» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பல பிரச்சனைகளை சமாளித்துக்கொண்டு கூட்டணியில் நீடிக்கிறோம்: திருமாவளவன் பரபரப்பு பேச்சு

வியாழன் 19, ஜூன் 2025 12:26:12 PM (IST)

பல பிரச்சனைகளை சமாளித்துக்கொண்டுதான் ஆளுங்கட்சி கூட்டணியில் நீடிக்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

மதுரை முடக்கத்தான் பகுதியில் நேற்று இரவு நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஆளுங்கட்சியோடு நாம் கூட்டணியில் இருக்கிறோம். ஆனாலும் அவர்கள் மற்ற கொடிகளை காட்டிலும் நமது கட்சி கொடிகளை அகற்றுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுபோன்ற பல பிரச்சனைகளை எதிர்கொண்டு, சமாளித்துக்கொண்டு, போராடிக்கொண்டு இன்னும் ஆளுங்கட்சி கூட்டணியில்தான் நீடிக்கிறோம்.

ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு கூட்டணியில் இருக்க வேண்டும் என கேட்பது சராசரி மனிதனின் சிந்தனை. அரசியல் களத்தில் அது சரிவராது. அரசியலில் நாம் இருக்கும்போது எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். ஒரு பிரச்சனையை கவனத்தில் கொண்டு மட்டும் நாம் செயல்பட முடியாது.

அரசியலில் தெளிவு, பொறுமை, நிதானம், சகிப்புதன்மை தேவை. நமக்கு ஆதரவான சக்திகள் யார்? எதிரான சக்திகள் யார்? என்பதை தெளிவாக முடிவு செய்ய வேண்டும். அதனால் தான் பா.ஜ.க., பா.ம.க. கட்சிகள் இடம்பெறும் அணிகளில் நாம் சேர மாட்டோம் என தெளிவாக முடிவெடுத்துள்ளோம்.

அ.தி.மு.க.வோடு சேருவீர்களா? சேரலாம். பிரச்சனை இல்லை. ஆனால் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் இருப்பதால் அது முடியாது. இப்படி கதவுகளை எல்லாம் மூடி வைத்துக்கொண்டால் யார் கூட்டணிக்கு அழைப்பார்கள் என்று சிலர் கேட்கிறார்கள். எதையும் எதிர்பார்த்து, யாரையும் மிரட்டி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் அதற்காக கட்சி தொடங்கவில்லை. அம்பேத்கரின் அரசியலை மக்களிடம் கொண்டு செல்வதற்காகவே கட்சியை தொடங்கியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory