» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மிஸ் ஸ்டார் ஆப் இந்தியா அழகி போட்டியில் குமரியை சேர்ந்த இளம்பெண் வெற்றி!
வியாழன் 8, ஆகஸ்ட் 2024 12:31:54 PM (IST)
சென்னையில் நடந்த ‘மிஸ் ஸ்டார் ஆப் இந்தியா' அழகி போட்டியில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் பட்டம் வென்றார்.
நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த யோகராஜ்- சவீதா தம்பதியின் மூத்த மகள் நிவேதா யோகராஜ். பி.எஸ்சி. படித்துள்ள இவர் சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ‘மிஸ் ஸ்டார் ஆப் இந்தியா' அழகி போட்டியில் கலந்து கொண்டு மிஸ் ஸ்டார் ஆப் இந்தியா அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறந்த கேட்வாக் மற்றும் சிறந்த உடையணிதல் ஆகிய 2 தலைப்புகளிலும் அவர் முதலிடம் பெற்றார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றது குறித்து நிவேதா யோகராஜ் கூறியதாவது: நான் அழகி போட்டிக்காக இதுவரை எந்த பயிற்சியும் பெற்றதில்லை. தேசிய அளவிலான அழகி போட்டியில் நான் கலந்து கொண்டது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு நான் பள்ளி-கல்லூரி அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். கடந்த 2022-ம் ஆண்டு மிஸ் பேஸ் ஆப் கன்னியாகுமரி போட்டியில் நான் மிஸ் டேலண்டராக வெற்றி பெற்றேன். அதே ஆண்டில் மிஸ் நெல்லை போட்டியில் ரன்னராக தேர்வானேன். 2023-ம் ஆண்டு நடந்த மிஸ் நாகர்கோவில் போட்டியில் அழகியாக தேர்வு பெற்றேன்.
இந்த வெற்றி தான் எனக்கு அழகி போட்டியில் பங்கேற்கலாம் என்ற எண்ணத்தையும், வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. இந்த ஆண்டு தான் நாகர்கோவில் அரசு கலைக்கல்லூரியில் படிப்பை முடித்தேன். இதற்கிடையே எனது தந்தை இறந்து விட்டார். பின்னர் எனது தாயார் சவீதாவும், எனது தங்கையும் தான் எனக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளித்தனர்.நான் பரதநாட்டியம் பயின்றுள்ளேன். பாட்டு பாடுவதிலும் பயிற்சி பெற்றுள்ளேன். அதனால் குமரி, நெல்லை, தென்காசி, மதுரை போன்ற பகுதிகளில் நடைபெறும் இசைக் கச்சேரிகளுக்கு பாட்டு பாட செல்வேன்.
எனது தந்தை இறந்த பிறகு எனக்கு இந்த கச்சேரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் தான் கை கொடுத்தன. கல்லூரி படிப்பு முடிந்து விட்டதால் பரத நாட்டிய வகுப்புகளும் எடுத்து வருகிறேன். எதிர்காலத்தில் மிஸ் இந்தியா போட்டியிலும் பங்கேற்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கு தேவையான பணம் என்னிடம் இல்லை. அதனால் சினிமாவில் நடிக்கும் ஆசை உள்ளது. அந்த வாய்ப்பு கிடைத்தால் இந்திய அளவிலான மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்பேன். இவ்வாறு அவர் கூறினார்.