» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மசூதிகளுக்கு பெண்கள் செல்ல தடையில்லை: முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தகவல்!
சனி 25, ஏப்ரல் 2026 11:01:50 AM (IST)

முஸ்லிம் பெண்கள் தொழுகைக்காக மசூதிகளுக்குச் செல்வதற்குத் தடையில்லை. அதேநேரத்தில், முஸ்லிம் பெண்கள் பிரதான வாசல் வழியாக நுழைவதற்கோ அல்லது ஆண்களுடன் எவ்விதத் தடுப்பும் இன்றி ஒன்றாக அமர்ந்து தொழுகை நடத்துவதற்கோ உரிமை கோர முடியாது என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற 2018-ம் ஆண்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுக்களை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த விசாரணையின் போது, ‘‘உண்மைத் தன்மையைத் தெளிவுபடுத்திக் கொள்ளக் கேட்கிறோம். மசூதிக்குள் முஸ்லிம் பெண்கள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்களா?’’ என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் கேட்டார்.
அப்போது, தலைமை நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த முஸ்லிம் தனிநபர் வாரியத்தின் மூத்த வழக்கறிஞர் எம்.ஆர்.ஷம்ஷாத் கூறியதாவது: முஸ்லிம் பெண்கள் மசூதிக்குள் நுழைவதில் இஸ்லாமியப் பிரிவினரிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால், அங்கு பின்பற்றப்பட வேண்டிய சில ஒழுங்குமுறைகள், விதிகள் உள்ளன.
முஸ்லிம் பெண்கள் மசூதிக்குள் நுழையலாம் என்றாலும், ஆண்கள் செல்லும் பிரதான வாசல் வழியாகவே நுழைய வேண்டும் என்றோ, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே தடுப்பு இருக்கக் கூடாது என்றோ கட்டாயப்படுத்த முடியாது.
ஆண்கள் மசூதிக்குச் சென்று தொழுவது கடமையாக்கப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம் பெண்களுக்கு வீட்டில் இருந்து தொழுவதே சிறந்தது என்று கூறப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், ஆண்கள் தொழுகை நடத்தச் செல்லும் போது குழந்தைகளைப் பராமரிக்க பெண்கள் வீட்டில் இருக்க வேண்டிய தேவை இருக்கலாம் என்பதாகும்.
‘‘பெண்கள் மசூதிக்கு வருவதைத் தடுக்க வேண்டாம்’’ என்று இறை தூதர் முகமது நபியே கூறியுள்ளார். பெண்கள் மசூதிக்கு வந்தால் அவர்களுக்கு உரிய அனுமதி வழங்கப்பட வேண்டும், ஆனால் பாரம்பரிய நடைமுறைகள் மதிக்கப்பட வேண்டும். இவ்வாறு வழக்கறிஞர் ஷம்ஷாத் தெரிவித்தார்.
மசூதிகளில் பெண்கள் நுழைய அனுமதி கோரி புனேவைச் சேர்ந்த யாஸ்மின் ஜுபெர் அகமது பீர்ஜாடே, அவரது கணவர் ஜுபெர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவின் மீதும் இந்த விசாரணையின் முடிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா கூறும்போது, ‘‘பெண்கள் மசூதிக்குள் நுழைவது என்பது ஆரம்பத்திலிருந்தே, அதாவது முகமது நபியின் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள ஒன்றாகும். வீட்டுப் பொறுப்புகள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு கருதியே பெண்களுக்கு அது கட்டாயமாக்கப்படவில்லை’’ என்றார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த அரசியல் சாசன அமர்வில் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, எம்.எம்.சுந்தரேஷ், அஹ்சானுதீன் அமானுல்லா, அரவிந்த் குமார், அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ், பிரசன்னா பி. வரலே, ஆர். மகாதேவன், ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை அடுத்த வாரம் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அக்சய் குமார் மகளுக்கு ஆன்லைன் கேமில் பாலியல் தொல்லை: மர்ம ஆசாமி கைது!
சனி 25, ஏப்ரல் 2026 5:35:24 PM (IST)

யமுனையில் படகு சவாரி செய்ய உங்களுக்கு இருக்கிறதா? பிரதமருக்கு மமதா சவால்!
சனி 25, ஏப்ரல் 2026 3:58:40 PM (IST)

நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு: நாடு முழுவதும் 28 லட்சம் பேர் எழுதுகிறார்கள்!
சனி 25, ஏப்ரல் 2026 12:41:13 PM (IST)

பீகாரில் முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!
சனி 25, ஏப்ரல் 2026 10:49:21 AM (IST)

சபரிமலை சன்னிதானம் மீது தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டர்: கடலோர காவல் படை விளக்கம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:49:17 PM (IST)

ஆந்திராவில் ஒரே குடும்பத்தில் 5 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:09:32 PM (IST)

