» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியா இனவெறி நாடா.... பைடனின் கருத்துக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில்

சனி 4, மே 2024 5:33:04 PM (IST)

‘இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகாமாகி விட்டது’ என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கருத்தை மறுத்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், "இந்தியச் சமூகம் எப்போதும் பிற சமூக மக்களுக்கு கதவைத் திறந்தே வைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பேட்டி "முதலில் இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா எப்போதுமே ஒரு தனித்துவமான நாடு. உலக வரலாற்றிலேயே பல்வேறு சமூகங்களை இந்தியா திறந்த மனதுடன் வரவேற்றிருக்கிறது. பல்வேறு சமூகங்களில் உள்ள பல்வேறு மக்களும் இந்தியா வந்துள்ளனர். அதனால்தான் எங்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளது. இதன்மூலம் சிக்கலில் உள்ள மக்களுக்கு இந்தியாவின் கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வருவதற்கு தேவை உள்ளவர்களுக்கும், இந்தியாவுக்கு வர வேண்டும் எனக் கூறுபவர்களுக்கு இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டம் வரவேற்கத் தயாராக இருப்பதாகவே நான் கருதுகிறேன். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் நாட்டில் முஸ்லிம்கள் தங்களின் குடியுரிமையை இழந்து விடுவார்கள் என பலர் வெளிப்படையாக கருத்துகளை பதிவுசெய்திருக்கிறார்கள். அவர்கள் ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஏனென்றால் சிஏஏ-வால் யாரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள்" என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பல்கலைக்கழக வளாகத்தில் இஸ்ரேலுக்கு எதிராக நடக்கும் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த ஜெய்சங்கர், "சில மேற்கத்திய ஊடகங்கள் தங்களின் ஒருதலைபட்சமான கருத்துகளுக்காக மேற்கொண்ட இந்தப் போராட்டம் கருத்தியல் ரீதியானதே தவிர, உள்நோக்கம் கொண்டது இல்லை என்று தெரிவிக்கின்றன. அந்த ஊடகங்கள் உலகின் கதையைத் தீர்மானிக்க விரும்புகின்றன. மேலும், இந்தியாவைக் குறிவைக்கின்றன” என்றார்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளை குறிவைத்து இந்தியா தாக்குவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், "அங்கு தீவிரவாதிகள் அதிக அளவில் இருக்கிறார்கள். எங்கு தீவிரவாதிகள் அதிகம் இருக்கிறார்களோ, அங்கு அவர்கள் கொல்லப்படுவது நிகழ்கிறது” என்றார்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிடும் ஜோ பைடன் வாஷிங்டன்னில் நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார் அப்போது அவர், "சீனா ஏன் பொருளாதாரத்தில் மோசமடைந்துள்ளது. ஜப்பானும், ரஷ்யாவும், இந்தியாவும் ஏன் பொருளாதாரத்தில் தடுமாறுகிறார்கள். ஏனென்றால், அவர்கள் இனவெறி கொண்டவர்கள். அவர்களிடம் அந்நிய வெறுப்பு அதிகமாகியுள்ளது.

மேலும், அவர்கள் புலம்பெயர்ந்தவர்களை விரும்புவதில்லை. ஆனால், அமெரிக்காவை புலம்பெயர்ந்தோர்தான் எங்களை வலிமையாக்குகிறார்கள். புலம்பெயர்ந்தவர்களை அமெரிக்கா வரவேற்கிறது. அதனால், அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கு காரணம் அவர்கள் காரணமாக உள்ளார்கள். ஆனால், சீனா, ஜப்பான், ரஷ்யா, இந்தியா நாடுகளில் உள்ள அந்நிய வெறுப்பு அவர்களின் பொருளாதாரத்தை பாதிக்கிறது" என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ஜோ பைடன் தனது அனைத்து கூட்டாளி நாடுகள் மீதும் மரியாதை வைத்திருப்பதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியரி கூறுகையில், "அதிபரின் கருத்து, புலம்பெயர்ந்த மக்களிடம் இருந்து அமெரிக்கா பெற்றிருக்கும் வலிமையை வலியுறுத்தும் கருத்தின் ஒரு பகுதியாகும். வெளிப்படையாக இந்தியா மற்றும் ஜப்பானுடன் நாங்கள் வலிமையான உறவு கொண்டுள்ளோம். கடந்த மூன்று ஆண்டுகளில் அந்த நாடுகளுடன் அரசியல் ரீதியிலான உறவுகளில் அதிபர் அதிக கவனம் செலுத்தி இருப்பது தெரியவரும்" என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory