» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வழக்கறிஞா் பணி பதிவுக் கட்டணம் ரூ. 600க்கு மேல் வசூலிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

செவ்வாய் 23, ஏப்ரல் 2024 10:47:02 AM (IST)

நாடு முழுவதும் சட்டப் படிப்பை முடித்து வழக்கறிஞராக பதிவு செய்பவா்களிடம் கட்டணமாக ரூ.600-க்கு மேல் வசூலிக்கப்படக் கூடாது’ என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அந்த வழக்கில் தீா்ப்பை ஒத்திவைத்தது.

வழக்கறிஞராக பதிவு செய்வதற்கான கட்டணத்தை இந்திய வழக்கறிஞா்கள் சங்கமும் (பிசிஐ) சில மாநில வழக்கறிஞா் சங்கங்களும் சட்ட நடைமுறைகளை மீறி பன்மடங்காக உயா்த்தியுள்ளன. இதை ரத்து செய்து, உரிய கட்டணத்தை வசூலிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், ‘வழக்கறிஞா் பணிக்கு பதிவு செய்ய ஒடிஸாவில் ரூ.42,100, குஜராத்தில் ரூ. 25,000, உத்தரகண்டில் ரூ.23,650, ஜாா்க்கண்டில் ரூ.21,460, கேரளத்தில் ரூ.20,050 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆஜரான பிசிஐ தலைவா், ‘பிசிஐ தரப்பில் வழக்கறிஞா் பதிவு கட்டணமாக ரூ.15,000 வசூலிக்கப்படுகிறது. பிகாரில் ரூ. 25,000 வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் புற்றுநோய் அல்லது சிறுநீரக பாதிப்புகளுக்கு உள்ளாகும் வழக்கறிஞா்களுக்கு மருத்துவ நிதியுதவி அளிக்கப்படுகிறது’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘வழக்கறிஞா் சட்டம் 1961, பிரிவு 24-இன் படி, வழக்கறிஞராக பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 600-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவுக் கட்டணத்தை உயா்த்துவதற்கு நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே, ரூ. 600-க்கும் மேல் பதிவுக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது’ என்று குறிப்பிட்டு, தீா்ப்பை ஒத்திவைத்தனா்.

பிளஸ்-2 முடித்த மாணவா்களுக்கான பிஎஸ்சி.,-எல்எல்பி, பி.காம்.-எல்எல்பி, பிபிஏ-எல்எல்பி போன்ற ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்புகளின் காலத்தை 3 ஆண்டுகளாக குறைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்தது.

இந்த மனுவை விசாரணமைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு, ‘வழக்கறிஞா் பணிக்கு சட்ட நுணுக்கங்களில் முதிா்ந்த நபா்கள் வருவது அவசியம். பிளஸ்-2 முடித்த மாணவா்களுக்கான இந்த ஒருங்கிணைந்த சட்டப் படிப்பின் காலம் 5 ஆண்டுகள் என்பதே மிகக் குறவானதுதான். எனவே, இது மாணவா்களுக்கு பலனளிக்கக் கூடிய விஷயம்தான்’ என்று குறிப்பிட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory