» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மதுவில் விஷம் கலந்து கொடுத்து பள்ளி ஆசிரியர் கொலை : பெண் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

புதன் 12, நவம்பர் 2025 5:50:21 PM (IST)



மதுவில் விஷம் கலந்து கொடுத்து பள்ளி ஆசிரியரை கொலை செய்த வழக்கில் பெண் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

தென்காசி மாவட்டம் மத்தளம் பாறை அருகே உள்ள புல்லுக்காட்டு வலசை அரசு மேல்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியரை பிராந்தியின் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து உடலை குழி தோண்டி புதைத்த பெண் மற்றும் அவரது தம்பி மற்றும் தந்தைக்கு ஆயுள்தண்டனை மற்றும் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் மத்தளம் பாறை அருகே உள்ள புல்லுக்காட்டு வலசை அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக வேலை பார்த்தவர் சந்தோஷ் (வயது 36/2016) இவர் பாவூர்சத்திரம் - சுரண்டை செல்லும் சாலையில் உள்ள வேல்மயில் நாடார் காம்பவுண்டில் மனைவி அனுஷாவுடன் குடியிருந்து வந்துள்ளார்.

அப்போது அவரது வீட்டின் அருகே உள்ள வீட்டில் குடியிருந்தவர் பொன் செல்வி இவரது கணவர் முருகன் அபுதாபியில் போர்மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷின் மனைவி அனுஷாவும் பக்கத்து வீட்டுக்காரரான பொன் செல்வியும் நட்புடன் பழகி வந்துள்ளனர். 

இந்நிலையில் சந்தோஷும் அடிக்கடி பொன்செல்வியுடன் பேசி வந்துள்ளார் .இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. அதன்பின் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் பொன் செல்வி பாவூர்சத்திரம் எம்.கே.வி.கே. ஜி. சாலையில் அசிசி பள்ளிக்கு மேல் புறம் புதிதாக ஒரு வீடு கட்டி அதில் குடியிருந்து வந்துள்ளார். 

அதன் பிறகும் சந்தோஷ் பொன் செல்வியின் கள்ளத்தொடர்பு நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் சந்தோஷ் பொன் செல்வியிடம் நீ உன்னுடைய குழந்தைகளை பெற்றோர்களிடம் விட்டுவிட்டு என்னுடன் வந்துவிடு தனிக்குடித்தனம் நடத்தலாம் என்று கூறியுள்ளார். இந்நிலையில் பொன் செல்வி வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதையும் கண்டித்துள்ளார். இதனால் பொன் செல்விக்கும் சந்தோஷுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் அபுதாபியில் உள்ள பொன் செல்வியின் கணவர் முருகன் ஊருக்கு வருவதாக தகவல் வந்துள்ளது. இதனால் கணவர் ஊருக்கு வரும் நேரத்தில் ஆசிரியர் சந்தோஷ் மூலமாக தனக்கு இடையூறு ஏற்படும் என்பதால் தனது கணவர் ஊருக்கு வருவதற்கு முன்பாக சந்தோஷை கொலை செய்து விட வேண்டும் என்று பொன் செல்வி முடிவு செய்துள்ளார்.

இது பற்றி தனது உடன்பிறந்த தம்பி வெய்காலிப்பட்டி பகுதியை சேர்ந்த முருகன் (34) தனது தந்தை தங்கப்பாண்டி (வயது 70) ஆகியோரிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து மூன்று பேர்களும் சேர்ந்து ஆசிரியர் சந்தோஷை தீர்த்து கட்ட சதித்திட்டம் தீட்டியுள்ளனர் அதன்படி சந்தோஷை பொன் செல்வியின் வீட்டிற்கு வரவழைத்து பிராந்தியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து அவரது உடலை வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்து விட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர். 

அதன்படி கடந்த 04.02.2016 அன்று தனது வீட்டுக்கு பின்புறம் வேலை ஆட்கள் மூலமாக ஒரு குழி தோண்டியுள்ளனர். அதனைத் தொடர்ந்து 06.02.2016 அன்று காலையில் பொன் செல்வியின் தம்பி முருகன் மற்றும் அவரது தந்தை தங்கப்பாண்டி ஆகியோர் சந்தோஷுக்கு கொடுப்பதற்காக பிராந்தி கோழிக்கறி மற்றும் மோனோசில் என்ற விஷ மருந்தையும் வாங்கி வந்து பொன்செல்வியுடன் கொடுத்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்து பொன் செல்வி செல்போன் மூலம் சந்தோஷை தொடர்பு கொண்டு பேசி உளளார். அப்போது பாவூர்சத்திரம் எம் கே வி கே சாமில் அருகில் நின்று கொண்டிருந்த சந்தோஷை தனது காரில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது பொன் செல்வியின் தம்பி முருகன் தந்தை தங்கப்பாண்டி ஆகியோர் பொன் செல்வியின் வீட்டில் உள்ள மற்றொரு
 படுக்கை அறையில் மறைந்து இருந்துள்ளனர். 

அதன்பின் பிற்பகல் 12.30 மணிக்கு பொன் செல்வி ஏற்கனவே திட்டமிட்டபடி ஆசிரியர் சந்தோஷிற்கு விஷம் கலந்த பிராந்தி மற்றும் கோழிக்கறியையும் கொடுத்து சாப்பிடும் படி கூறியுள்ளார். இது பற்றி எதுவும் அறியாத சந்தோஷ் விஷம் கலந்த பிராந்தியை குடித்துவிட்டு கோழிக்கறியையும் தின்றுள்ளார். இதனால் சற்று நேரத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார் அவரை பொன் செல்வி அந்த அறையிலேயே வைத்து பூட்டிவிட்டு வெளியே வந்துவிட்டார். 

அதன்பிறகு மாலை 3 மணி அளவில் பொன்செல்வி கதவை திறந்து பார்த்தபோது சந்தோஷ் இறந்து கிடந்துள்ளார். அதனைத் தொடர்ந்து பொன் செல்வி அவரது தம்பி முருகன் இவர்களது தந்தை தங்கப்பாண்டி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ஆசிரியர் சந்தோஷின் உடலை ஏற்கனவே தோண்டி வைத்த குழியில் போட்டு மூடி உள்ளனர். 

இந்நிலையில் ஆசிரியர் சந்தோஷை காணவில்லை என்று அவரது மனைவி அனுஷா பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஆசிரியர் சந்தோஷிற்கும் பொன் செல்விக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. 

உடனடியாக போலீசார் பொன் செல்வியை பிடித்து உரிய முறையில் விசாரணை நடத்திய போது நடந்த உண்மைகள் அனைத்தையும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் பொன் செல்வி அவரது தம்பி முருகன் இவர்களது தந்தை தங்கப்பாண்டி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி மனோஜ் குமார் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.விசாரணையில் பட்டதாரி ஆசிரியர் சந்தோஷை பொன் செல்வி முருகன் தங்கப்பாண்டி ஆகியோர் திட்டமிட்டு கொலை செய்து அதனை மறைக்கும் வகையில் சந்தோஷின் உடலை குழி தோண்டி புதைத்துள்ளதும் நிரூபிக்கப்பட்டது. 

இந்நிலையில் நீதிபதி மனோஜ்குமார் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார் அப்போது முதல் குற்றவாளியான பொன் செல்வி, 2 - வது குற்றவாளியான முருகன் 3 - வது குற்றவாளியான தங்கப்பாண்டி ஆகியோர் செய்த கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதமும் விதித்தார். அபராதத் தொகையை கட்ட தவறினால் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்கவும், மேலும் தடயத்தை மறைத்த குற்றத்திற்காக மூவருக்கும் தலா 7 வருட கடும் காவல் தண்டனையும் மேலும் மூவருக்கும் தலா ரூபாய் 10,000 அபராதமும் விதித்தார்.அபராதத்தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் சு.வேலுச்சாமி ஆஜராகி வாதாடினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory