» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் கைது!

செவ்வாய் 11, நவம்பர் 2025 8:45:24 AM (IST)



பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் 3 ஆயிரம் கிலோ வெடிபொருட்களும் ஏராளமான ஆயுதங்களும், பறிமுதல் செய்யப்பட்டன.

காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள பன்போரா நவ்காம் பகுதியில் கடந்த மாதம் 19-ந் தேதி, பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ முகமதுக்கு ஆதரவான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. இதுகுறித்து பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், பாரதீய நியாய சன்ஹிதா, ஆயுதங்கள் சட்டம், வெடிபொருட்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ், நவ்காம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது, அன்சார் காஸ்வத் உல் ஹிந்த் பயங்கரவாத இயக்கங்களின் பிரமுகர்களுடன், இந்தியாவை சேர்ந்த நன்கு படித்து பணியில் உள்ளவர்களும், மாணவர்களும் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.

அவர்கள் ரகசியமாக தொடர்பு கொள்வது, நிதி திரட்டுவது, பொருட்களை அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். பயங்கரவாத செயல்களுக்கு ஆட்களை அடையாளம் காணுதல், அவர்களுக்கு மூளைச்சலவை செய்து, இயக்கத்தில் சேர்த்தல், ஆயுதங்கள், வெடிபொருட்களை கொள்முதல் செய்தல், வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வாங்குதல் போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சமூக, தொண்டு என்ற பெயரில் நிதி திரட்டியும் வந்துள்ளனர். 15 நாட்களாக நடந்த வேட்டைக்கு பிறகு, 8 பேரை காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில், காஷ்மீரை சேர்ந்த டாக்டர் முசாம்மில் அகமதுவும் ஒருவர். ஸ்ரீநகரில் சுவரொட்டி ஒட்டியது தொடர்பாக அவரை ஏற்கனவே போலீசார் தேடிவந்தனர். அவர் பரிதாபாத்தில் உள்ள அல் பலஹா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

அவர் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் ஒரு வாடகை வீட்டில் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, அந்த வீட்டை பரிதாபாத் போலீசாரும், காஷ்மீர் போலீசாரும் இணைந்து முற்றுகையிட்டனர். அங்கிருந்த முசாம்மில் அகமது கைது செய்யப்பட்டார். வீட்டில் சோதனையிட்டபோது, 360 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் சிக்கின. அவை ஆர்.டி.எக்ஸ். அல்ல என்றும், அம்மோனியம் நைட்ரேட்டாக இருக்கலாம் என்றும் போலீஸ் கமிஷனர் சதேந்தர் குமார் குப்தா தெரிவித்தார்.

துப்பாக்கிகள், தோட்டாக்கள், ரசாயனங்கள், 20 டைமர்கள், பேட்டரியுடன் கூடிய 5 டைமர்கள், 14 பைகள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன. காஷ்மீரின் குல்காமை சேர்ந்த மற்றொரு டாக்டர் அதீல், ஒரு மசூதியின் இமாம் இர்பான் அகமது, ஆரிப் நிசார் டார், யாசிர் உல் அஷ்ரப், மக்சூத் அகமது டார், ஜமீர் அகமது அஹங்கர் ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

ஸ்ரீநகர், அனந்தநாக், கந்தர்பால், சோபியான் மாவட்டங்களில் நடந்த சோதனையில், சீன கைத்துப்பாக்கி, ஏ.கே.56 ரக துப்பாக்கி, ஏ.கே.கிரின்கோவ் துப்பாக்கி, வெடிகுண்டு தயாரிப்பதற்கான 2,900 கிலோ மூலப்பொருட்கள், ரசாயனங்கள், எலக்ட்ரானிக் சர்க்யூட்கள், பேட்டரிகள், ஒயர்கள், ரிமோட் கண்ட்ரோல், ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. மொத்தத்தில் இந்த வேட்டையில் 3 ஆயிரம் கிலோ வெடி பொருட்கள் மற்றும் ஏராளமான ஆயுதங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

பெண் டாக்டர் கைது

இதேபோல், பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த ஒரு பெண் டாக்டரையும் காஷ்மீர் போலீசார் கைது செய்தனர்.அவர் பெயர் ஷாஹீன். அவரது காரில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்காக அவர் விமானம் மூலம் ஸ்ரீநகருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இத்தகவல்களை ஸ்ரீநகரில் காஷ்மீர் போலீஸ் செய்தித்தொடர்பாளர் நிருபர்களிடம் தெரிவித்தார். கைதான 8 பேரும் எந்த நாளில் கைது செய்யப்பட்டனர் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. அவர்களின் சதித்திட்டம் என்ன என்பதையும் வெளியிடவில்லை. பெண் டாக்டரை தவிர, மற்ற 7 பேரும் காஷ்மீரை சேர்ந்தவர்கள்.

சதி முறியடிப்பு

டாக்டர்கள் முசாம்மில், அதீல் ஆகியோரின் செல்போன்களில் ஏராளமான பாகிஸ்தான் எண்கள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவை அவர்களை கையாண்டவர்களின் எண்களாக இருக்கலாம் என்றும் கூறினர். மேலும் சிலரின் தொடர்பும் தெரிய வந்துள்ளது. நிதி வசூல் பற்றியும் விசாரணை நடக்கிறது.

காஷ்மீர், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் நடந்த வேட்டையில் அந்தந்த மாநில போலீசாருடன் மத்திய அரசு அமைப்புகளும் இணைந்து பங்கேற்றன. கைது நடவடிக்கை மூலம் பயங்கரவாத இயக்கங்களின் சதித்திட்டம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory