» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
போலீஸ் தேர்வு முறைகேட்டில் மேலும் ஒருவர் அதிரடி கைது: 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
செவ்வாய் 11, நவம்பர் 2025 8:41:21 AM (IST)
தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்திய போலீஸ் தேர்வில் முறைகேடு தொடர்பாக 3 பேர் சிக்கிய நிலையில் மேலும் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் நடந்தது. தென்காசி மாவட்டத்தில் 8 மையங்களில் தேர்வு நடந்தது. இதில் மொத்தம் 6,916 பேர் தேர்வெழுதினர். அப்போது இலஞ்சி பகுதியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய சிவகிரி பகுதியை சேர்ந்த கோபிகிருஷ்ணன் (வயது 23) என்பவர் அடிக்கடி கழிவறைக்கு சென்று வந்தார்.
இதனை நோட்டமிட்ட தேர்வு கண்காணிப்பாளர், சந்தேகத்தின் பேரில் அந்த வாலிபரை சோதனை செய்தபோது, அவர் தனது உள்ளாடைக்குள் செல்போனை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் மறைத்து வைத்திருந்த செல்போனில் வினாத்தாள்களை புகைப்படம் எடுத்து 3 நபர்களுக்கு அனுப்பியதும், அவர்கள் அதற்கான சரியான விடையை அனுப்பியதும் தெரியவந்தது.
இந்த முறைகேடு தொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகநயினார் கொடுத்த புகாரின் அடிப்படையில், குற்றாலம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கில் தொடர்புடைய கோபிகிருஷ்ணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிவகிரி பகுதியை சேர்ந்த பாண்டியராஜன், மல்லிகா ஆகிய 3 பேரையும் போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர்.
பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கில் தொடர்புடைய நாமக்கல் பகுதியை சேர்ந்த பிரதீப் என்ற வாலிபரை நாமக்கல்லில் வைத்து தென்காசி போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்த தென்காசிக்கு அழைத்து வருகின்றனர்.
இதற்கிடையே, தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் பரபரப்பு அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்வர்களை முறையாக சோதனை செய்யாமல் அலட்சியப் போக்குடன் செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஊர்க்காவல் படையினர் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணை முடிவடைந்த பின்னர் அலட்சியமாக செயல்பட்ட போலீஸ் துறை அதிகாரிகள் மற்றும் ஊர்க்காவல் படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுவில் விஷம் கலந்து கொடுத்து பள்ளி ஆசிரியர் கொலை : பெண் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
புதன் 12, நவம்பர் 2025 5:50:21 PM (IST)

நெல்லை வருகை தந்த ஆடவர் ஹாக்கி இளையோர் உலக கோப்பைக்கு உற்சாக வரவேற்பு
புதன் 12, நவம்பர் 2025 4:33:40 PM (IST)

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு தர்மஅடி: பாளையங்கோட்டையில் பரபரப்பு!
புதன் 12, நவம்பர் 2025 8:43:51 AM (IST)

இன்ஜினியரை கொன்ற மனைவி உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 12, நவம்பர் 2025 8:24:35 AM (IST)

நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: கனமழைக்கு வாய்ப்பு!
செவ்வாய் 11, நவம்பர் 2025 10:46:04 AM (IST)

கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு!
திங்கள் 10, நவம்பர் 2025 12:36:14 PM (IST)




