» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கார் ஏற்றி முதியவரை கொன்ற பேரூராட்சி தலைவர் கைது : விபத்து நாடகமாடியது அம்பலம்

வெள்ளி 12, செப்டம்பர் 2025 11:20:53 AM (IST)

திருப்பூர் அருகே, முதியவரை கார் ஏற்றி கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடிய பேரூராட்சி தலைவரை போலீசார் கைது செய்தனர். 

திருப்பூர் அருகே உள்ள மங்கலம் கருகம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (60). நேற்று முன்தினம் இவர், கருகம்பாளையத்தில் உள்ள பள்ளி அருகே ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில், ஸ்கூட்டருக்கு பின்னால் கார் ஒன்று வந்தது. அந்த காரை தி.மு.க.வை சேர்ந்த சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி (60) ஓட்டி வந்தார். அப்போது திடீரென ஸ்கூட்டர் மீது கார் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் ஸ்கூட்டரை ஓட்டி வந்த பழனிச்சாமி பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பழனிச்சாமியை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் மங்கலம் போலீசார் விரைந்து வந்து பலியான பழனிச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் உயிரிழந்த கருகம்பாளையம் பழனிச்சாமியின் குடும்பத்தினர் மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரில் "சாமளாபுரம் பேரூராட்சி கருகம்பாளையம் பகுதியில் தார்சாலை அமைப்பது தொடர்பாக கருகம்பாளையம் பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் இவருக்கும், பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக பேரூராட்சி தலைவர் விநாயகாபழனிச்சாமி தனது காரை ஸ்கூட்டர் ஓட்டிவந்த கருகம்பாளையம் பழனிச்சாமி மீது ஏற்றி கொலை செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதையொட்டி போலீசார் விநாயகா பழனிச்சாமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தார்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கருகம்பாளையம் பழனிச்சாமி மீது காரை ஏற்றி கொன்று விட்டு விபத்து என நாடகமாடியதாக தெரிவித்தார். இதையடுத்து விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory