» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு

வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு மற்றும் மேல்புறம் ஊராட்சி, களியக்காவிளை பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- விளவங்கோடு வட்டம் இடைக்கோடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளி பிரிவு, வெளிநோயாளி பிரிவு, மருந்தகம், ஆய்வகம் உள்ளிட்ட பிரிவுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

உள்நோயாளிகள் பிரிவில் மேல் தளத்தில் ரூ.60 இலட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையை முறைகள் குறித்தும், மேலும் அங்கு பிரசவம் மேற்கொண்டுள்ள தாய்மார்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்தும், பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறியப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் தேவைகளுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வன்னியூர் ஊராட்சியில் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா 2023-2024 திட்டத்தின்கீழ் ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் பரக்குன்று சாணி மணப்பழஞ்சி தோட்டச்சாணி செழுவஞ்சேரி வடசேரிக்காலை வரை 3 கிலோ மீட்டர் தூரம் கருந்தளம் அமைக்கப்பட்ட பணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து களியக்காவிளை தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.20 கோடி மதிப்பீட்டில் களியக்காவிளை புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பேருந்து நிலையமானது தரைத்தளம் முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் என்று மூன்று தளங்களை கொண்டது. 

தரைத்தளத்தில் 4 கடைகள், 2 அலுவலகம், 4 ஆண்கள் கழிப்பறை மற்றும் 6 பெண்கள் கழிப்பறைகளும், முதல் தளத்தில் 2 அலுவலகம், 4 கடைகளும் 3 ஆண்கள் கழிப்பறைகளும், 5 பெண்கள் கழிப்பறைகளும், இரண்டாம் தளத்தில் மூன்று கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்தின் மொத்த பரப்பளவு 4063.29 சதுர மீட்டர் ஆகும். பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் முன்னாள் படைவீரர்கள் மற்றும் இராணுவப்பணியின் போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்களின் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்கள். அதனடிப்படையில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வங்கிகள் வாயிலாக தற்காலிக அனுமதி (Provisional Sanction) பெறப்பட்ட 52 நபர்களுக்கு இரண்டு கட்டங்களாக EDII பயிற்சி அளிக்கப்பட்டது. 

அவர்களில் 21 நபர்களுக்கு வங்கிக் கடனுக்கான இறுதி அனுமதி பெறப்பட்ட நிலையில் மீதி உள்ள நபர்களுக்கு இறுதி அனுமதி வழங்குவதை துரிதப்படுத்தும் நோக்கத்துடன் நாகர்கோவில் நாகராஜா திடலில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் அவர்களின் அலுவலகத்தில் வைத்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தின்போது இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்துள்ள அனைத்து முன்னாள் படைவீரர்களும் தொழிலதிபர்களாக உருவாக்கும் நோக்கத்துடன் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து அனுமதிகள் வழங்கிடுமாறு வங்கி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.

ஆய்வில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், துணை இயக்குநர் முன்னாள் படைவீரர் நலன் மேஜர் ஜெயகுமார், ஒன்றிய பொறியாளர் அஜிதாகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியம், சுரேஷ்குமார், மருத்துவர்கள், செவிலியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory