» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

படிக்க விரும்பும் படிப்புகள் குறித்து திட்டமிடுங்கள் : மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

வெள்ளி 12, செப்டம்பர் 2025 11:07:51 AM (IST)



மாணவர்கள் தாங்கள் படிக்கவிருக்கும் படிப்புகள் குறித்து திட்டமிட வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுரை வழங்கினார்.

துத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், கவியரசு அண்ணாமலை ரெட்டியார் நினைவு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கலந்து கொண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் தெரிவித்ததாவது : தூத்துக்குடி மாவட்டத்தில், பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிற உயர்வுக்கு படி என்ற வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் நடைபெறக்கூடிய உயர்வுக்கு படி என்ற வழிகாட்டி நிகழ்ச்சியின் முதல் கட்டத்தின் இறுதி நிகழ்ச்சி விளாத்திகுளம், புதூர் ஆகிய ஒன்றியங்களுக்கு இன்றையதினம் நடைபெறுகிறது. 

இந்த இரண்டு ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 200 உயர்கல்வி சேராத மாணவர்கள் உள்ளனர். மொத்தமாக இங்கு இருக்கக்கூடிய 12 பள்ளிகளில் உள்ள 200 மாணவர்கள் உயர்கல்வியில் சேராமல் இருக்கின்றனர். மே மாதத்திலிருந்து நமது மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு மாணவர்களுக்கும் உயர்கல்வி குறித்து வழிகாட்டுவதற்காக கல்லூரி கனவு என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்னர் அதற்கேற்ற வகையில் என்னென்ன படிப்புகள் படிக்கலாம் என்பதற்கான வழிகாட்டி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. 

மேலும், கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் நாள், கலந்தாலோசனை உள்ளிட்ட சேர்க்கை தொடர்பான விபரங்கள் குறித்து மாணவர்களுக்கு தொடர்ந்து தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும், வழிகாட்டி ஆசிரியர்களும் தெரிவித்தனர். இதன் தொடர் முயற்சியாக, நமது மாவட்டம் மாநிலத்திலேயே மிக அதிக அளவில் மாணவர்களை உயர்கல்வியில் பயிலுவதற்கு சேர்த்த மாவட்டமாக திகழ்கிறது. 92 சதவீதத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 8 சதவீதமுள்ள மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மாணவர்கள் ஏன் இன்னும் கல்லூரியில் சேரவில்லை, அவ்வாறு சேருவதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் உதவி செய்வதற்காக தான் இது போன்ற உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு காரணங்களால் மாணவர்கள் உயர்கல்வியில் சேராமல் இருக்கலாம். அவற்றையெல்லாம் சரிசெய்து , நாம் ஏன் உயர்கல்வி படிக்க வேண்டும்? எவ்வாறு அது நமக்கு உதவி செய்யும்? என்பதற்காக தான் இந்த வழிகாட்டி நிகழ்ச்சி. பெரும்பாலான மாணவர்கள் உயர்கல்வி சேராமல் இருப்பதற்கு சில படிப்புகள் படிப்பதற்கான சேர்க்கைக்காக காத்திருக்கலாம் அல்லது பி.எஸ்.சி (நர்ஸிங்), துணை மருத்துவ படிப்புகள் போன்ற படிப்புகள் படிப்பதற்காக இருக்கலாம். 

எனவே, மாணவர்கள் எந்த கல்லூரிகளில் சேரலாம் என்பதை தீர்மானித்து வைத்திருக்க வேண்டும். மாணவர்கள் துணை மருத்துவ படிப்புகளுக்கு வாய்ப்புகள் கிடைக்காதபட்சத்தில் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தூத்துக்குடி மருத்துவக்கல்லூரியில் துணை மருத்துவ படிப்புகளுக்காக 167 இடங்கள் உள்ளன. எனவே மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மாணவர்கள் விருதுநர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட எந்த மருத்துவ கல்லூரிகளில் விருப்பமுள்ளதோ அங்கு விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப்பித்து சேரலாம். விண்ணப்பிப்பதற்கு இறுதி நாள் 12.09.2025. மாணவர்கள் இந்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

துணை மருத்துவ படிப்புகளான அவசர சிகிச்சை பிரிவு டெக்னிசியன், ரெஸ்பிரட்டரி தெரபி டெக்னிசியன், இசிஜி மற்றும் இஎம்ஜி குறித்த படிப்புகள், டயாலிஸிஸ் டெக்னிசியன், அனஸ்தீசியா டெக்னிசியன். அறுவைசிகிச்சை அரங்கில் உதவி செய்யக்கூடிய பாடப்பிரிவு, ஆர்தோபிடியன் டெக்னிசியன், ஹோம் ஹெல்த் கேர் பிரிவு உள்ளிட்ட படிப்புகளுக்கான இடங்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரிகளில் உள்ளன. 

நேற்றையதினம் ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியின் வாயிலாக திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் மாணவர்களுக்கு இடங்கள் கிடைத்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை முதன்மை கல்வி அலுவலர் கூறினார். மதுரை மருத்துவக்கல்லூரியில் மொத்தமாக 246 இடங்களும், விருதுநகரில் 11 இடங்களும் உள்ளன. அவற்றையும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு மாணவர்கள் துணை மருத்துவ படிப்புகள் படிக்கின்ற பட்சத்தில் மருத்துவம் சார்ந்த துறைகளில் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கின்ற சூழ்நிலை ஏற்படும். 

மேலும், மாணவர்கள் பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ சார்ந்த படிப்புகளில் சேரலாம். குறிப்பாக எட்டயபுரம், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பல்வேறு பிரிவுகளில் 150க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளது. சமீபத்தில் தொடங்கப்பட்ட Vinfast கார் நிறுவனத்தில் நமது மாவட்டத்திலிருந்து மட்டும் பாலிடெக்னிக் முடித்த அதிக மாணவர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வேலைக்கு சென்றுள்ளனர். இதுபோன்ற பல புதிய தொழிற்சாலைகள் நமது மாவட்டத்திற்கு வரவுள்ளது. 

பாலிடெக்னிக் முடித்தவுடன் உடனடியாக வேலைவாய்ப்பு பெறுவதுடன் அடுத்தடுத்த நிலைக்கு பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும், மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் சேர்ந்து உயர்கல்வி பயிலலாம். குறிப்பாக விளாத்திகுளத்திற்குட்பட்ட இப்பகுதியில் 4 அரசு கலை மற்றும் அறிவியல் உள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் சேர்க்கை நிறைவடைகின்ற நிலையில் உள்ளது. 

மாணவர்கள் இந்த வாய்ப்புகளை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், மாணவர்கள் தாங்கள் படிக்கவிருக்கும் படிப்புகள் குறித்து திட்டமிட வேண்டும். எந்தவொரு மாணவரும் படிக்காமல் இருக்கக்கூடாது. மாணவர்களாகிய உங்களுக்கு படிப்பதற்கு என்ன தடைகள் வந்தாலும் அதனை தீர்ப்பதற்கும் நாங்கள் தயராக இருக்கின்றோம். 

அரசின் சார்பாக பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசு, உயர்கல்வி படிக்கின்ற மாணவ மாணவியர்களுக்கு மாதந்தோறும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவியர்களுக்கு ரூ. 1000 உதவித் தொகையும், தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரூ. 1000 உதவித் தொகையும் வழங்கி வருகிறது. 

மேலும் பொருளாதார சூழ்நிலை காரணமாக கல்வி கட்டணம் செலுத்த முடியாத 150க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் என்ற வகையில் மாவட்ட நிர்வாகத்திலிருந்து நானே கல்வி கட்டணம் செலுத்தி வருகிறேன். கல்வி கட்டணம் செலுத்த முடியவில்லை என்ற காரணத்தினால் எந்தவொரு மாணவரும் படிக்காமல் இருக்கக்கூடாது. பொருளாதார சிக்கல்களை தீர்த்து விடலாம். 

எனவே, மாணவர்கள் படிப்பதற்காக நிதியுதவி உள்ளிட்டவை தேவைப்படும்பட்சத்தில் முதன்மை கல்வி அலுவலர் அவர்களையோ, வழிகாட்டி ஆசிரியர்களையோ தயக்கமில்லாமல் அணுகலாம். ஒவ்வொரு மாணவர்களுக்கான தேவைகள் குறித்து நாள்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூலம் எனக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளில் எந்தவொரு மாணவரும் விடுபடாமல் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பயிலுவதற்கு சேர்க்க முயற்சி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், மரு. நித்திலா, ஐ.ஆர்.எஸ்., உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ் ராம், முதன்மை கல்வி அலுவலர் (பொ) து.சிதம்பரநாதன், பேராசிரியர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

வேலை இல்லாதவன்Sep 12, 2025 - 11:46:09 AM | Posted IP 162.1*****

அப்போ அரசியல்வாதிகள் எல்லாம் படிக்காமல், கஷ்டப்பட்டு படித்தவர்களை விட கோடி கோடியாக பணம் சம்பாதிப்பது எப்படி சொல்லுங்களேன்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory