» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோவிலில் தமிழ் குடமுழுக்கு என்பது ஏமாற்று வேலை : சீமான் அறிக்கை

வியாழன் 19, ஜூன் 2025 3:53:59 PM (IST)



திருச்செந்தூர் கோவிலில் தமிழ் குடமுழுக்கு என்ற தி.மு.க. அரசின் வெற்று அறிவிப்பினை ஒருபோதும் ஏற்க முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ் இறையோன் திருச்செந்தூர் திருமுருகப்பெருமானுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியும் - தெய்வத்தமிழ் பேரவையும் இணைந்து திருச்செந்தூரில் முன்னெடுத்த அறப்போராட்ட பொதுக்கூட்டத்தினால் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியின் விளைவாக, தற்போது திருச்செந்தூர் திருக்கோவில் நிர்வாகம் சார்பாக தமிழ்த்திருமுறைகள் முற்றோதல் நடைபெறும் என்றும், அதுதான் தமிழ் குடமுழுக்கு என்றும் ஏமாற்றும் வெற்று அறிவிப்பினை தி.மு.க. அரசு வெளியிட்டிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 'தமிழிலும்' குடமுழுக்கு நடத்தப்படும் என்று கூறுவது வெட்கக்கேடானது. குடமுழுக்கு முழுமையாக தமிழில் நடத்தப்பட வேண்டும். தாய்த்தமிழில் குடமுழுக்கு என்பது தி.மு.க. அரசு வேண்டா வெறுப்பாக இடும் பிச்சையோ, சலுகையோ அல்ல; திருச்செந்தூர் ஒன்றும் ஆந்திராவிலோ, கர்நாடாகவிலோ, கேரளாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ இல்லை. 

நாங்கள் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலிலோ, சபரிமலை ஐயப்பன் கோவிலிலோ, மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலிலோ தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டில், தமிழ் முன்னோர்கள் கட்டிய தமிழர் இறையோன் திருச்செந்தூர் திருமுருகப்பெருமான் திருக்கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பது மானத்தமிழினத்தின் வழிபாட்டு உரிமை. அதனை வழங்குவதில் அமைச்சருக்கு ஏன் இத்தனை சலிப்பு? இத்தனை வெறுப்பு? தி.மு.க. அரசு யாரும் கேட்காமல் முழுமையாக தமிழில் குடமுழுக்கு நடத்தும் என்றால் அதனை அறிவிப்பதில் இன்னும் ஏன் தாமதம்? நாங்கள் போராட்டம் நடத்தும்வரை அமைச்சர் சேகர்பாபு வாய் திறவாதாதது ஏன்?

திருச்செந்தூர் திருமுருகப்பெருமான் கோபுர கலசங்கள் நன்னீராட்டப்படும் போதும், வேள்விச்சாலையிலும் தமிழ் மந்திரங்கள் ஓதி தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் அறிஞர்கள், மெய்யன்பர்கள் மற்றும் தமிழ் மக்களின் கோரிக்கையும், விருப்பமுமாகும். குறைந்தபட்சம் சம்ஸ்கிருதத்திற்கு இணையாக சரிபாதி வேள்விச்சாலைகள் அன்னைத்தமிழுக்கு வழங்கப்பட வேண்டும். கோபுர கலசங்கள் நன்னீராட்டின்போது கோபுர உச்சியிலும் தமிழ் மந்திரங்கள் ஒலிக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாகும்.

அதனை விடுத்து, தமிழ் ஓதுவார்களை ஓரமாக நிற்க வைத்து முற்றோதல் செய்துவிட்டு, அதனை தமிழில் குடமுழுக்கு நடத்தியதாக ஏமாற்றும் தி.மு.க. அரசின் வழக்கமான ஏமாற்று அறிவிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது.

தமிழ்நாடு அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் அன்னைத்தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதை ஐகோர்ட்டே தம்முடைய தீர்ப்பின் மூலம் உறுதி செய்துவிட்டது. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் தி.மு.க. அரசிற்கு ஏன் இத்தனை தயக்கம்? ஏன் இத்தனை நடுக்கம்? தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று உதட்டளவில் உச்சரித்து தமிழரை ஏய்த்து கிடைத்த அதிகாரத்தை வைத்து பிழைக்கும் தி.மு.க. அரசு, தமிழர் உரிமையை காவு கொடுக்கும் இழிசெயலை எப்போது கைவிடப்போகிறது?

சமஸ்கிருத வேத மந்திரங்கள் ஓதி, ஆரிய வழிப்பாட்டு முறையில் கடைபிடிப்பதில் தி.மு.க. அரசிற்கு ஏன் இத்தனை ஆர்வம்? வடமொழி வழிபாட்டைக் கடைபிடிப்பதுதான் திராவிட மாடலா? இதுதான் தமிழ் மொழியை, தமிழ் பண்பாட்டை, தமிழர் உரிமையை தி.மு.க. அரசு காக்கும் முறையா?

2,500 ஆண்டுகளுக்கு முன் கீழடியில் தமிழர் பண்பாட்டுத் தொன்மங்கள் கிடைத்துள்ளது பெருமை என்பதை ஏற்கும் தி.மு.க. அரசு, தமிழர் நிலத்தில் தமிழ்க் கடவுளுக்கு வடமொழியில் வழிபாடு நடந்துள்ளது என்பதை இன்னும் 1,000 ஆண்டுகளுக்கு பின்வரும் தலைமுறை அறிந்தால் அது தமிழ் இனத்திற்கு அவமானமா? வெகுமானமா? தமிழர் வரலாற்று பெருமைக்கு அது மாபெரும் இழுக்கில்லையா? அதனை தி.மு.க. அரசு உணர மறுத்து வடமொழிக்கு வால் பிடிப்பதேன்?

ஆகவே, தாய்த்தமிழ் கோபுர கலசம் ஏற வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான கோரிக்கை! அதனை நிறைவேற்றும் வகையில், தமிழ் இறையோன் திருச்செந்தூர் திருமுருகப்பெருமானுக்கு குடமுழுக்கு நன்னீராட்டின் போதும், வேள்விச்சாலையிலும் தமிழ் மந்திரங்கள் ஓதி தமிழில் குடமுழுக்கு நடந்திட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையென்றால் திட்டமிட்டபடி நாம் தமிழர் கட்சி அறப்போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory