» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கல்வி உரிமை நிதி ரூ.600 கோடி நிலுவையை அரசு செலுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்!!

சனி 19, ஜூலை 2025 12:08:33 PM (IST)

ஆர்.டி.இ. திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு ரூ.600 கோடி நிலுவைத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் ரூ.600 கோடியை தமிழக அரசு இன்னும் செலுத்தததால், தனியார் பள்ளிகளில் பயிலும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த உண்மையை தமிழக அரசு அறிந்திருந்தும் மாணவர்களின் கல்வியைக் காக்க நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

நாடாளுமன்றத்தில் 2009&ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, தனியாருக்கு சொந்தமான பள்ளிகளிலும் மழலையர் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளிலும் 25% இடங்கள் சமூகநிலையிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய குழந்தைகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தின்படியான மாணவர் சேர்க்கை மாநில அரசால் நேரடியாக மேற்கொள்ளப்படுகிறது. ஒருங்கிணைந்தக் கல்வித் திட்டத்தின்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி இதுவரை வழங்கப்படாததைக் காரணம் காட்டி தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உரிமைச் சட்ட நிதி ரூ.600 கோடியை தமிழக அரசு இன்னும் செலுத்தவில்லை.

அதனால், நடப்பாண்டில், கல்வி உரிமை சட்டத்தின்படியான மாணவர் சேர்க்கை இன்று வரை தொடங்கப் படவில்லை. இதன் மூலம் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்களுக்கு அரசின் செலவில் இலவசமாகக் கிடைக்க வேண்டிய கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்பாகவே பல தனியார் பள்ளிகள் அடுத்த அதிர்ச்சியை அளிக்கத் தயாராகி வருகின்றன. 

கடந்த இரு ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகையை செலுத்தாத தமிழக அரசு, நடப்பாண்டிலும் அதை செலுத்த வாய்ப்பில்லை என்றும், அதனால் கடந்த காலங்களில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் நடப்பாண்டிற்கான கல்விக் கட்டணத்தை ஒரே கட்டமாகவோ, பல தவணைகளாகவோ செலுத்த வேண்டும் என்று தனியார் பள்ளிகள் அறிவித்திருக்கின்றன. ஒருவேளை தமிழக அரசு கல்விக் கட்டண நிலுவைத் தொகையை செலுத்தி விட்டால், மாணவர்கள் செலுத்திய தொகை அவர்களுக்கு திருப்பி வழங்கப்படும் என்றும் பல தனியார் பள்ளிகளின் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

தனியார் பள்ளிகளின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளவே முடியாது. தமிழக அரசிடமிருந்து தங்களுக்கு வர வேண்டிய கல்விக் கட்டணம் வழங்கப்படவில்லை என்ற தனியார் பள்ளிகளின் குறை நியாயமானது தான். அதேபோல், மத்திய அரசு தங்களுக்கு வழங்க வேண்டிய ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி வழங்கப்படவில்லை என்ற தமிழக அரசின் குற்றச்சாட்டும் சரியானது தான். ஆனால், தமிழக அரசும், தனியார் பள்ளிகளும் தங்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கப் போராட வேண்டுமே தவிர, நலிந்தவர்களான மாணவர்களை நசுக்க முயலக்கூடாது. அது சமூகநீதிக்கு எதிரான செயலாகிவிடும்.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகள் அனைவரும் சமூகத்தின் அடித்தட்டு மக்கள் தான். தனியார் பள்ளிகளில் சேருவதற்கு நிதி இல்லாததாலும், அருகில் அரசு பள்ளிகள் இல்லாததாலும் தான் அவர்கள் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சேர்ந்து பயில்கின்றனர். 

எந்த வசதியும் இல்லாத அவர்களிடம் கல்விக் கட்டணம் செலுத்தும்படி கட்டாயப்படுத்துவது சரியல்ல. தொடர்ந்து அவர்களை வலியுறுத்தினால் அவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, ஏதேனும் பணி செய்யச் சென்று விடுவார்கள். அப்படி நடந்தால், எந்த நோக்கத்திற்காக கல்வி உரிமைச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டதோ, அந்த நோக்கத்தையே அடியோடு சிதைந்து விடும். தமிழ்நாடு அரசும், தனியார் பள்ளிகளும் அதைத் தான் விரும்புகின்றனவா? என்பது தெரியவில்லை.

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்திற்காக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்ததிலிருந்து தான் இந்த சிக்கல் தொடங்கியது. கல்வி என்ற முதன்மைத் தேவைக்காக வழங்கப்படும் நிதியை எந்தவொரு நெருக்கடியான காலகடத்திலும் நிறுத்தி வைக்கக்கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இதை பல முறை தெளிவுபடுத்தியுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

அதே நேரத்தில் இந்த விவகாரத்தை தமிழக அரசு கையாண்ட விதம் அதன் நிர்வாகத் திறனின்மையையே காட்டுகிறது. ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியை பெற வேண்டியது தமிழக அரசின் உரிமையாகும். அது கடந்த ஓராண்டுக்கு முன்பே மறுக்கப்பட்ட நிலையில், உடனடியாக அதை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோ, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தோ சாதிக்க வேண்டும் என்று அப்போதே நான் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அப்போதெல்லாம் அமைதியாக இருந்தும், அரசியல் இலாபம் தேட முயன்றும் தோல்வியடைந்த திமுக அரசு, இப்போது தனியார் பள்ளிகளுக்கு வழக்கப்பட வேண்டிய நிதியை நிறுத்தி வைத்து மாணவச் செல்வங்களுக்கு துரோகம் செய்திருக்கிறது.

மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டப் பணியாளர்களுக்கு மாநில அரசின் நிதியிலிருந்து ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்து பெருமைபட்டுக் கொண்ட திமுக அரசுக்கு தனியார் பள்ளிகளுக்கு செலுத்த வேண்டிய தொகையையும் மாநில அரசின் கணக்கிலிருந்து செலுத்துவதற்கு என்னத் தடை? என்பது தெரியவில்லை. மத்திய அரசும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை தாமதிக்காமல் வழங்க வேண்டும். மத்திய அரசின் பிடிவாதமாக இருந்தாலும், மாநில அரசின் அலட்சியமாக இருந்தாலும் அது ஏழை மாணவர்களின் கல்வியை பாதிக்கக் கூடாது.

எனவே, தமிழக அரசு உடனடியாக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்; அதன் மூலம் தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளில் ஒரு லட்சம் பேருக்கு உடனடியாக சேர்க்கை கிடைப்பதையும், ஏற்கனவே தனியார் பள்ளிகளில் பயின்று வரும் 8 லட்சம் மாணவர்களின் கல்வி பாதிப்பின்றி தொடர்வதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.என தெரிவித்துள்ளார் .


மக்கள் கருத்து

nishaJul 19, 2025 - 02:07:24 PM | Posted IP 104.2*****

thank u anna for ur support

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory