» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சிந்து நதிநீர் உரிமைகளைப் பறிப்பவர்கள் கைகள் வெட்டப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்கள் மிரட்டல்!

செவ்வாய் 30, ஜூன் 2026 11:52:09 AM (IST)



சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ள சூழலில், தங்களது நதிநீர் பங்கீட்டு உரிமைகளுக்கு ஆபத்து விளைவிப்பவர்களின் கைகள் வெட்டப்படும் என்று பாகிஸ்தான் அமைச்சர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். 

கடந்த 2025 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. மேலும், சிந்துவின் கிளை நதியான செனாப் நதியின் குறுக்கே அணை கட்டும் பணிகளையும் இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. 

சிந்து மற்றும் அதன் கிளை நதிகளின் நீரை நம்பியே பாகிஸ்தானின் பெரும்பாலான விவசாயம் மற்றும் உள்நாட்டுத் தேவைகள் உள்ளதால், இந்தியாவின் இந்த நடவடிக்கை ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான் தரப்பில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு முன்னதாகப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், நதிநீர் முழுமையாக நிறுத்தப்பட்டால் இந்தியா மீது போர் தொடுக்க நேரிடும் என எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் முசாதிக் மாலிக் ஆகியோர் நேற்று இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய காலநிலை மாற்றத்துறை அமைச்சர் முசாதிக் மாலிக், "பாகிஸ்தானுக்கான நதிநீர் விநியோகத்தை இந்தியப் பிரதமர் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

பாகிஸ்தானுக்குத் தண்ணீர் விடப்போவதில்லை எனக் கூறும் நிலையில், எங்களது நதிநீர் உரிமைகளுக்கு ஆபத்து விளைவித்து, எங்கள் பங்கையும் எடுத்துக்கொள்பவர்களின் கைகளை நாங்கள் வெட்டுவோம்" எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார், "கடந்த 1960 ஆம் ஆண்டு உலக வங்கியின் மத்தியஸ்தத்துடன் கையெழுத்தான இந்த சிந்து நதிநீர் ஒப்பந்தம், சர்வதேச சட்டங்களின்படி இன்னும் செல்லுபடியில் தான் உள்ளது. இதனை நிறுத்தவோ அல்லது தன்னிச்சையாக மாற்றியமைக்கவோ இந்தியா எடுத்த முடிவிற்கு சர்வதேச அரங்கில் எவ்வித ஆதரவும் கிடைக்கவில்லை" என்று தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் தங்களின் சட்டப்பூர்வ உரிமைகளைச் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துரைக்கும் பொருட்டு, உலகளாவிய நதிநீர் நிபுணர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு ஒன்றை இஸ்லாமாபாத்தில் நடத்த பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory