» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காவல் நிலையத்தில் ராகுல், பிரியங்கா தர்ணா: டெல்லியில் பெரும் பரபரப்பு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 4:36:39 PM (IST)

பாராளுமன்ற வீதி காவல் நிலையத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான 'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் போது (ஜூலை 21) நாடாளுமன்றத்தை முற்றுகையிடப் போராட்டக்காரர்களும் திரளான மாணவர்களும் முயன்றனர். அப்போது அவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் வெடித்து வன்முறையாக மாறியது.
பதற்றத்தைத் தணிக்கப் போலீசார் நடத்திய தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு மற்றும் பெல்லட் குண்டு சூட்டில் மாணவர்கள் சிலர் காயமடைந்தனர். அதேபோலப் போராட்டக்காரர்கள் நடத்திய கல்வீச்சில் போலீசாரும் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், நீட் போராட்டத்தின் போது இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட அத்துமீறல் மற்றும் தாக்குதல் குறித்துப் புகார் அளிப்பதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று பார்லிமென்ட் வீதி காவல் நிலையத்திற்கு வருகை தந்தார். போராட்டத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவரைத் தன்னுடனே அழைத்து வந்த ராகுல் காந்தி, காவல்துறையினரிடம் புகார் மனுவை அளித்தார்.
அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு (FIR) செய்ய வேண்டும் என வலியுறுத்தி, காவல் நிலையத்திற்குள்ளேயே ராகுல் காந்தி திடீரெனத் தர்ணா போராட்டத்தில் அமர்ந்தார். ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி மற்றும் முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் தர்ணா போராட்டத்தில் களமிறங்கினர்.
பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ராகுல் தர்ணாவில் ஈடுபட்டதைத் தொடர்ந்து திரளான காங்கிரஸ் தொண்டர்கள் காவல் நிலையத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றனர். அவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தினர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க பார்லிமென்ட் தெரு காவல் நிலையத்திற்கு வெளியே பெருமளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட தமிழக அரசே இடத்தை தீர்மானிக்கட்டும்! - கேரள முதல்வர்
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:56:07 PM (IST)

கிணற்றில் கார் பாய்ந்து தம்பதி, 2 குழந்தைகள் உயிரிழப்பு: தெலுங்கானாவில் சோகம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:22:33 PM (IST)

கேஒய்சி புதுப்பித்தல் பெயரில் அதிகரிக்கும் சைபர் மோசடி: வாடிக்கையாளர்களுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:58:31 PM (IST)

அரசு ஊழியர்களுக்கு அசாம் அரசு அதிரடி செக் : 2-வது திருமணம் செய்தால் சம்பளத்தில் 20% கட்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 4:41:44 PM (IST)

எங்களது உள்விவகாரத்தில் தமிழக தலைவர்கள் தலையிடக் கூடாது! — கர்நாடக அமைச்சர்
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 4:14:32 PM (IST)

காவிரி வழக்கு: தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 8:38:13 AM (IST)


