» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஹாவர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை: ட்ரம்ப் உத்தரவுக்கு இடைக்கால தடை!
சனி 24, மே 2025 11:03:05 AM (IST)

ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த ட்ரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் புகழ்பெற்ற ஹாவர்டு பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் மாணவர்களும் உயர்கல்வி பயில்கின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ஏற்க மறுத்ததால் ஹாவர்டு பல்கலைக்கழகத்துக்கான 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் மானியங்களையும் 60 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்தது.
மேலும், ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு தடை விதித்தும் அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அங்கு பயிலும் 800-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களின் நிலை கேள்விக்குறியானது.
ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான போராட்டம், இனப் பாகுபாடு எதிர்ப்பு போன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மேலும், அங்கு பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் தகவல்களை வழங்குமாறு ட்ரம்ப் அரசு கூறியதற்கு, பல்கலைக்கழகம் மறுத்துவிட்டது.
இதைத் தொடர்ந்தே, அந்தப் பல்கலைக்கழகத்துக்கு சென்று கொண்டிருந்த அரசின் மானியத்தை நிறுத்தியுள்ளது ட்ரம்ப் அரசு. தற்போது ஹாவர்டில் தங்கி பயின்று வரும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் வெளியேறுவதற்கு 72 மணி நேர காலக்கெடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க எதிர்ப்பு, தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்து வளாகத்தில் யூத மாணவர்களைத் தாக்க அனுமதிப்பதன் மூலம் ஹாவர்டு பல்கலைக்கழகம் பாதுகாப்பற்ற வளாகமாக உருவாகியிருப்பதாகவும் அமெரிக்க உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்தே இந்த வெளிநாட்டு மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் சேர தடையை ட்ரம்ப் அரசு விதித்தது.
இந்த பல்கலைக்கழகத்தில், இந்த செமஸ்டரோடு படிப்பை முடிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அந்தக் காலக்கட்டத்துக்குப் பிறகும் பயில வேண்டிய மாணவர்கள் கட்டாயம் வேறு கல்வி நிறுவனங்களுக்கு மாற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால், அவர்கள் அமெரிக்காவில் தங்கி படிக்கும் உரிமையை இழப்பார்கள் என்றும் ட்ரம்ப் அரசு எச்சரிக்கை விடுத்தது.
மேலும், இந்த ஆண்டு புதிய மாணவர்கள் ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் வந்து சேர முடியாதவாறு, வெளிநாட்டு மாணவர்கள் சேரும் பல்கலைக்கழகப் பட்டியலில் இருந்தும் அந்தப் பல்கலைக்கழகத்தின் பெயரை அமெரிக்க அரசு நீக்கியது. ஒருவேளை, அரசின் சட்டத் திட்டத்துக்கு அடுத்த 72 மணிநேரத்திற்குள், ஹாவர்டு பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டால், அது முன்பு போலவே இயங்கலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு ட்ரம்ப் நிர்வாகம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியது ஹாவர்டு பல்கலைக்கழக நிர்வாகம். இது சட்ட மீறல் நடவடிக்கை என நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து அமெரிக்க நீதிமன்றம் ட்ரம்ப் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை பிறப்பித்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்கா முடிவுக்கு ஜெய்சங்கர் கருத்து!
வியாழன் 3, ஜூலை 2025 5:48:03 PM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு!
புதன் 2, ஜூலை 2025 5:14:15 PM (IST)

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)

ராணுவ தளபதியை விமர்சித்த தாய்லாந்து பிரதமர் சஸ்பெண்ட்: அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடி
புதன் 2, ஜூலை 2025 8:33:27 AM (IST)

எல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: சீனா அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:41:09 PM (IST)

கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் செல்ல நேரிடும்: எலான் மஸ்க்குக்கு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:35:48 PM (IST)
