» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எத்தனால் கலந்த பெட்ரோலால் இன்ஜின் சேதமடையாது : நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

வியாழன் 30, ஜூலை 2026 4:32:44 PM (IST)

20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலைப் (E20) பயன்படுத்துவதால் வாகனங்களின் இன்ஜின் சேதமடையும் என்றோ அல்லது மைலேஜ் குறையும் என்றோ எந்தவொரு அறிவியல் ஆய்வாலும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.

மாநிலங்களவையில் இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அளித்த எழுத்துப்பூர்வமான பதில் விவரம்: 20% எத்தனால் கலந்த பெட்ரோலை படிப்படியாக அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக, வாகனங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படுகிறதா என்பது குறித்து விரிவான அறிவியல் ஆய்வுகள், களச் சோதனைகள் மற்றும் நிபுணர் அமைப்புகளுடனான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL), டேராடூனில் உள்ள இந்திய பெட்ரோலிய நிறுவனம் (IIP), இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) மற்றும் இந்திய ஆட்டோமோட்டிவ் ஆராய்ச்சி சங்கம் (ARAI) ஆகியவை இணைந்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் இந்த எரிபொருளின் தாக்கம் குறித்து விரிவான சோதனைகளை நடத்தின.

இன்ஜின் மாற்றம் தேவையில்லை: E20 பெட்ரோலைப் பயன்படுத்தக் கார்கள் அல்லது இருசக்கர வாகனங்களின் இன்ஜின்களை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. பழைய வாகனங்களில் கூட செயல்திறனில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

சிறிய பாகங்கள் மாற்றம்: 2005 ஏப்ரல் 1 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு, 2016-க்கு முன்னர் தயாரிக்கப்பட்ட சில பழைய வாகனங்களில் ரப்பர் பாகங்கள் மற்றும் கேஸ்கெட்டுகளை (Gaskets) மட்டும் மாற்ற வேண்டியிருக்கலாம். வழக்கமான வாகனப் பராமரிப்பின் போதே இவற்றை மிக எளிதாகச் சரிசெய்துவிட முடியும்.

மைலேஜ் குறைவு தொடர்பான விளக்கம்:

20% எத்தனால் கலந்த பெட்ரோலால் இன்ஜின் பாதிப்போ அல்லது மைலேஜ் குறைவோ ஏற்படுவதாக எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லை. வாகனத்தின் மைலேஜ் குறைவதற்கு எரிபொருள் மட்டுமன்றி வேறு பல காரணிகளும் அடிப்படையாக அமைகின்றன என்று வாகன உற்பத்தியாளர்களும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

எனவே நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பது முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory