025க்குள் பணிகளை முடித்து தருவதாக கூறியுள்ளனர். அவர்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்போம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மானூர் ராஜகோபால சுவாமி திருக்கோயில் தெப்பக்குளம் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையும், அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் அம்மன் சன்னதி மேற்கு பிரகார மண்டபம், மேற்கூரை மற்றும் தெப்பகுளம் புனரமைப்பு பணிகளையும், வெள்ளி தேர் அமைக்கும் பணிகளையும், பெரிய தேர்க்கான கூண்டு அமைப்பதற்கான பணிகளின் நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார் .

திருநெல்வேலி அம்பாசமுத்திரம் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஓதுவார் பள்ளியின் செயல்பாடுகளையும் பள்ளியின் வளர்ச்சிக்கு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இந்நிகழ்வுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (திருநெல்வேலி) ராபர்ட் புரூஸ், (தென்காசி) இராணி ஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் (பாளையங்கோட்டை) அப்துல் வகாப், (சங்கரன்கோவில்) திரு ராஜா, (திருநெல்வேலி) நயினார் நாகேந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி அம்பிகா ஜெயின், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திருராமகிருஷ்ணன், மாநகராட்சி துணை மேயர் கே.ஆர் ராஜு, முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன் கான், கிறிஸ்தவ தேவாலையங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றம் பணியாளர்கள் நல வாரிய தலைவர் விஜிலா சத்யானந்த், மானூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செல்வி ஸ்ரீலேகா அன்பழகன், திருநெல்வேலி மண்டலம் இணை ஆணையர் (பொறுப்பு )திரு அன்புமணி, உதவி ஆணையர் கவிதா, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உதவி ஆணையர் திரு யக்ஞ நாராயணன், நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் திரு அய்யர் சிவமணி அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory