» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரியிலிருந்து டெல்லிக்கு தினசரி ரயில் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

செவ்வாய் 9, செப்டம்பர் 2025 5:03:10 PM (IST)

கன்னியாகுமரியிலிருந்து டெல்லிக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில்வே பயனீட்டாளர்கள் சங்கம் (KKDRUA) தலைவர் எஸ்.ஆர் ஸ்ரீராம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவின் தலைநகருக்கு வேலைவாய்பிற்காகவும், மேற்படிப்பிற்காகவும், நுழைவு தேர்வு, உச்சநீதிமன்றம்,  நேர்காணல் மத்திய அரசு சம்பந்தமான அலுவலகங்கள்  போன்றவைகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் டெல்லி நோக்கி பயணிக்கின்றனர். 

தமிழ்நாட்டிலிருந்து வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் ராணுவ வீரர்கள் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வருவதற்கு நியுடெல்லி வந்து அங்கிருந்து சொந்த ஊருக்கு வருவதற்கு போதிய தினசரி ரயில் வசதி இல்லை. வட இந்தியாவிலிருந்து கன்னியாகுமரிக்கு வரும் யாத்ரீகர்களுக்கு தென்தமிழ் நாட்டில் இருந்து டெல்லி ஆக்ரா போன்ற பகுதிகளுக்கு வட இந்திய சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு தினசரி ரயில் வசதி இல்லை. டில்லியிலிருந்து தமிழ் நாட்டிற்கு  இயக்கப்படும் ரயில்களில் தென்மாவட்ட மக்களுக்கு எந்தவிதமான பலனும் இல்லை என்ற குறை, பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

தமிழகத்திற்கு, டில்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், ஜி.டி., எக்ஸ்பிரஸ், துரந்தோ எக்ஸ்பிரஸ், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளன. ஆனால், இவை அனைத்தும் சென்னையோடு நின்றுவிடுகின்றன. சென்னையைத் தாண்டித்தான் மாநிலத்தின் பெரும்பகுதியே உள்ளது. இந்த ரயில்கள் தமிழ்நாட்டுற்குற்குள் மொத்தம் 60 கி.மீ., தூரம் மட்டுமே வருகின்றன. மாநிலத்தின் ஏதோ ஒரு மூலையில் உள்ள சென்னைக்கு ரயில்களை இயக்கி, ஒட்டுமொத்த மாநிலத்திற்கே ரயில்களை இயக்குவதாக காட்டப்படுகிறது. சென்னை வரை மட்டுமே இயக்கப்படும் இந்த ரயில்களினால், மாநிலத்தின் பெரும்பான்மை மக்களுக்கு எந்த பயனும் இல்லை. 

கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் நிலைமை இப்படி இல்லை. டெல்லி போன்ற வடமாநிலங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் எல்லாம் கர்நாடகா முழுவதும், ஆந்திரா முழுவதும் கேரளா முழுவதும் இயக்கப்படுகின்றன. டில்லியில் இருந்து இயக்கப்படும் எந்த ரயில்களாக இருந்தாலும் அவை அனைத்துமே அந்த மாநிலங்கள் முழுமைக்குமாக பயன்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டில் மட்டும் அத்தனையும் சென்னையோடு நின்றுவிடுகின்றன. திருக்குறள் எக்ஸ்பிரஸ், வாரத்தில் இரண்டு நாள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த திருக்குறள் ரயில் மட்டும்தான் கன்னியாகுமரி வரை செல்கிறது. தவிர, சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ், வாரத்தில் இரண்டு தினங்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரயில் மதுரையுடன் நின்று விடுகிறது. 

தற்போது மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் பயன்படும் வகையில் இயங்கிவரும் கன்னியாகுமரியிலிருந்து புதுடில்லிக்கு வாரத்திற்கு இரண்டு நாட்கள் இயங்கும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்று முதலில் கோரிக்கை வைக்கப்பட்டது. தென் மாநிலங்களிலிருந்து புதுடெல்லிக்கு இயக்கப்பட்டு வரும் சாதாரண சூப்பர் பாஸ்ட் ரயில்களில் இந்த ரயில்தான் குறைந்த நேரத்துடன் இயங்கி அனைத்து பகுதி மக்களுக்கு பயன்படும் இயங்கி வருகிறது. 

இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க தற்போது இயங்கும் கால அட்டவணையில் மதுரையிலிருந்து நிசாமுதீன்க்கு வாரம் இருமுறை ரயில் இயங்கி வருகிறது. இதைப்போல் அதே கால அட்டவணையில் திருப்பதியிலிருந்து வாரத்திற்கு மூன்று முறை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த திருக்குறள் ரயில் சேவையை அதிகரித்து இயக்க முடியாத நிலை உள்ளது. 

இதையும் மீறி தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்றால் முழு ரயிலின் கால அட்டவணை மாற்றம் செய்ய வேண்டும். இது நீண்ட தூர ரயிலாக இருக்கின்ற காரணத்தால் அது அனைத்து ரயில்வே மண்டலங்களும் கலந்து ஆலோசித்து ஒரே கருத்து ஒற்றுமைக்கு கொண்டு வர முடியாத நிலை உள்ளது.  இந்த  திருக்குறள் ரயில் சேவை அதிகரித்து இயக்க தெற்கு ரயில்வே அதிகாரிகளால் பலமுறை திட்ட கருத்துரு சமர்ப்பித்து நடக்காமல் போய்விட்டது. 

இரட்டைபாதை: தாம்பரத்திலிருந்து விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை உள்ள இருப்பு பாதை இரட்டை பாதையாக மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. இதுதான் தக்க சமயம் சென்னையிலிருந்து இயக்கப்படும் ஒருசில ரயில்களை இரட்டைபாதை உள்ள பாதை வழியாக மதுரை, திருச்சி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.  

கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு: முதலில் சென்னை எழும்பூரிலிருந்து புதுடெல்லி  செல்லும்  கிராண்ட் டிரங்க்  எக்ஸ்பிரஸ் ரயிலை தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி  வரை நீட்டிப்பு செய்து இயக்க இயக்க வேண்டும்.  இவ்வாறு நீட்டிப்பு செய்து இயக்கும் போது தமிழ்நாட்டில் தெற்கே உள்ள கடைசி மாவட்டமான கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு மாநில தலைநகர் வழியாக சுமார் 15 மாவட்ட ரயில் நிலையங்களில் சுமார் 15 முதல் 20 ரயில் நிலையங்களில்  நின்று செல்லுமாறு இயக்கப்படும் போது அனைத்து பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். 

சென்னைக்கு கூடுதல் ரயில் சேவை: இந்த கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை; சென்னை எழும்பூர் வழியாக இயங்குவதால் தென் மாவட்ட பயணிகளுக்கு நமது மாநிலத்தின் தலைநகரான சென்னைக்கு செல்ல தினசரி பகல் நேர ரயில் வசதி கிடைக்கும். இது தென் மாவட்டத்திலிருந்து சென்னை செல்லும் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். 

நாகர்கோவில் முதன்மை பராமரிப்பு: கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்கும் போது இந்த ரயில் முதன்மை பராமரிப்பு சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு மாற்றம் செய்யப்படும். நாகர்கோவிலில் தற்போது மூன்று பிட்லைன்கள் புதிதாக அமைக்கப்பட்டு பழைய மூன்று புதியது இரண்டு என்று மொத்தம் ஐந்து பிட்லைன்கள் பராமரிப்பு செய்வதற்கு  தயாராக உள்ளது. 

கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து புதுடெல்லிக்கு பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால் கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பேருந்தில் திருவனந்தபுரம் சென்று விட்டு அங்கிருந்து புதுடெல்லி செல்லும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்ட பயணிகள் சென்னை சென்றுதான் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
               
கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து புதுடெல்லிக்கு பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால் கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பேருந்தில் திருவனந்தபுரம் சென்று விட்டு அங்கிருந்து புதுடெல்லி செல்லும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்ட பயணிகள் சென்னை சென்றுதான் பயணம் செய்ய வேண்டியுள்ளது.

திருவனந்தபுரத்திலிருந்து புதுடெல்லி அல்லது புதுடெல்லி வழியாக இயக்கப்படும் ரயில்கள்

1. திருவனந்தபுரம் வடக்கு – சண்டிகர் கேரளா சம்பர்காந்தி வாரம் இருமுறை

2. திருவனந்தபுரம் வடக்கு – அமிர்தரசரஸ் வாராந்திர ரயில்

3. திருவனந்தபுரம் வடக்கு – ரிசிகேசி வாராந்திர ரயில்

4. திருவனந்தபுரம் - புது டெல்லி கேரளா எக்ஸ்பிரஸ் தினசரி

5. திருவனந்தபுரம் – நிஜாமுதீன் வாராந்திர ரயில்

6. திருவனந்தபுரம் – நிஜாமுதீன் ராஜதானி வாரம் மூன்று முறை

7. திருவனந்தபுரம் – நிஜாமுதீன் வாராந்திர ரயில்

8. திருவனந்தபுரம் – நிஜாமுதீன் வாராந்திர ரயில்

9. கன்னியாகுமரி – கத்ரா வாராந்திர ரயில்

இந்த ரயில்களில் சென்னையிலிருந்து அமிர்தசரஸ் , ரிசிகேசி போன்ற இடங்களுக்கு இதுவரை நேரடி ரயில் சேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இது மட்டுமல்லாமல் எர்ணாகுளத்திலிருந்து  புதுடெல்லி இயக்கப்படும் ரயில்கள்

1. எர்ணாகுளம் -நிஜாமுதீன் வாராந்திர ரயில்

2. எர்ணாகுளம் -நிஜாமுதீன் சொர்ண ஜெயந்தி வாராந்திர ரயில்

3. எர்ணாகுளம் -நிஜாமுதீன் மில்லியனம் வாராந்திர ரயில்

4. எர்ணாகுளம் -நிஜாமுதீன் மங்கள லட்சதீவுகள் தினசரி

5. எர்ணாகுளம் -நிஜாமுதீன்  டொரோண்டோ வாராந்திர ரயில்

இந்த ரயில்களில் திருவனந்தபுரத்தில் இடநெருக்கடி பிரச்சனையாக இருக்கிறது என்று கூறி திருவனந்தபுரம் - நிஜாமுதீன் ரயில் எர்ணாகுளத்துடன் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த ரயிலை கன்னியாகுமரி, திருநெல்வேலி அல்லது தூத்துக்குடிக்கு நீட்டிப்பு செய்ய ரயில்வே அதிகாரிகளுக்கு விருப்பம் இல்லை. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory