» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

செவ்வாய் 23, ஏப்ரல் 2024 8:28:54 AM (IST)

6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ கோர்ட்டு அதிரடியாக தீர்ப்பளித்தது..

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஒரு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கடந்த 2015-ம் ஆண்டு முருகன் என்பவர் பணிபுரிந்தார். தற்போது அவருக்கு 62 வயதாகிறது. அவர் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு படித்த 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் பாட்டி சிவகங்கையில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் அப்போது சிவகங்கையில் இருந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே (தற்போதைய புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு) விசாரணை நடத்தி, தலைமையாசிரியர் முருகன் மீது போக்சோ சட்டம், தீண்டாமை ஒழிப்புச்சட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி சரத்ராஜ், குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஒவ்வொரு மாணவிக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது, தீண்டாமை ஆகிய குற்றங்களுக்கு என தனியாக 47 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.69 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். அத்துடன் பாதிக்கப்பட்ட 6 மாணவிகளுக்கும் தமிழக அரசு இழப்பீடாக ரூ.29 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory