» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இன்ஜினியரை கொன்ற மனைவி உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புதன் 12, நவம்பர் 2025 8:24:35 AM (IST)

இன்ஜினியரை கொன்ற மனைவி உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே பொட்டல் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (25), இன்ஜினியர். இவருடைய மனைவி இஷா. இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு வெற்றிவேல் சென்னைக்கு வேலைக்கு சென்று இருந்தார். அந்த காலக்கட்டத்தில் இஷா தனது அத்தான் சீதாராமன் என்பவருடன் பேசி பழகி வந்தார். 

மேலும் இருவரும் மோட்டார் சைக்கிளில் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். இதனை அறிந்த வெற்றிவேல் மனைவியைக் கண்டித்தார். இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இஷா தனது சொந்த ஊரான அம்பை அருகே மன்னார்கோவிலில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

தம்பதியை சேர்த்து வைப்பதற்காக அவர்களிடம் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் உடன்பாடு ஏற்படவில்லை. அப்போது மனைவி இஷா தரப்பில் தங்க நகைகள் மற்றும் பாத்திரங்களை திருப்பி தருமாறு கேட்டனர். ஆனால் வெற்றிவேல் அவற்றை திருப்பித் தர முடியாது என்று மறுத்துவிட்டார். கடந்த 17-7-2017 அன்று இஷா தரப்பினர் வெற்றிவேலை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மன்னார்கோவில் வேம்படி தெருவைச் சேர்ந்த மாரிமுத்து (29), மூலச்சி வடக்கு தெருவைச் சேர்ந்த ஜெகதீஷ் (24), கீழ பாப்பாக்குடி வடக்கு தெருவைச் சேர்ந்த சீதாராமன் (35), வெற்றிவேல் மனைவி இஷா, மன்னார்கோவில் வேம்படி தெருவைச் சேர்ந்த சுடலைமாடி (53) மற்றும் செண்பகம், அப்துல் ரகுமான் என்ற முருகன் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், குற்றம் சாட்டப்பட்ட மாரிமுத்து, ஜெகதீஷ், சீதாராமன், வெற்றிவேல் மனைவி இஷா, சுடலைமாடி ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தார். 

மாரிமுத்து, ஜெகதீஷ் ஆகியோருக்கு தலா ரூ.17 ஆயிரம் அபராதமும், சீதாராமன், இஷா, சுடலைமாடி ஆகிய 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். செண்பகம், அப்துல் ரகுமான் என்ற முருகன் ஆகிய இருவரையும் விடுதலை செய்தார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் கருணாநிதி ஆஜரானார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory