திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (28 of 53)

கங்கையின் பாவத்தை போக்கிய தாமிரபரணி
 
நாள்தோறும் கங்கையில் தனது பாவத்தை போக்க மக்கள் குளித்து வருகிறார்கள். இதனால் கங்கை நதி பாவப்பட்டு, அசுத்த நதியாக மாறிவிடுகிறது. ஆகவே கங்கை தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ள ஆண்டு தோறும் மார்கழி மாதம் தாமிரபரணியில் நீராடி தன்னை புனித படுத்திக் கொள்வாளாம்.
போற்று கங்கையும் தன்னிடை படிந்தவர் புன்மை
தோற்று பாவங்கள் யாவையும் மாணிக்கத் தொகுதி
யேற்ற தாமிரபன்னியின் இடை வந்து படிந்து
மாற்றுமால் வருடந்தோறும் மார்கழி மாதம்
                   என்று முக்களாலிங்க முனிவர் எழுதிய பாபநாச தலப்புராணம் கூறுகிறது. ஆக கங்கை, காவிரி இவையெல்லா வற்றையும் விட சிறந்த நதி தாமிரபரணி என புலனாகிறது.
 
இதில் காவிரி நதி கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே படும் பாடு நமக்கெல்லாம் தெரியும். ஆனால் தாமிரபரணி தமிழகத்தில், அதாவது ஓரே மாநிலத்தில் 120 கிலோ மீட்டர் ஓடும் வற்றாத ஜீவ நதியாகும். முன்பு நெல்லை மாவட்டத்தில் மட்டுமே பாய்ந்த இந்நதி தற்சமயம் நிர்வாகக் காரணத்தினால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் என 2 ஆகப் பிரிந்து இரண்டு மாவட்டத்தில் ஓடுகிறது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் பாளையங் கால்வாய் வழியாக வீணாகும் தண்ணீர் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மேலக்கால் வாயில் விழுகிறது.
 
இதை போல மருதூர் மேலக்கால் வாயில் குளங்கள் நிரம்பி அதில் வீணாகும் தண்ணீர் திருவைகுண்டம் தென்காலில் விழுகிறது. அங்கு கடல் பாதி கடம்பா பாதி என கூறும் கடம்பா குளம் நிரம்பி அங்கிருந்து புறையூர் தனிக்கால்வாய் திட்டம் மூலம் திருச்செந்தூர் வரை 11 குளங்களை நிரம்பி அதன் பிறகு தான் கடலுக்கு செல்கிறது. தாமிரபரணி வற்றுவதே கிடையாது. இதுவே ஒரு அதிசயமான விஷயம் ஆகும். அதே தாமிரபரணி தண்ணீரும் இது வரை வீணாகுவதே கிடையாது. இனி தாமிரபரணியில் மிகவும் விசேசமாக கருதப்படும் இங்குள்ள தீர்த்த கட்டங்களை பற்றி பேசுவோம்.
 
பாபநாசத்திற்கு மேல் அதாவது மலையும் மலை சார்ந்த பகுதியிலும் தேவர்களுக்காக 32 தீர்த்த கட்டங்களும், சமவெளியில் பாபநாசத்தில் இருந்து கடல் வரை மனிதர்களுக்காக 86 தீர்த்த கட்டங்களும் உள்ளது. இது குறித்து விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள திருப்புகழ் இல்லத்தில் வசிக்கும் நுர்லகர் ஆவுடையப்பன் என்பவர் கூறியதாவது
 
நைல், அமேசான் நதி:
 
உலகில் உள்ள அத்தனை நதிகளுமே நீரை மட்டுமே சுமந்து செல்கிறது. அது நைல் நதியாக இருந்தாலும் அமேசான் நதியாக இருந்தாலும் விதி ஒன்று. ஆனால் நமது புண்ணிய தேசமான பாரத தேசத்தில் உள்ள நதிகள் தண்ணீரை மட்டும் சுமந்து செல்வதில்லை. நமது கலாச்சாரத்தையும், பண் பாட்டையும், இறையாண்மையையும் சுமந்து செல்கிறது. குறிப்பாக நாம் நம் நதிகளை மதிப்பதற்கு காரணம் நதிக்கரையில் அமைந்துள்ள அற்புதங்களே. அந்த அற்புதங்களில் தாமிரபரணியை பொறுத்தவரை இங்குள்ள தீர்த்த கட்டங்கள் மிகவும் புண்ணியம் வாய்ந்த புனிதமான அற்புதங்களாகும்.
 
தாமிரபரணி மகாத்மியம்
 
வட இந்தியாவில் உள்ள கங்கை, யமுனை, சரையூ போன்ற நதிகளுக்கு ஈடாக தென்னிந்தியாவில் தாமிரபரணி மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் பெருமையை உணர்ந்த வேத வியாசர் தனது மகனாகிய சுக பிரம்ம ரிஷpக்கு தாமிரபரணியின் பெருமையை உபதேசம் செய்தார். அந்த உபதேச நூல்தான் ஸ்ரீதாமிரபரணி மகாத்மியம. தாமிரபரணி மேன்மையை ஆதிசேஷன், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு கூறினாலும் முடிவு பெறாது. அத்தகைய பெருமை உடையது என்று வியந்து போற்றுகிறார்.
 
மகாபாரதமும் ஆருண்ய பருவத்தில் 190வது அத்தியாயத் தில் 95வது ஸ்லோகத்தில் தாமிரபரணியின் பெருமையை கூறுகிறது. தாமிரபரணி பொதிகை மலையில் உற்பத்தி ஆகிறது. அது எந்த இடத்தில் உற்பத்தி ஆகிறது என்பதை இதுவரை யாரும் அறியவில்லை. யாரும் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் மரம், செடி, கொடி வண்டுகளால் சூழப்பட்டுள்ளது. இந்த தாமிரபரணியில் உள்ள தீர்த்தக்கட்டம் பற்பல உள்ளது. அதில் காசியில் குளித்த புண்ணியம் கிட்டும் இடம் முறப்பநாடு ஆகும்.
 
இந்தியாவில் இரண்டு நதிதான் வடக்கிலிருந்து தெற்காக ஓடுகிறது. ஒன்று காசியில் உள்ள கங்கை நதி மற்றொன்று தாமிரபரணி. முறப்பநாட்டில் தாமிரபரணியில் குளிப்பது. காசியில் குளிப்பதற்கான நிகரானது என்று மகாத்மியம் கூறுகிறது. மேலும் கங்கையின் பாவத்தினை தாமிரபரணி போக்குவதால் மார்கழி மாதம் தாமிரபரணியில் எந்த பகுதியில் குளித்தாலும் கங்கையில் குளித்த புண்ணியம் கிட்டும்.
 
பாத யாத்திரை
 
அகத்தியர் மொட்டை என்றழைக்கப்படும் பகுதியில் அகத்திய முனிவரின் கூடமும் ஸ்ரீயகிரிவ முனிவரின் ஆசிரமும் உள்ளது. மே மாதம் 1-ம் தேதி பொதிகையடியில் வசிக்கும் புருஷர்த்தமன் என்பவரின் ஏற்பாட்டின் பேரில் வருடந்தோறும் பாத யாத்திரை குழுவினர் இப்பகுதிக்கு சென்று வருகின்றனர். இதற்காக கேரளா மற்றும் தமிழக வனத்துறையினரிடம் முன் அனுமதி பெற்று வேண்டிய உணவு வகைகளை சேர்த்து வைத்துக் கொண்டு மலை மீது ஏறி அகத்தியர் ஆசிரமத்திற்கு சென்று வருகின்றனர்.
 
மிகவும் பரபரப்பாக பேசப்படும் இந்த பாதயாத்திரை யில் கலந்து கொள்ள நெல்லை தூத்துக்குடி மாவட்ட மக்கள் விறுவிறுப்பாக தங்கள் பெயரை பதிந்து பாத யாத்திரை சென்று வருகிறார்கள்.
 
அட்டை
 
உயிரினத்தில் அட்டை என்ற உயிரினம் மிகவும் மோசமானது. ஒரு அட்டை ஒரு மனிதனின் காலை கடித்து விட்டால் இரத்தத்தை முழுவதும் உறிஞ்சி விட்டுத்தான் அந்த மனிதரை விடும். இதற்கிடையில் அட்டையை பிடுங்க நினைத்தாலோ அல்லது நசுக்க நினைத்தாலே அது நம்மை விடாது. காலை வெட்டி தான் எடுக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு பயங்கரமான உயிரினம்.
 
இந்த பாத யாத்திரை செல்லும் வழியில் உள்ளது. இந்த அட்டையிடம் இருந்து தப்பிக்க உப்பு போட்டு தடவிக் கொண்டு நடப்பார்கள். இந்த நடைப்பயணம் மிகவும் பயங்கரமாக இருக்குமாம். திடீரென்று காட்டு மிருகங்கள், பாம்புகள் போன்ற விஷ கிருமிகள் பாத யாத்திரை குழுவினரை வழிமறித்து விடுமாம்.
 
அதையும் தாண்டி தான் பாதயாத்திரை செல்ல வேண்டும். அப்படி சென்று வந்தவர்கள் தனது வாழ்வில் பெறாத பேறு பெற்றவர்கள் ஆவார்கள். ஒரு மனிதம் அகத்தியர் மலைக்கு சென்று வந்தால் அவனுக்கு மனரிதியாக நோய் தீர்ந்து வாழ்வில் கிடைக்கதா பேரின்பம் கிடைக்கிறது


Favorite tags



Tirunelveli Business Directory