» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது: இதுவரை 21பேர் கைது...!
புதன் 7, ஆகஸ்ட் 2024 12:15:31 PM (IST)
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் மாநில தலைவா் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் கடந்த ஜூலை 5 -ஆம் தேதி ரௌடிக் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடா்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரா் பொன்னை பாலு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். அவா்கள் அனைவரும் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இவா்களில் பொன்னை பாலு உள்ளிட்ட பலரை ஏற்கனவே போலீசாா் காவலில் எடுத்து விசாரித்தனா். இந்த விசாரணையை தொடா்ந்து கொலை வழக்கில் தொடா்புடையவா்கள் கைது செய்யப்பட்டனா்.இந்த கொலை வழக்கின் விசாரணையில் கிடைத்த பல்வேறு தகவல்கள் அடிப்படையில் பொன்னை பாலு, அருள், ராமு, ஹரிதரன், சிவசக்தி ஆகியோரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் காவல் ஆய்வாளா் எழும்பூா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பொன்னை பாலு உள்ளிட்ட 5 பேரையும் 7 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இவ்வழக்கில் முன்னதாக கைது செய்யப்பட்ட கைதான ரெளடி நாகேந்திரனின் மகனும், காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான அஸ்வத்தாமனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். போலீஸ் காவலில் உள்ள அருள் கொடுத்த தகவலின் அடிப்படையில் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.