» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வேளாங்கண்ணி மாதா பேராலய பெரிய தேர்பவனி : பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
திங்கள் 8, செப்டம்பர் 2025 11:55:18 AM (IST)
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார மாதா பெரிய தேர் பவனி நேற்று இரவு நடந்தது.
இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முக்கிய இடம் வகிக்கிறது. கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய 'பசிலிக்கா' என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டு செல்கிறாா்கள்.
அவ்வகையில் இந்த ஆண்டின் திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதைப்போல சிலுவை பாதை வழிபாடு, ஜெபமாலை, நவநாள் ஜெபம், மாதாமன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசி உள்ளிட்ட பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடந்தன.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார மாதா பெரிய தேர் பவனி நேற்று இரவு நடந்தது. தேர் பவனியையொட்டி தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் நடந்தது. தொடர்ந்து புதுவை- கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
திருப்பலியைத் தொடர்ந்து புதுவை- கடலூர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தேரை புனிதம் செய்தார். இரவு 8 மணிக்கு பேராலயத்தின் மணிகள் ஒழிக்க மின்விளக்கு அலங்காரத்துடன் தயார் நிலையில் இருந்த புனித ஆரோக்கிய மாதா சொரூபம் தாங்கிய பெரிய தேர் பேராலய முகப்பில் இருந்து புறப்பட்டு சென்றது.
தேர் புறப்பட்டதும் பேராலயத்தைச் சுற்றி திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாக மிகுதியில் கைதட்டி மரியே வாழ்க என கோஷமிட்டு பூக்களை தூவி பிரார்த்தனை செய்தனர். மாதா தேருக்கு முன்பாக புனித மிக்கேல்சமன்சு, புனித சூசையப்பர், புனித அந்தோணியார், புனித செபஸ்தியார், அமலோர்பவமாதா, புனித உத்திரிய மாதா ஆகிய தேர்கள் வண்ண விளக்குகள் அலங்காரத்துடன் அணிவகுத்து சென்றன.
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி அலங்கரிக்கப்பட்ட அன்னையின் பெரிய தேர் மற்றும் சிறிய தேர்கள் வலம் வந்தன. அப்போது தேரை பின் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்றனர். இதனால் வேளாங்கண்ணி பேராலய வளாகம், கடைத்தெரு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பேராலயத்தை சுற்றி தேர் வலம் வந்த போது மக்கள் தேர் மீது பூக்களைத் தூவி ஜெபித்தனர். தேர் பவனி பேராலயம் முன் வந்து சேர்ந்ததும் புனித ஆரோக்கிய மாதாவுக்கு நன்றி செலுத்தும் வகையில் பிரார்த்தனை செய்யப்பட்டது. வேளாங்கண்ணி முழுவதும் பல்வேறு இடங்களில் பெரிய வண்ணத்திரைகள் அமைக்கப்பட்டு தேர் பவனி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
சனி 13, செப்டம்பர் 2025 5:30:14 PM (IST)

விஜய்யின் தி.மு.க. எதிர்ப்பு ஆரோக்கியமானது: தமிழிசை பேட்டி!
சனி 13, செப்டம்பர் 2025 4:49:11 PM (IST)

ரயிலில் கார்களை கொண்டு செல்ல சேவை தொடங்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 4:19:08 PM (IST)

கல்வி கடன் ரத்து தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? திமுக அரசுக்கு விஜய் கேள்வி!
சனி 13, செப்டம்பர் 2025 4:10:06 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகளவில் வருகிறது: கனிமொழி எம்பி பேச்சு!
சனி 13, செப்டம்பர் 2025 3:54:37 PM (IST)
