» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாஜக முதல் பட்டியல் வேட்பாளர்கள் வெளியீடு : வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி!

ஞாயிறு 3, மார்ச் 2024 10:14:03 AM (IST)

நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. பிரதமர் மோடி, வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். 

தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி, தொகுதி பங்கீடுகளை செய்து வருகிறது. ஆம் ஆத்மி உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது. நாடாளுமன்ற தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளநிலையில், மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சியும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தொடர்பாக கடந்த 29-ந்தேதி இரவு விடிய விடிய ஆலோசனை நடத்தியது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சி தலைவர் நட்டா உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் கலந்துகொண்டனர். இதையடுத்து பா.ஜனதா கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் எந்த நேரமும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், முதல் கட்டமாக 195 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை, கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே மற்றும் மூத்த தலைவர்கள் பைஜயந்த் ஜெய் பாண்டா, அனில் பலுனி ஆகியோர் டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை வெளியிட்டனர்.

இந்த முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 195 தொகுதிகள் இடம் பெற்று இருந்தன. மேலும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்று இருந்தது. அதன்படி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் மாநிலம் காந்தி நகரிலும், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் லக்னோவிலும், ஸ்மிரிதி இரானி அமேதியிலும் போட்டியிடுகிறார்கள்.

மத்திய அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்திலும், முரளிதன் ஆற்றின்கல் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கோட்டா தொகுதியில் போட்டியிடுகிறார். இதேபோல் நடிகை ஹேமமாலினி மதுராவிலும், நடிகர் சுரேஷ்கோபி திரிச்சூரிலும், பாடகர் ரவிகிஷன் கோரக்பூரிலும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச முன்னாள் முதல்-அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் விதீஷா தொகுதியிலும், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜ் டெல்லியிலும், கேரள முன்னாள் முதல்-அமைச்சர் மகன் ஏ.கே.ஆண்டனி மகன் அனில் ஆண்டனி பத்தினம்திட்டா தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட, தற்போது மத்திய அமைச்சர்களாக இருக்கும் 34 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல் 2 முன்னாள் முதல்-அமைச்சர்களும், 28 பெண்களும், 57 தலித்துகளும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முதல் கட்ட பட்டியலில் இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 47 பேர் 50 வயதுக்குட்பட்டோராக உள்ளனர். சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜ் உள்பட 4 புதுமுகங்களும் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகம் இடம் பெறவில்லை

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 195 தொகுதிகளில் உத்தரபிரதேச மாநிலத்தில் 50 தொகுதிகளும், மேற்கு வங்காளத்தில் 20 தொகுதிகளும், தெலுங்கானாவில் 9 தொகுதிகளும், குஜராத் மாநிலத்தில் 15 தொகுதிகளும், மத்திய பிரதேசம் 24 தொகுதிகளும், ராஜஸ்தானில் 15 தொகுதிகளும், கேரளா மாநிலத்தில் 12 தொகுதிகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 11 தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன. முதல் கட்ட பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த தொகுதிகள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று வெளியான பட்டியலில் தமிழகம் இடம் பெறவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory