» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கர்ப்பிணி தாய்மார்களுக்கான கவனிப்பு பிரிவுகள் : அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்

திங்கள் 19, மே 2025 12:54:24 PM (IST)



பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் வளர்மிகு வட்டார திட்டத்தின் கீழ் பிரசவத்திற்கு பின் கவனிப்பு பிரிவுகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் இன்று துவக்கி வைத்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வட்டாரங்களில் ஒரு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக அதாவது கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளுடன் மேம்படுத்தும் வகையில் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையானது மகப்பேறுக்காகவே மிகவும் சிறப்பான மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. 

வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.35 இலட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு என குளிரூட்டப்பட்ட காத்திருப்போர் அறை, குளிரூட்டப்பட்ட பிரசவறை, குளிரூட்டப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம், திரைச்சீலை மறைப்புடன் கூடிய வார்டுகள், கர்ப்பிணிகளுடன் உடன் இருப்பவருக்கு படுக்கை வசதி, பொருட்கள் பாதுகாப்பு வசதி, 24 மணிநேர வெந்நீர் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு உணவு, தொலைக்காட்சி வசதி, 24 மணி நேரம் மகப்பேறு மருத்துவ சேவை, தாய்சேய் நலபெட்டகம், 108 ஆம்புலன்ஸ் வசதி, இலவசமாக வீட்டிற்கு திரும்பி கொண்டு விடும் வசதி, இலவச ஆய்வக பரிசோதனை, மருத்துவம் பயிற்சி பெற்ற செவிலியர் கண்காணிப்பு, கர்ப்பப்பையில் உள்ள குழந்தையின் நலனை கண்காணிக்கும் கருவி, மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு கழிவறை வசதி அவர்களுடன் வருபவர்களுக்கான வசதிகள் என பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. குழந்தை பிறந்தவுடன் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இம்மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் அரசு மருத்துவமனையில் வந்து பிரசவம் மேற்கொள்கிறார்கள். அதனை குறைந்தபட்சம் 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். நமது மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இம்மருத்துவமனை பொருளாதார ரீதியாக மிகவும் உதவியாக இருக்கும். தனியார் மருத்துவமனைக்கு இணையான சேவையினை நமது அரசு மருத்துவமனைகளும் வழங்க வேண்டும் என்ற நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முயற்சியால் தான் மாநில திட்டக் குழுவின் நிதியின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இன்றைக்கு துவங்கப்பட்டுள்ளது.

கர்பிணி பெண்களுக்கு 24*7 தாய் சேய் நலத்திற்கான மருத்துவ வசதி அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது. கர்ப்பம் உறுதியானவுடன், கிராம சகாதார செவிலியர் மூலம் இலவசமாக பதிவு செய்யப்பட்டு RCH ID வழங்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பக்காலத்தில் தேவையான தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகின்றது. கர்ப்பக்காலத்தில் செய்யப்படும் இரத்த அளவு, சர்க்கரை அளவு, யூரியா, கிரியாட்டினின், சிறுநீர் பரிசோதனைகள் உட்பட இலவசமாக செய்யப்படுகின்றன. மலைவாழ் கிராமங்களில் வாழும் குழந்தைகளுக்கு அதிகமாக Hemoglobinopathy இரத்தம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிசோதனைக்கு வரும் மலைவாழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இதனை கண்டறியும் சிறப்பு ஆரம்ப கட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு சந்தேகிக்கப்படும் கர்ப்பிணி தாய்மார்கள் மேல் சிகிச்சைக்காக அரசுமருத்துவக்கல்லூரிமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
மேலும் சிக்கலான பிரச்சனைகள் உடைய கர்ப்பிணி தாய்மார்களுக்கு அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அனுபவமிக்க மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கர்ப்பிணி தாய்மார்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள வசதிகளையும் அங்கு வழங்கப்பட்டு வரும் சேவைகளையும் காண்பித்து அங்குள்ள அனுபவமிக்க மகப்பேறு மருத்துவர்களிடம் உரையாடச்செய்து கர்ப்பிணி தாய்மார்களின் சந்தேகங்கள் நிவர்த்தி செய்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கிடையேயான புரிதல் அதிகரித்து கர்ப்பிணி தாய்மார்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு செல்ல வழிவகுக்கிறது.மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுருத்தலின்படி அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணி தாய்மார்களிடம் இரத்தம் மற்றும் இரத்தக்கூறுகளை ஏற்பாடு செய்து தர இரத்ததான கொடையாளரை அழைத்து வரச்சொல்லி வற்புறுத்தக்கூடாது என்ற ஏற்பாடு செய்யப்படுள்ளது. 

கர்ப்பக் காலத்தில் தேவையான அனைத்து ஸ்கேன் (Anomaly Scan) கருவில் உள்ள குழந்தையின் குறைபாடுகளை கண்டறியும் ஸ்கேன் உட்பட அனைத்தும் இலவசமாக செய்யப்படுகின்றன. மலைவாழ் மக்கள் வாழும் கிராம பகுதிகளில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களின் நலனுக்காக அந்த பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் Birth Waiting Room அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மலைவாழ் பகுதியில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் அவர்ளின் தாய்சேய் நல தேவைகள் ஏற்படும் போதும் இயற்கை இடையூறுகள் ஏற்படும் போதும் இங்கு பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படுகின்றது. என பொதுமக்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு, பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள். 

அதனைத்தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, முன்னிலையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தாய் சேய் நல பெட்டகம் மற்றும் மகப்பேறு சஞ்சீவி சித்த மருந்துகளை வழங்கினார்கள். 

நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், இணை இயக்குநர் மருத்துவம் சகாய ஸ்டீபன்ராஜ், பூதப்பாண்டி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் மற்றும் துணை இயக்குநர் குடும்பநலம் ரவிக்குமார், தோவாளை வட்டார மருத்துவ அலுவலர் ராஜகுமார், மாவட்ட தாய்சேய் நல அலுவலர் பியூலா, செயற்பொறியாளர் (கட்டிடம் மற்றும் மருத்துவம்) முருகேசன், வளமிகு வட்டார வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் அனுஷியா, கேட்சன், பூதலிங்கம், பிராங்கிளின், துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory