» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் சாலை விரிவாக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 11:49:23 AM (IST)
நெல்லை - திருச்செந்தூர் நெடுஞ்சாலை விரிவாக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் விபி ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் நீண்டகால கோரிக்கையான பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைபாதை அமைக்கப்பட்டு வருவது பாராட்டுக்குரியது.
ஆண்டுதோறும் தைப்பொங்கல் மற்றும் தைப்பூசத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் சாலை வேலை நடைபெறுவதால் பல சிரமங்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது, பல பக்தர்களின் கால்களில் காயங்கள் ஏற்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.
தைப்பூச திருவிழாவிற்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் சாலை விரிவாக்க பணிகள் பெரும்பாலான இடங்களில் நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகளையும் துரிதமாக முடித்து திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் சிரமம் இன்றி சென்றுவர நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.