» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி என அறிவிப்பு!

திங்கள் 29, ஏப்ரல் 2024 3:21:45 PM (IST)

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலா தேவியை குற்றவாளி எனவும், உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரை விடுதலை செய்தும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி. அங்கு பயின்ற சில மாணவிகளை உயரதிகாரிகளுக்கு பாலியல் ரீதியாக பயன்படுத்த முயன்றுள்ளார். இது தொடர்பாக அவர் மாணவிகளுடன் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைகழக உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 2018ம் ஆண்டு முதல் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 26ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பகவதி அம்மாள் அறிவித்திருந்தார். இதற்காக முருகன் மற்றும் கருப்புசாமி ஆகியோர் ஆஜராகி இருந்த நிலையில், நிர்மலா தேவி ஆஜராகவில்லை. எனவே வழக்கின் தீர்ப்பை 29ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரும் கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக குற்றம்சாட்டப்பட்டுள்ள மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். தீர்ப்பை வாசித்த நீதிபதி உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நிர்மலா தேவியை குற்றவாளி என நீதிபதி பகவதி அம்மாள் அறிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory