» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்ப்பு: ஆர்டிஐ தகவல்களை வெளியிட்டார் அண்ணாமலை!

திங்கள் 1, ஏப்ரல் 2024 8:20:57 AM (IST)

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்கு யாரெல்லாம் பொறுப்பு? என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்ற ஆவணங்களை அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடல் பகுதியில் உள்ள சிறிய தீவுதான் கச்சத்தீவு. சுமார் 285 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த தீவு ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தூரத்திலும், இலங்கை யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து 10½ மைல் தொலைவிலும் இருக்கிறது. கடந்த 1974-ம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.

தற்போது கச்சத்தீவு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதன்காரணமாக கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இதையடுத்து கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள், மீனவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். 

ஒவ்வொரு தேர்தலின் போதும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது யார்? என்பது தொடர்பான அரசியல் கட்சிகளின் பிரசாரம் எதிரொலிப்பது வழக்கம். அந்தவகையில் தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளது. தற்போது கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜனதா கையில் எடுத்துள்ளது.

அதாவது, கச்சத்தீவு தொடர்பாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சகம் தனக்கு அளித்த ஆவணங்களை அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அந்த ஆவணத்தில் கூறியிருப்பதாவது: 1875-ம் ஆண்டு முதல் 1948-ம் ஆண்டு கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னர் வசம் இருந்து வந்தது. கச்சத்தீவில் மீன்பிடி உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் மன்னர் கைவசமே இருந்தது. ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்ட போது சென்னை மாகாணத்தின் வசம் கச்சத்தீவு ஒப்படைக்கப்பட்டது.

1968-ம் ஆண்டு இலங்கை பிரதமர் டட்லி சேனா நாயக்கா, கச்சத்தீவை இலங்கைக்கு தருவது தொடர்பாக இந்திய பிரதமர் இந்திராகாந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 1969-ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது சம்பந்தமான பேச்சு எழுந்த போது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்திராகாந்தி இலங்கையுடன் நட்புடன் இருக்க விரும்பியதால் பேச்சுவார்த்தையை தொடர்ந்தார்.

1973-ம் ஆண்டு இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் அளவில் பேச்சுவார்த்தை நடந்தது. 1974-ம் ஆண்டு வெளியுறவுத்துறை செயலாளர் கேவல்சிங் மூலம் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது சம்பந்தமாக அப்போதைய தமிழக முதல்-அமைச்சருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கச்சத்தீவுக்கு உரிமை கொண்டாடி வருவதை நிரூபிக்க இலங்கை அரசு எந்த ஆதாரங்களையும் அளிக்கவில்லை என்றும் கேவல்சிங் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவை இலங்கை உரிமை கோரிய நிலையில் கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமானது என்பது தொடர்பாக தங்களிடம் உள்ள ஆவணங்களை தமிழக அரசு காட்டவில்லை. இறுதியாக 1974-ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு இந்திராகாந்தி தாரை வார்த்து கொடுத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory