» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வெறும் கம்பமாக நிற்கும் செக்போஸ்ட் சிசிடிவி : ஆவணங்களின்றிப் பறக்கும் லாரிகள்!

சனி 13, ஜூன் 2026 9:21:41 PM (IST)



திருநெல்வேலி - தூத்துக்குடி மாவட்ட எல்லைகையில் முடங்கியுள்ள சிசிடிவி கேமராக்களை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி - தூத்துக்குடி மாவட்ட எல்லையான வசவப்பபுரம் காவல் எல்லை சோதனைச் சாவடியில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் முடங்கியுள்ளதாகவும், இதனைப் பயன்படுத்தி கனிம வளக் கடத்தல் மற்றும் பாதுகாப்பு விதிமீறல்கள் தடையின்றி நடைபெறுவதாகவும் சமூக ஆர்வலர் சுகன் கிறிஸ்டோபர் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்குக் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

அந்தக் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கியக் குற்றச்சம்பவங்கள் மற்றும் கோரிக்கைகளின் விபரம் பின்வருமாறு: மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மிக முக்கியப் பாதுகாப்பு அரணான வசவப்பபுரம் சோதனைச் சாவடியில், 24 மணி நேரக் கண்காணிப்பிற்குத் தேவையான சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்தப்படவில்லை. ஒரு சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களும் தற்பொழுது செயல்பாட்டில் இல்லை. மற்றொரு பகுதியில் கேமராக்கள் ஏதுமின்றி வெறும் கம்பம் மட்டுமே நின்றுகொண்டிருக்கிறது. இதனால், அங்குப் பணியில் இருக்கும் காவலர்களின் நடவடிக்கைகள் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இன்றி ரகசியமாக நடைபெற்று வருகின்றன.

கேமராக்கள் முடக்கப்பட்டுள்ளதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அதிகப் பாரம் ஏற்றி வரும் கனிம வள லாரிகள், மணல், ஜல்லி, கல் மற்றும் பிற தாது வளங்களை ஏற்றி வரும் வாகனங்கள் பல நேரங்களில் முறையான அரசு அனுமதி ஆவணங்கள், போக்குவரத்துச் சீட்டுகள் (Roc-Slips) மற்றும் எடை வரம்பு ஆவணங்கள் எதுவுமின்றிக் கடந்து செல்கின்றன. இருப்பினும், இந்த வாகனங்களைச் சோதனைச் சாவடியில் இருக்கும் காவலர்கள் முறையாகச் சோதனை செய்வதில்லை என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

கனிம வளக் கடத்தல் மற்றும் விதிமீறல்களைத் தடுக்க வேண்டிய சோதனைச் சாவடி தனது அடிப்படை நோக்கத்தை நிறைவேற்றத் தவறுவதால், தமிழக அரசுக்குப் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, அதிகப் பாரம் கொண்ட லாரிகளால் சாலைகள் முற்றிலும் சேதமடையும் அபாயமும் அதிகரித்துள்ளது.

மேலும், இரவு நேரங்களில் இந்தச் சோதனைச் சாவடியில் பணியில் இருக்கும் சில காவலர்கள் தங்களது விழிப்புநிலைக் கண்காணிப்புப் பணியை முழுமையாக மேற்கொள்ளாமல் தூங்குவதாகவும், சந்தேகத்திற்குரிய வாகனங்களை நிறுத்திச் சோதனை செய்வதில் கடுமையான அலட்சியம் காட்டுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

கொலை, கொள்ளை, சட்டவிரோத கடத்தல் மற்றும் சமூக விரோத செயல்களைத் தடுக்க மிக முக்கிய இடமாக இருக்கும் மாவட்ட எல்லைச் சோதனைச் சாவடியில் இத்தகைய பாதுகாப்பு அலட்சியம் தொடர்வது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

வசவப்பபுரம் சோதனைச் சாவடியில் உயர் தரத்திலான சிசிடிவி (CCTV) கேமராக்களை 24 மணி நேரப் பதிவு வசதியுடன் உடனடியாகப் பொருத்த வேண்டும். அண்மைக் காலங்களில் அங்குப் பணியில் இருந்த காவலர்களின் வருகைப் பதிவேடு, பணிப் பதிவு மற்றும் வாகனச் சோதனைப் பதிவுகளை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

இரவு நேரங்களில் பணியில் இருக்கும் காவலர்களின் செயல்பாடுகள் மற்றும் விழிப்புநிலை குறித்துக் காவல் துறை உயர் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.கனிம வள வாகனங்கள் தொடர்பான சோதனைப் பதிவுகள், பறிமுதல் விவரங்கள் குறித்துத் தணிக்கை நடத்தி, அலட்சியம் அல்லது முறைகேடு உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிரந்தரக் கண்காணிப்பு முறை: மாவட்ட எல்லைச் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கும் வகையில், மாவட்டக் காவல் தலைமையகத்துடன் இணைக்கப்பட்ட நிரந்தரக் கண்காணிப்பு நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும். என கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory