» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் காதலைக் கைவிட மறுத்த அக்கா சரமாரி வெட்டிக்கொலை: தம்பி வெறிச்செயல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:02:04 PM (IST)
திருநெல்வேலி அருகே காதலைக் கைவிட மறுத்துக் காதலனுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த சொந்தச் சகோதரியைத் தம்பியே அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த மேலகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் ராமலெட்சுமி (23). இவர் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். ராமலெட்சுமியின் தம்பி முத்துக் கிருஷ்ணன் (20). இவர் ஒரு தனியார் உணவகத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ராமலெட்சுமி வாலிபர் ஒருவரைத் தீவிரமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் தொடர்பாக அவர்களது குடும்பத்தில் கடுமையான கருத்து வேறுபாடுகளும் குடும்பத் தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. குறிப்பாக, தம்பி முத்துக் கிருஷ்ணன் தனது அக்காவின் காதலைக் கடுமையாக எதிர்த்து வந்ததுடன், அவரைக் காதலைக் கைவிடுமாறு அடிக்கடி கண்டித்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்த ராமலெட்சுமி தனது காதலனுடன் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதைப் பார்த்துப் பெரும் ஆத்திரமடைந்த தம்பி முத்துக் கிருஷ்ணன், ராமலெட்சுமியிடம் சென்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அக்காள் - தம்பி இடையே ஏற்பட்ட இந்தச் சண்டை முற்றிய நிலையில், கோபத்தின் உச்சத்துக்கே சென்ற முத்துக் கிருஷ்ணன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து ராமலெட்சுமியைச் சரமாரியாக வெட்டினார்.
இதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமலெட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது பெற்றோர், படுகாயமடைந்த அவரை உடனடியாக மீட்டுச் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே ராமலெட்சுமி பரிதாபமாக உயிரிழந்ததாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து கொல்லப்பட்ட ராமலெட்சுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், சுத்தமல்லி காவல் நிலைய போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, முத்துக் கிருஷ்ணனை கைது செய்தனர். காதல் விவகாரத்தில் உடன் பிறந்த தம்பியே அக்காவை வெட்டிக்கொன்ற கொடூரச் சம்பவம் நெல்லை மேலகரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் விஜய்யின் புகைப்படத்திற்கு அருகே அமர மறுக்கும் மேயர்: நெல்லையில் சர்ச்சை!
செவ்வாய் 9, ஜூன் 2026 8:05:42 AM (IST)

தனிநபர் கடன், கல்விக் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் ஆனந்த் மோகன் தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 5:46:43 PM (IST)

நெல்லையில் அண்ணாமலை இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம்: பொதுமக்கள் ஆர்வம்!
திங்கள் 8, ஜூன் 2026 5:18:27 PM (IST)

கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக் கூடாது? உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
திங்கள் 8, ஜூன் 2026 4:16:17 PM (IST)

நெல்லை - தென்காசி வழித்தட எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 10:56:37 AM (IST)

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை: குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை
திங்கள் 8, ஜூன் 2026 10:37:14 AM (IST)


