» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்!
வியாழன் 25, செப்டம்பர் 2025 3:59:33 PM (IST)

சாலை விபத்தில்லா குமரி மாவட்டம் உருவாகிட பொதுமக்கள் சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றி முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்டாலின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் –
சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாதாந்தோறும் கன்னியாகுமரி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஆகஸ்டு மாதம் வாகன விபத்துக்களால் ஏற்பட்ட 26 இறப்புகள் குறித்து ஆராய்ந்தபோது குறிப்பாக மதுபோதையில் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டி அதனால் விபத்து ஏற்பட்டு 11 இறப்புகள் ஏற்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாததால் 3 இறப்புகள் ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர் கவனக் குறைவு மற்றம் தூக்க கலக்கத்தினால் 9 இறப்புகள் ஏற்பட்டுள்ளது. 18 வயதிற்கு கீழ் வாகனம் ஓட்டியதால் 1 இறப்பு ஏற்பட்டுள்ளது. சாலையில் போதிய எச்சரிக்கை பலகை, வெள்ளைநிற வேகக்கட்டுபாடு கோடுகள் இல்லாததால் 2 இறப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆகஸ்டு மாதம் 91 மற்ற விபத்துகளும் ஏற்பட்டன. அதுகுறித்தும் விபத்துக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யபட்டது. எனவே வாகன ஓட்டுனர்கள் மது அருந்திவிட்டு அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதாலும், போக்குவரத்து விதிமுறைகள் முறையாக பின்பற்றாமல் இருப்பதாலும், ஓய்வின்றி வாகனங்களை இயக்குவதாலும் அதிக அளவில் விபத்துகள் நடந்துள்ளது கண்டறியப்பட்டது. எனவே இதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு பலகைகள் வைத்திடவும் காவல்துறை மற்றும் போக்குவரத்துதுறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
விபத்து பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை, வட்டார போக்குவரத்துறை மற்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள், விழிப்புணர்வு பலகைகள், வேக கட்டுப்பாடு பலகைகள் மற்றும் சாலையோர போக்குவரத்து சின்னங்கள் வைத்திடவும் சாலைகளில் தேவையான வெள்ளை நிற கோடுகள் மற்றும் மஞ்சள் நிற மையக்கோடுகள், வெள்ளை வேகக்கட்டுபாடு கோடுகள் அமைத்தல், சாலைகளின் நடுவில் தேவையான மையத்தடுப்பான்கள் ஏற்படுத்துதல், மரங்கள் மற்றும் மின்கம்பங்களில் ஒளிரும் பட்டைகள் அமைத்தல் போன்ற சாலை பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொண்டிடவும், சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றிடவும், சாலையோர புதர்கள் அகற்றப்படுவதை தொடர்ச்சியாக கண்காணித்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
வாகன விபத்துக்களை தடுத்திடும் பொருட்டு, பொதுமக்கள் வாகனங்களை ஓட்டும்போது விபத்துகளை தடுத்திடும் பொருட்டு, வாகனம் ஓட்டுநர் 8 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து வாகனங்களை ஓய்வின்றியும் இயக்க கூடாது. அதிவேகத்திலோ ஹெல்மட் அணியாமலோ இருசக்கர வாகனம் இயக்கக்கூடாது. நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சீட்பெல்ட் அணிந்து செல்ல வேண்டும். ஓட்டுநர்கள் வாகனங்கள் ஓட்டும்போது மது மற்றும் போதைப்பொருள்கள் பயன்படுத்தக் கூடாது.
சாலைகளில் உள்ள கடைகளின் முன்பாக கடையின் பெயர் மற்றும் விளம்பர பலகைகள் வைக்ககூடாது. அவ்வாறு வைக்கப்படும் பெயர் மற்றும் விளம்பர பலகைகள் நெடுஞ்சாலைதுறை மற்றும் உள்ளாட்சிதுறை அலுவலர்களால் அகற்றப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும். மாவட்டத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு குறிப்பிட்டுள்ள இடத்தை தவிர்த்து பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தக்கூடாது. இணைப்பு சாலைகள், நெடுஞ்சாலை ஓரங்களில் வாகனங்களை தேவையின்றி நிறுத்தம் செய்வதை தவிர்த்திட வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில சாலைகள் மற்றும் இதர மாவட்ட சாலைகளில் அதிக விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க குறுகலான சாலைகளில் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமியர் வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இதனை பெற்றோர் கண்காணித்திட வேண்டும். தவறினால் பெற்றோர் மீது காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். சாலை விபத்தில்லா குமரி மாவட்டம் உருவாக்கிட பொதுமக்கள் சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றி முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்பட்டது இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்.
கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுகிதா (பொது), நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, காவல்துறை அலுவலர்கள், போக்குவரத்து காவலர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அம்மன் கோவில்களில் சூரசம்ஹார விழா கோலாகலம் : திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 8:23:01 PM (IST)

கதர் அங்காடிகளில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வியாழன் 2, அக்டோபர் 2025 5:09:57 PM (IST)

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர்... முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 4:21:24 PM (IST)

மத்திய அரசு நிதி விடுவிப்பு: ஆர்டிஇ திட்டத்தில் நடைமுறைகள் தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு
வியாழன் 2, அக்டோபர் 2025 4:06:42 PM (IST)

கடலில் மூழ்கி தந்தை, 2 மகள்கள் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:50:14 PM (IST)

கொள்கை எதிரி: விஜய் எப்படி பாஜகவின் பிடியில் இருப்பார்? நயினார் நாகேந்திரன் கேள்வி!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:44:04 PM (IST)
