» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரியிலிருந்து சைராங் ரயில் நிலையத்துக்கு மதுரை, திருச்சி வழியாக நேரடி வாராந்திர ரயில் இயக்கப்படுமா?

புதன் 10, செப்டம்பர் 2025 3:25:57 PM (IST)

குமரியிலிருந்து மிசோரத்தில் உள்ள சைராங் ரயில் நிலையத்துக்கு மதுரை, திருச்சி வழியாக நேரடி வாராந்திர ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியம் எட்டு மாநிலங்களை உள்ளடக்கியது - அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா - இது நாட்டின் புவியியல் பரப்பளவில் 8 சதவீதம் ஆகும். தற்போது தமிழ்நாட்டிலிருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்னையைத் தவிர வேறு ஊர்களிலிருந்து குறிப்பாக திருச்சி, மதுரை, மற்றும் தென்மாவட்டங்களிலிருந்து நேரடியாக எந்த ஒரு ரயில் சேவையும் இல்லை. 

வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் சென்னை சென்று விட்டு அங்கிருந்து வேறு ரயிலில் பயணம் செய்ய வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள கோவை, ஈரோடு, சேலம், காட்பாடி போன்ற பகுதிகளிலிருந்து நேரடியாக வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல ரயில் சேவை உள்ளது.

சுதந்திரத்திற்குப் பிறகு மிசோரத்தில் உருவாக்கப்பட்டுள்ள ரயில் பாதை திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். ஆகவே இந்தியாவின் தென்கடைசி ரயில் நிலையமான கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி வழியாக மிசோரத்தில் உள்ள சைராங் ரயில் நிலையத்துக்கு வாராந்திர ரயில் சேவை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. கன்னியாகுமரி, இந்தியாவின் தெற்கேற்றமான ரயில் நிலையமாக இருப்பதால், இது தேசிய ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும். கன்னியாகுமரி, இந்தியாவின் தெற்கேற்றமான ரயில் நிலையமாக இருப்பதால், இது தேசிய ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும்.

தற்போது கன்னியாகுமரியிலிருந்து வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள திப்ருகருக்கு தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில் இவ்வாறு இயக்கப்பட்டாலும் இந்த ரயிலில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பயணிகள் பயணம் செய்வது கிடையாது. இந்த ரயில் கேரளா வழியாக சுமார் 200 கி.மீ சுற்றுப்பாதையில் கேரளா பயணிகளுக்காக இயங்குகின்ற காரணத்தால் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து ஒரு பயணிகள் கூட பயணம் செய்வது கிடையாது. ஆனால் இந்த ரயில் மதுரை, திருச்சி, சென்னை வழியாக இயக்கப்படும் பட்சத்தில் அதிகமான பயணிகள் பயணம் செய்வார்கள். 

தற்போது தாம்பரத்திலிருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு இயக்கப்படும் இரண்டு வாராந்திர ரயில்களை (தாம்பரம் - நியூ டிஸ்கின்யா மற்றும் தாம்பரம் - சில்காட் டவுன்) விழுப்புரம், திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கப்படும் பட்சத்தில், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 15 மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகளுக்கு வடகிழக்கு மாநிலங்களுக்கு நேரடி ரயில் வசதி கிடைக்கும். இந்த தடங்களில் ரயில்களை இயக்கி பயணிகளின் வருகை மற்றும் வருவாய் பார்த்து வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அனைத்து தலைநகரங்களுக்கும் கன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருச்சி, சென்னை வழியாக நேரடியாக ரயில்கள் இயக்க ரயில்வேதுறை முன்வரவேண்டும்.

இந்தியா சுதந்திரமடைந்து 78 ஆண்டுகள் முடிந்துள்ள போதிலும், மிசோரமின் தலைநகர் ஐஸ்வால் இன்னும் ரயில் போக்குவரத்துடன் இணைக்கப்படவில்லை. மிசோரமில் அசாமின் சில்சாரை இணைக்கும் 1.5 கிமீ மீட்டர் கேஜ் ரயில் பாதை மட்டுமே இருந்தது. பைராபி முதல் சைராங் வரையிலான கேஜ் மாற்றம் மற்றும் நீட்டிப்பு 2008-09ல் தொடங்கியது. வடகிழக்கு மாநிலமான மிசோரமின் பைராபி – கோலாசிப் மாவட்டத்தின் சைராங் வரையே 51 கிலோமீட்டர் தூரத்துக்கு ரயில் பாதை அமைக்க கடந்த 1999ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. 

அடர்ந்த காடுகள், வெளிச்சமில்லாதது, உள்ளூர் பிரச்சினைகளால் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது சிரமம் எனக் கண்டறியப்பட்ட நிலையில், 2003ஆம் ஆண்டு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. மிசோரம் ரயில் திட்டத்தை 2008ஆம் ஆண்டு தேசிய திட்டம் என்று அப்போதைய அரசு அறிவித்தது. இந்தத் திட்டம் வடகிழக்கு மாநிலங்களின் அனைத்து தலைநகரங்களையும் ரயில் மூலம் இணைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. பின்னர் 2014ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பிரதமர் மோடி இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன.

மிசோரம், கடல் இணைப்பில்லாத மாநிலமாக இருப்பதால், தற்போது விமான பயணம் மற்றும் ஐசால் நகரிலிருந்து சில்சாருக்கு ஐந்து மணி நேர பயணமாக உள்ள சாலைப் பயணத்தைப் பெரிதும் சார்ந்துள்ளது. புதிய ரயில் இணைப்பு பயண நேரத்தை 1.5 மணி நேரமாகக் குறைக்கும் மற்றும் போக்குவரத்து செலவுகளைக் குறைக்கும். 

இது சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் மற்றும் சாலை சரக்கு போக்குவரத்து மீதான சார்பை குறைக்கும். இந்தியாவால் நிதியளிக்கப்பட்ட மியான்மரின் சிட்வே துறைமுகத்திலிருந்து பொருட்களை மாற்றுவதற்கு உதவும். இந்த ரயில் இணைப்பு ஆசியான் நாடுகளுடனான இணைப்பை மேம்படுத்தி, இந்தியாவின் இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு இலக்குகளை ஆதரிக்கிறது.

51 கிலோமீட்டர் தூர ரயில் பாதையில், 5 ரயில் நிலையங்கள், 48 சுரங்கப் பாதைகள், 55 பெரிய மற்றும் 87 சிறிய பாலங்கள், 5 சாலை மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ரூ.8,071 கோடி செலவில் உருவான இப்பாதை ஐஸ்வாலை அசாமின் சில்சார் நகரத்துடனும், நாட்டின் பிற பகுதிகளுடனும் இணைக்கும். இந்த இரண்டு நகரங்களுக்கு இடையில் சாலை வழிப் பயணம் என்பது கிட்டத்தட்ட 10 மணி நேரம் வரை ஆகும். 

ஆனால், புதிய ரயில் பாதை வழி ஒன்றரை மணி நேரத்தில் சென்றுவிடலாம். அதன் வாயிலாக, நம் அண்டை நாடான மியான்மருக்கு புதிய ரயில் பாதை இணைப்புக்கு அடித்தளமிட்டுள்ளது இந்திய ரயில்வே. இந்தியாவில் மிசோரம் மாநிலம் சைராங்கிலிருந்து மியான்மர் நாட்டின் எல்லை பகுதியான ஹிபிச்சுவாவுக்கு 223 கி.மீ. தூரம் புதிய ரயில் பாதை அமைப்பதற்கான 'சர்வே' பணி முடிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

GaneshSep 11, 2025 - 11:09:59 AM | Posted IP 162.1*****

தெற்கு ரயில்வே தமிழகத்திற்கு தேவையான பயணிகள் ரயில் மற்றும் ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தவே முயற்சிக்க மாட்டார்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory