» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்: திரைத்துரையினர் இரங்கல்

வெள்ளி 19, செப்டம்பர் 2025 10:27:15 AM (IST)

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார். அவரது மறைவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர். 

மதுரையை சேர்ந்த ரோபோ சங்கர் காமராசர் பல்கலைக்கழத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். பள்ளி, கல்லூரி நாட்களிலேயே மிமிக்ரி உள்ளிட்ட திறமைகளை வளர்த்துக் கொண்ட சங்கர், சுற்றுவட்டார கிராமங்களில் திருவிழாக்களில் நடக்கும் மேடை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். கட்டுமஸ்தான உடலில் வெள்ளை நிற சாயம் பூசிக் கொண்டு ரோபோ போல நடனமாடியதால் இவருக்கு ரோபோ சங்கர் என்ற பெயர் கிடைத்தது.

இதுபோன்ற மேடை கலைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது விஜய் டிவியில் தொடங்கப்பட்ட ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரோபோ சங்கர் மட்டுமின்றி தற்போது மதுரை முத்து, சிவகார்த்திகேயன் போன்றோரும் பிரபலமடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் சுட்டி அரவிந்துடன் சேர்ந்து ஜோடியாகத்தான் ரோபோ சங்கர் தோன்றுவார். ‘ஒரு கிளி உருகுது’ பாடலுக்கு இருவரும் சேர்ந்து 80-களின் நடனத்தை ரீ-கிரியேட் செய்தது அப்போது பெரும் வரவேற்பை பெற்றது.

பின்னர் அதே விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய ‘அது இது எது’ நிகழ்ச்சியில் ‘சிரிச்சா போச்சு’ என்ற சுற்றில் தொடர்ந்து ரோபோ சங்கரின் நகைச்சுவை இடம்பெறும். ஒருபக்கம் டிவி நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தாலும் 90-களின் இறுதி முதலே சின்ன சின்ன ரோல்களில் திரைப்படங்களில் தலைகாட்டி வந்தார் ரோபோ சங்கர். 

இவர் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம், தனுசுடன் மாரி, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் என முன்னணி நடிகர்கள் படங்களிலும் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்தார். 

விஷ்ணு விஷால் நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் அவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகின. குறிப்பாக படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன்பாக ‘அன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும்’ என்ற வசனத்தை திரும்ப திரும்ப பேசி ரவி மரியா கும்பலை கதற விடும் காட்சிக்கு சிரிக்காதவர்களே இருக்க முடியாது. இப்படத்துக்குப் பிறகு முக்கிய நகைச்சுவை கதாபாத்திரங்கள் ரோபோ சங்கரை தேடி வந்தன. 

இதனிடையே, உடல்நலக்குறைவு காரணமாக உடல் மெலிந்து காணப்பட்ட ரோபோ சங்கர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது நேற்று திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீர்சத்து குறைவு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக ரோபோ சங்கருக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

நேற்று மாலை அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், அவரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றினர். ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவருக்கு கல்லீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இவர் சினிமாவில் விஜய், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உட்பட பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது மனைவி ப்ரியங்காவும் சின்னத்திரை நடிகையாக உள்ளார். இவர்களின் மகள் இந்திரஜா, 'பிகில்' படத்தில் விஜயுடன் நடித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில், ரோபோ சங்கரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட உள்ளது. அவரது மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory