» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜி.கே.மணியின் பதவி பறிப்பு: பாமக சட்டமன்ற குழு தலைவராக வெங்கடேஸ்வரன் நியமனம்!
வியாழன் 25, செப்டம்பர் 2025 4:31:27 PM (IST)

பாமக சட்டமன்ற குழு தலைவராக இருந்த ஜி. கே. மணியின் பதவி பறிக்கப்பட்டு அந்த பதவியில் வெங்கடேஸ்வரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க. 5 இடங்களில் வெற்றி பெற்றது. சட்டமன்ற பா.ம.க. தலைவராக ஜி.கே.மணியும், கொறாடாவாக அருளும் இருந்து வந்தனர். இந்த நிலையில், தற்போது பா.ம.க.வில் பிளவு ஏற்பட்டு கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அவரது மகனும், கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.
பா.ம.க.வில் உள்ள 5 எம்.எல்.ஏ.க்களில் ஜி.கே.மணி, அருள் ஆகியோர் டாக்டர் ராமதாஸ் அணியில் உள்ளனர். மற்ற 3 பேரும் டாக்டர் அன்புமணி அணியில் இருக்கின்றனர். இதற்கிடையே, அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந் தேதி தமிழக சட்டசபை கூட இருக்கிறது. எனவே, டாக்டர் அன்புமணி தரப்பினர் வக்கீல் கே.பாலு தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபை செயலாளர் சீனிவாசனை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அதில், சட்டமன்ற தலைவர் பொறுப்பில் இருந்து ஜி.கே.மணியையும், கொறடா பொறுப்பில் இருந்து அருளையும் நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பின்னர், வெளியே வந்த நிலையில், சட்டசபை வளாகத்தில் வக்கீல் கே.பாலு நிருபர்களிடம் கூறியதாவது: பாமக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அருள் எம்எல்ஏ அந்த கட்சியை சேர்ந்தவர் போல பேசி வருவது நிர்வாகிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, அருளை சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே பதிவு செய்ய வேண்டும். பாமகவின் தலைவரின் பதவி காலத்தை நீட்டித்து அதற்கான தீர்மானத்தை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தோம். அவர்கள் எங்களுடைய கோரிக்கைகளை பரிசீலனை செய்து கடந்த செப்டம்பர் 9-ம் தேதி அதற்கான ஒப்புதல் அளித்துள்ளனர். அதில், பாமக அலுவலகம் திலக் தெருவில் இருப்பதையும், பாமகவின் தலைவர் அன்புமணி என்பதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் கட்சியின் சின்னம் வேட்பாளர் ஆகிய ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணிக்கே உள்ளது என்ற அதிகாரம் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது. மாம்பழம் சின்னமும் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் அன்புமணியே தலைவராக ஏற்று செயல்பட்டு வருகின்றனர்.
பாமகவின் சட்டமன்ற குழு தலைவராக இருந்த ஜி. கே. மணியின் பதவி பறிக்கப்பட்டு அந்த பதவியில் வெங்கடேஸ்வரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், பாமக சட்டமன்ற கொறடாவாக விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான கடிதத்தை சட்டமன்ற செயலகத்திடம் அளித்தும் அதற்கான பதில் தற்போது வரை கிடைக்கவில்லை.
அக்டோபர் 14-ம் தேதி நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பாமகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மபுரி வெங்கடேசனுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவுவிடம் தெரிவித்துள்ளோம். இது தொடர்பாக வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பரிசீலனை செய்து உரிய அங்கீகாரத்தை பெற்றுத் தருவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
அனைத்து கட்சி கூட்டம் உள்ளிட்டவற்றுக்கு எங்களையே அழைக்க வேண்டும். பாமக எம்.எல்.ஏ.க்கள் 5 பேரில் 3 பேரின் ஆதரவு அன்புமணிக்கே உள்ளது. கர்நாடகா, டெல்லி, ஆந்திர மாநில தேர்தல்களில் பாமக போட்டியிட்டுள்ளது. எதிர்வரும் பீகார் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே பாமக மாநில இணைப் பொதுசெயலாளர் இரா.அருள், எம்.எல்.ஏ. தமிழ்நாடு தலைமைச்செயலாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் சமீபகாலமாக நெருக்கடியான சூழலும், குழப்பங்களும் நிலவி வருவதை தாங்கள் நன்கு அறிவீர்கள். பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கிய டாக்டர் ராமதஸ் அவர்கள் தொடர்ந்து 46 ஆண்டு காலம் இயக்கம் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் பாமகவினர் மத்தியிலும், பொதுமக்கள், அனைத்து கட்சித்தலைவர்கள்,அரசு அதிகாரிகள் மத்தியிலும் அரசியலில் மூத்த தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் மக்கள் மேம்பாட்டுக்கு, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு வருபவர் என்பதை அனைவரும் அறிவர்.
டாக்டர் ராமதாஸ் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக செயல்பட்டு வருகிறார். தற்போதைய பாமகவின் நெருக்கடியான குழப்பமான சூழ்நிலையில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் அடிக்கடி வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதால் அவருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு போதுமானதாக இல்லை.
எனவே அவருடைய பாதுகாப்பு கருதி முழுநேரமும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வசித்து வரும் தைலாபுரம் தோட்டம் மற்றும் அவர் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் இடங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் தைலாபுரம் தோட்டத்திற்கு டாக்டர் ராமதாஸ் அவர்களை சந்திக்க வருவோர் அனைவரையும் பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்கும் வகையில் நுழைவாயிலில் பரிசோதனை கருவி (Metal detector) அமைத்திட கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அம்மன் கோவில்களில் சூரசம்ஹார விழா கோலாகலம் : திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 8:23:01 PM (IST)

கதர் அங்காடிகளில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வியாழன் 2, அக்டோபர் 2025 5:09:57 PM (IST)

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர்... முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 4:21:24 PM (IST)

மத்திய அரசு நிதி விடுவிப்பு: ஆர்டிஇ திட்டத்தில் நடைமுறைகள் தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு
வியாழன் 2, அக்டோபர் 2025 4:06:42 PM (IST)

கடலில் மூழ்கி தந்தை, 2 மகள்கள் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:50:14 PM (IST)

கொள்கை எதிரி: விஜய் எப்படி பாஜகவின் பிடியில் இருப்பார்? நயினார் நாகேந்திரன் கேள்வி!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:44:04 PM (IST)

MANGOSep 26, 2025 - 03:49:05 PM | Posted IP 104.2*****