» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸ் சரணடைய உயர்நீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய் 23, ஏப்ரல் 2024 4:42:38 PM (IST)

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜேஷ் தாஸ் தாக்கல் உடனடியாக சரண் அடைய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விழுப்புரத்தில் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக வந்த பெண் எஸ்பி ஒருவருக்கு அப்போது சிறப்பு டிஜிபியாக ராஜேஷ் தாஸ் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்ததாக புகார் எழுந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பெண் எஸ்.பி. புகார் கொடுக்க முயற்சித்தபோது அதனை செங்கல்பட்டு எஸ்பி-யாக இருந்த கண்ணன் தடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விழுப்புரம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் வழக்கு தொடுக்க தாமதப்படுத்தியதற்காக செங்கல்பட்டு எஸ்பி-யான கண்ணனுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

தனக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ராஜேஷ் தாஸ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவர் அப்போது கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அந்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதையடுத்து அவரை கைது செய்வதற்காக சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்ற போது அவர் அங்கிருந்து தலைமறைவானார். இதனால் அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீசை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுப்பினர்.

இதற்கு நடுவே, பாலியல் வன்கொடுமை வழக்கில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜேஷ் தாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி. எம்.தண்டபாணி முன்னிலையில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.சி.ஐ.டி. தரப்பு வழக்கறிஞர், ராஜேஸ் தாசின் கோரிக்கைகளை ஏற்க கூடாது என வாதிட்டார். 

"காவல்துறையில் உயர் பதவியில் இருப்பதால், தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கேட்கும் ராஜேஸ் தாஸ், தன்னால் பாதிக்கப்பட்டவரும் போலீஸ் உயரதிகாரி என்பதை மறந்துவிட்டாரா?" என்றும் அவர் கேள்வியெழுப்பினார். இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கை ஏப்ரல் 23ம் தேதிக்கு (அதாவது இன்று) ஒத்திவைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறையின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் செயல்பட்ட ராஜேஷ் தாசுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் அதிக ஒழுக்கத்துடன் இருக்க வேண்டிய காவல்துறையினர், நாட்டின் பிற குடிமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் ஒழுக்கக்குறைவுடன் உடன் பணியாற்றும் அதிகாரியிடம் முறை தவறி நடந்திருக்கிறார். பெண்களுக்கு எதிராக சாதாரணமானவர்கள் முறை தவறி நடக்கும் போது, காவல் துறையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆனால், காவல்துறையில் உயர் பதவி வகித்த ராஜேஷ் தாஸ், தனக்கு கீழ் பணியாற்றும் பெண் அதிகாரியிடம் முறை தவறி நடந்திருக்கிறார் என்பது வேதனை அளிப்பதாக சென்னை ஐகோர்ட்டு தெரிவித்தது. இதனையடுத்து உடனடியாக அவர் போலீசார் முன்பு சரணடைய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory