» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொது இடங்களில் கொடிக்கம்பங்களை அகற்றவில்லை என்றால்... உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
வியாழன் 19, ஜூன் 2025 8:37:31 AM (IST)
பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்கள் முழுமையாக அகற்றப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் 2 இடங்களில் அ.தி.மு.க. கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு அனுமதி கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கொடிகள் வைக்கப்படுகிறது. எனவே, தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் பிற வகை சாலைகள் ஓரங்களில் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், சாதி சங்கங்களின் கொடிக்கம்பங்களை ஏப்ரல் 28-ந் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ஐகோர்ட்டு மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவில் தவறு இல்லை என்று கூறி அவரது உத்தரவை உறுதி செய்தனர்.
அரசியல் கட்சியை சேர்ந்தவர்களோ, சாதி, மத அமைப்பினரோ அவர்களுக்கு சொந்தமான இடங்களில் அலுவலகங்களில் முறையான அனுமதி பெற்று நிரந்தர கொடிக்கம்பங்கள் வைத்துக்கொள்ளலாம். இதற்காக சாலைகள், பொது இடங்களை பயன்படுத்த வேண்டாம். அதற்கு அனுமதியும் இல்லை என்று உத்தரவிட்டனர்.
இந்தநிலையில், கொடிக்கம்பம் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி, அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
பின்னர் அரசு தரப்பு வக்கீல், "ஐகோர்ட்டு உத்தரவின்படி அரியலூர், திருப்பத்தூர், கன்னியாகுமரி, பெரம்பலூர், நெல்லை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் நூறு சதவீதம் கொடிக்கம்பங்கள் அகற்றுப்பட்டுவிட்டன. மீதமுள்ள மாவட்டங்களில் கொடிக்கம்பங்களை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர்ந்து தலைமைச் செயலாளர் ஆலோசனை கூட்டம் நடத்தி தகுந்த உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். நிலையான வழிகாட்டு நெறிமுறை தயாரிக்கப்பட்டு வருகிறது'' என்று கூறினார்.
இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதி, "இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் சாலையோரங்களில் உள்ள கொடிக்கம்பங்கள் அகற்றப்படவில்லை. நிலையான வழிகாட்டு நெறிமுறையை உருவாக்காமல், அரசியல் கட்சிகளுக்கு ஏன் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்குகிறீர்கள்? அரசுக்கு சொந்தமான இடங்கள், மைதானங்கள், பொது இடங்களில் அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்தவும், கட்சி கொடிக்கம்பங்கள் வைப்பதற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? தனியார் இடங்களில் அரசியல் கூட்டங்கள் நடக்கும்போது, அதற்கான தொகை கட்சிகளிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது அல்லவா?'' என்று கேள்வி கேட்டார்.
அதற்கு அரசு வக்கீல், இதுகுறித்து அரசு ஆலோசித்து வருகிறது என்றார். உடனே நீதிபதி, "ஒரு கொடிக்கம்பத்துக்கு ரூ.1,000 வரை அரசு கட்டணம் வசூலிக்கலாம். இந்த ஐகோர்ட்டு உத்தரவின்படி சாலையோரம், பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் இல்லை எனறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தாத ஆட்சியர்கள் வழக்கு விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும். இந்த வழக்கு விசாரணையை ஜூலை 2-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்'' எனறு உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிவகங்கை வழக்கில் முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்: அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!
செவ்வாய் 1, ஜூலை 2025 7:46:56 PM (IST)

அஜித்குமார் விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம்: முதல்வர் ஸ்டாலின்
செவ்வாய் 1, ஜூலை 2025 5:03:28 PM (IST)

வெற்றி நிச்சயம் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 1, ஜூலை 2025 4:58:05 PM (IST)

அஜித்குமாரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டது யார்? டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 1, ஜூலை 2025 4:02:21 PM (IST)

சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: மானாமதுரை டி.எஸ்.பி. சஸ்பெண்ட்!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:43:56 PM (IST)

அஜித்குமாரை பிரம்பால் கொடூரமாக தாக்கும் போலீசார் : அதிர்ச்சி வீடியோ வெளியானது!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:23:07 PM (IST)
