» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தோனேசியாவில் ஐஐஎம் பெங்களூரு சர்வதேச வளாகம்: ஜகார்த்தாவில் பிரதமர் மோடி அறிவிப்பு!

புதன் 8, ஜூலை 2026 10:23:55 AM (IST)

INdonasiaPmodi.jpg

இந்தியக் கல்வியை உலகளாவிய ரீதியில் கொண்டு செல்லும் முக்கிய முயற்சியாக, இந்தோனேசியாவில் ஐஐஎம் பெங்களூரு கல்வி நிறுவனத்தின் முதல் சர்வதேச வளாகம் அமைக்கப்படும் என்று அந்நாட்டுத் தலைநகர் ஜகார்த்தாவில் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது ஆசியான் பிராந்திய மாணவர்களுக்குப் பெரிதும் உதவும். 

இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக இந்தோனேசியா சென்ற பிரதமரை ஜகார்த்தா விமான நிலையத்தில் அதிபர் பிரபோவோ சுபியந்தோ நேரில் கட்டியணைத்து வரவேற்றார்; தொடர்ந்து முப்படை அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. மெர்டேகா மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளில் இது ஒரு புதிய பொற்காலம் என்று பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். 

பாதுகாப்புத் துறையின் மிகப்பெரிய மைல்கல்லாக, இந்திய - ரஷ்ய கூட்டு தயாரிப்பான ‘பிரம்மோஸ்’ க்ரூஸ் ஏவுகணைகள், இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான ‘அஸ்ட்ரா’ வான்வழி ஏவுகணைகளை இந்தோனேசியாவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸைத் தொடர்ந்து பிரம்மோஸ் ஏவுகணையைப் பெறும் 2-வது ஆசியான் நாடு இந்தோனேசியா ஆகும். 

செயற்கை நுண்ணறிவு (ஏஐ), தொலைத்தொடர்பு, ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல், டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. பணப் பரிவர்த்தனையை எளிதாக்க இந்தியாவின் ‘யுபிஐ’ கட்டண முறை, இந்தோனேசியாவின் கட்டண முறையுடன் இணைக்கப்பட உள்ளது. விண்வெளித் துறையில் கூட்டு ஆராய்ச்சி பலப்படுத்தப்படும். 

இந்தியாவின் ‘செயில்’ நிறுவனம், இந்தோனேசியாவின் ‘பிடி கிரகடாவ் ஸ்டீல்’ நிறுவனம் இணைந்து உருக்கு உற்பத்திப் புதிய ஆலையை இந்தோனேசியாவில் அமைக்கவுள்ளன. விநியோகச் சங்கிலியைப் பலப்படுத்த முக்கியத் தாதுக்கள், அரியவகை காந்தங்கள் தயாரிப்பிலும் இரு நாடுகளும் கைகோத்துள்ளன. இந்தியாவின் மதிய உணவு மற்றும் பொது விநியோகத் திட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதுடன், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட உயர்தர கோதுமை விதைகள் இந்தோனேசியாவுக்கு வழங்கப்பட உள்ளன. 

பிரதமருக்கு உயரிய விருது: 

பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தோனேசியாவின் உயரிய ‘பிந்தாங் அதிபூர்ணா’ விருதை அதிபர் பிரபோவோ சுபியந்தோ வழங்கி கௌரவித்தார். இந்தோனேசியக் குடியரசின் ஒற்றுமை, செழுமைக்காகச் சிறந்த முறையில் சேவையாற்றிய தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இவ்விருதை இதற்கு முன் ஃபிடல் காஸ்ட்ரோ, ஜவஹர்லால் நேரு, நெல்சன் மண்டேலா ஆகியோர் பெற்றுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory