» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தரையிறங்கிய பயிற்சி விமானம்: புதுக்கோட்டை அருகே பரபரப்பு!

வெள்ளி 14, நவம்பர் 2025 8:38:38 AM (IST)

புதுக்கோட்டை அருகே வானில் பறந்தபோது ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பயிற்சி விமானம் சாலையில் தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் விமானி உள்பட 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சேலத்தில் தனியார் நிறுவனம் சார்பில் சிறிய ரக விமானம் மூலம் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை சேர்ந்த பயிற்சி விமானம் ஒன்று நேற்று காலை சேலத்தில் இருந்து காரைக்குடிக்கு புறப்பட்டது. பயிற்சியாளரான விமானி ராகுல், பயிற்சி பெறுபவரான ஹசீருக்கு பயிற்சி அளித்தார். இந்த பயிற்சி விமானம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சென்று விட்டு சேலத்திற்கு திரும்பி சென்று கொண்டிருந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அம்மாசத்திரம் பகுதியில் வானில் பறந்தபோது அந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் காலை 11.40 மணி அளவில் வானில் சிறிது நேரம் வட்டமடித்தபடி இருந்தது. இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்க வேண்டும் என்று பயிற்சி விமானத்தில் இருந்த பயிற்சியாளர் ராகுல் திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். 

மேலும் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பயிற்சி விமானத்தை அவர் தரையிறக்க தயாரானார். அப்போது அந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இதனால் சற்று சுதாரித்து வாகனங்கள் மீது மோதாமல் விமானத்தை இறக்க முற்பட்டார்.

அதேநேரத்தில் வானில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று சாலையில் தரையிறங்க முற்படுவதை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்து தங்களது வாகனத்தை நிறுத்த தொடங்கினர். அப்போது அவசர, அவசரமாக பயிற்சி விமானம் சாலையில் பயங்கர சத்தத்துடன் தரையிறங்கி நின்றது. விமானத்தில் இருந்த 2 பேரும் சற்று அதிர்ச்சியுடன் இறங்கினர்.

சாலையில் அந்த வழியாக வந்தவர்கள், தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் சாலையின் நடுவே நின்ற விமானத்தை தள்ளி நகர்த்தி சாலையின் ஓரம் நிறுத்தினர். பயிற்சி விமானத்தின் முகப்பு பகுதியில் இருந்த இறக்கையில் சேதம் ஏற்பட்டு உடைந்திருந்தது. மேலும் என்ஜினில் மேல்பகுதியில் உள்ள உதிரிபாகம் சேதம் அடைந்திருந்தது. அந்த உதிரிபாகம் விமானம் பறக்கும்போது, எதன் மீதோ மோதி சேதமடைந்தது தெரியவந்தது. அந்த உதிரிபாகத்தை விமானம் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் போலீசார் மீட்டு எடுத்து வந்தனர்.

விமானத்தின் முகப்பு பகுதியில் சேதமடைந்திருந்த நிலையில், பெட்ரோல் கசிவும் சிறிது ஏற்பட்டது. மேலும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டனர். இதற்கிடையில் திருச்சி விமான நிலைய அதிகாரிகளும் விரைந்து வந்து பயிற்சி விமானத்தை பார்வையிட்டனர். விமானி ராகுல், ஹசீர் ஆகியோரை திருச்சி விமான நிலைய மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அந்த விமானத்தை சுற்றி தடுப்புக்கயிறு அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வானில் பறந்த விமானம் சாலையில் தரையிறங்கியிருப்பதை காண அப்பகுதி பொதுமக்கள் திரண்டனர். மேலும் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இறங்கி நின்று வேடிக்கை பார்த்தனர். பொதுமக்கள் பலர் தங்களது செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்தனர்.

விமானம் வானில் வட்டமடித்தபடி இருந்தபோதும், சாலையில் தரையிறங்கியபோதும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதேநேரத்தில் சாதுர்யமாக தரையிறங்கியதால் விமானி உள்பட 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory