» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மத்திய பா.ஜனதா அரசு நெடுநாள் நீடிக்காது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:49:10 AM (IST)
மத்திய பா.ஜனதா அரசு நெடுநாள் நீடிக்காது, மாநில உரிமையை காக்கும் ஆட்சி நிச்சயம் ஒருநாள் அமையும்’ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று ஓசூர் சென்றார். அங்கு அவருக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் வேன் மூலம் ஓசூர், சூளகிரி, குந்தாரப்பள்ளி வழியாக கிருஷ்ணகிரி வந்தடைந்தார். சிறிது தூரம் ‘ரோடு ஷோ' நடத்தினார். அப்போது அவருக்கு வழிநெடுகிலும் தி.மு.க.வினரும், பொதுமக்களும் அணிவகுத்து நின்று வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் அரசு விழா நடந்தது. இதில் ரூ.2 ஆயிரத்து 885 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மீது அதை பொறுப்பேற்று நடத்திக்கொண்டிருக்கக்கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாக இருக்கக்கூடிய என் மீது மக்கள் காட்டக்கூடிய பாசம், அன்பை தாங்கிக்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான எந்த விமர்சனத்தையும் வைக்க முடியாமல், வயிற்றெரிச்சல் காரணமாக, தி.மு.க. தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பிறகு, நாங்கள் கொடுத்திருக்கக்கூடிய வாக்குறுதிகள் மட்டுமல்ல, காலை உணவு, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 என இன்னும் பல திட்டங்களை தேர்தல் அறிக்கையில் சொல்லாமலேயே செயல்படுத்திக்கொண்டு வருகிறோம்.
பொய்களை பரப்புவதும், களங்கம் கற்பிப்பதும்தான், காலங்காலமாக அவர்களுடைய அரசியல். கொள்கையற்ற அந்தக் கூட்டத்திற்கு அதைத் தாண்டி ஒன்றும் தெரியாது. மலிவான அரசியல் செய்கின்ற அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றாலும், வாக்களித்த மக்களான உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் எங்களுக்கு உண்டு. அதை நான் உணர்கிறேன்.
அதனால்தான், நம்முடைய அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கோவி.செழியன், சிவசங்கர் ஆகிய 3 அமைச்சர்களும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிருபர்களை எல்லாம் வரவழைத்து நேருக்கு நேராக உட்கார வைத்து, மிகத்தெளிவாக எடுத்துச் சொன்னார்கள்.
தி.மு.க. வழங்கிய 505 தேர்தல் வாக்குறுதிகளில், 364 நிறைவேற்றி செயல்பாட்டில் இருக்கிறது. 40 அறிவிப்புகள் அரசின் பரிசீலனையில் இருக்கிறது. அந்தவகையில், மொத்தம் 404 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இது இல்லாமல், ஒன்றிய அரசின் பரிசீலனைக்காக நிலுவையில் இருப்பது 37 திட்டங்கள். 64 திட்டங்கள் இப்போதைக்கு நிதியின் காரணமாக எடுத்துக்கொள்ள இயலாத திட்டங்களாக இருக்கிறது என்று துறைவாரியாக பிரித்து, தெளிவாக மக்களுக்கு விளக்கிச் சொன்னார்கள்.
நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில், ‘நீட்’ விலக்கு போன்ற வாக்குறுதிகளை இப்போதைக்கு எங்களால் நிறைவேற்ற முடியவில்லை. நாங்கள் மறுக்கவில்லை. இப்போதைக்கு நிறைவேற்ற முடியவில்லை. அதற்காக நாங்கள் முயற்சி செய்யாமல் இருக்கிறோமா?. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் ‘நீட்’ விலக்குக்கு சட்டசபையில் சட்டம் இயற்றி அனுப்பினோம்.
அதை என்ன மாதிரியான சூழ்ச்சிகளை எல்லாம் செய்து கவர்னர் மூலமாக தடுத்தார்கள். இது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். அப்போதும் கடுமையான சட்டப்போராட்டம் நடத்தினோம். அடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் வந்ததும், ஒன்றியத்தில் நமக்கு ஆதரவான அரசு அமையும் என்ற நம்பிக்கையுடன் போராடினோம்.
தமிழ்நாட்டின் உணர்வை புரிந்துகொண்டு, ராகுல்காந்தியும் தமிழ்நாட்டுக்கு ‘நீட்’ விலக்கு அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால், மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. அதுவும் பெரும்பான்மை ஆட்சி கிடையாது. சிலருடைய ஆதரவுடன் ‘மைனாரிட்டி’ ஆட்சியாகத்தான் அமைத்திருக்கிறார்கள். நாட்டு மக்களுக்கு எதிரான அவர்களுடைய ஆட்சி நெடுநாள் நீடிக்காது. நான் உறுதியாக சொல்கிறேன். நிச்சயம் ஒருநாள் நம்முடைய மாநிலத்திற்கான உரிமைகளை காக்கும் ஆட்சி மத்தியில் அமையத்தான் போகிறது.
‘திராவிட மாடல்’ ஆட்சியில் எவ்வளவு முதலீடுகள் வந்திருக்கிறது. எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று தெளிவாக சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம்! இது எதுவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காதில் விழவில்லை. 10 ஆண்டு காலம் அ.தி.மு.க. ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றிய வாக்குறுதிகள் என்னவென்று அவரால் பட்டியலிட்டு சொல்ல முடியுமா?.
அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டுகாலம் சீர்கெட்ட நிர்வாகத்தில், தொழில் முதலீட்டாளர்கள் தலைதெறிக்க அண்டை மாநிலங்களுக்கு ஓடினார்களே, மறக்க முடியுமா?
அந்த நிலைமையை அப்படியே தலைகீழாக நாம் மாற்றி இருக்கிறோம். பழனிசாமியும் தன்னுடைய ஆட்சிக்காலத்தில், முதலீட்டாளர் மாநாடு நடத்தினார். ஒப்பந்தமும் கையெழுத்தானதாக சொன்னார்கள். அதில் பாதி கூட வரவில்லையே?. அவரும் வெளிநாடு சென்றார். முதலீடுகளை ஈர்த்துவிட்டோம் என்று சொன்னார். ஆனால் கையெழுத்தாகி இருப்பதில் கால்வாசி கூட செயல்பாட்டுக்கு வரவில்லையே?.
ஆனால், நாம் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிநாடுகளுக்கு சென்று ஒப்பந்தமிட்டதில், 77 விழுக்காடு நிறுவனங்கள் வந்திருக்கிறது. மீதமுள்ளவையும் தொடங்கக்கூடிய பணியில் இருக்கிறது. நான் உறுதியோடு சொல்கிறேன். தமிழ்நாட்டை, இந்திய அளவில் இல்லை, தெற்காசியாவில் முன்னேறிய மாநிலமாக நிச்சயம் உருவாக்கிக் காட்டுவேன். இதுதான் என்னுடைய உறுதி.
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம். அடுத்து நம்முடைய திராவிட மாடல் ஆட்சிதான். மக்கள் தயாராக இருக்கிறார்கள். தி.மு.க.வின் மக்களாட்சி காலமெல்லாம் தொடரும், தொடரும். தமிழ்நாடு மேலும், மேலும், வளரும், வளரும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழக வெற்றிக் கழகம் தற்குறிகளால் நிறைந்து இருக்கிறது: விஜயை விமர்சித்த சீமான்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:07:44 PM (IST)

மரக்கடையில் விஜய் பிரசாரத்தால் ரூ.1¼ லட்சம் சேதம்: தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:00:41 PM (IST)

ஒழுக்கத்துடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் : மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 10:19:25 AM (IST)

மைசூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க கோரிக்கை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 10:12:10 AM (IST)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. ஆய்வு
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:07:13 AM (IST)
