» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் முன்பதிவு : உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்
வியாழன் 8, ஆகஸ்ட் 2024 5:16:20 PM (IST)
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024-ல் பங்கேற்க இணையதள முன்பதிவினை (Online Registration) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பேற்றவுடன் கடந்த ஆண்டு முதல் ”தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” விளையாட்டுப் போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அப்போட்டிகளுக்காக மொத்த பரிசுத்தொகை ரூ.25.00 கோடி உட்பட ரூ.50.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.
இவ்வாண்டில் நடத்தப்பட இருக்கும் போட்டிகளில் வெவ்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 வகையான விளையாட்டுகள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விவரத்தினை https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்திட வேண்டும்.
மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது மற்றும் இவ்வாண்டு தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதன் முறையாக நான்காம் இடம் பெற்றவர்களுக்கும் மூன்றாம் பரிசிற்கு இணையாக வழங்கிட உள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் இவ்வாண்டுக்கான தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளுக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.37 கோடியாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இப்போட்டிகளில் வழங்ப்படும் சான்றுகள் மூலம் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும்.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களுக்கும்,17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணாக்கர்களுக்கும், 15 வயது முதல் 35 வயது வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி நாள். 25.08.2024 ஆகும்.
எனவே விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு கீழ்க்காணும் முகவரியில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வலுவலக முகவரி : மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,
மாவட்ட விளையாட்டு அரங்கம், ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி – 628 001. தொலைபேசி எண் - 0461-2321149. "ஆடுகளம்” தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.