» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பட்டாக்களை ரத்து செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் : முன்னாள் அமைச்சர் தலைமையில் மனு!

வியாழன் 2, அக்டோபர் 2025 11:25:28 AM (IST)



தூத்துக்குடியில் பட்டாக்களை ரத்து செய்து வட்டாட்சியருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி 47வது வார்டுக்கு உட்பட்ட லயன்ஸ் டவுன் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டாக்களை ரத்து செய்து அதைச் சுற்றியுள்ள வீடுகளை அப்புறப்படுத்த குடியிருப்புகளுக்கு வழங்கியுள்ள பட்டாக்களை ரத்து செய்ய, தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் வட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது..

மாநகராட்சியின் இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், வட்டாட்சியருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொது மக்கள் அளித்த புகாரின் பேரில், அதிமுக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

ஆட்சியரிடம் அவர் அளித்துள்ள மனுவில்: தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோட்டில் உள்ள காரப்பேட்டை நாடார் ஆண்கள் பள்ளி, தென்பகுதியில் குழந்தை ஏசு கோவில் என்ற சிற்றாலயம் உள்ளது. அதன் முன்புறம் மேற்கு கிழக்காக செல்லும் ஒரு சந்து இந்த ரோட்டில் 15 வீடுகள் உள்ளன. இந்த ரோடு கிழக்கு திசையில் உள்ள லயன்ஸ்டவுன் 4, 5, 6 ஆகிய தெருக்களின் பிரதான சாலையில் சந்திக்கிறது. இந்த சந்திப்பு சாலை தெற்கு திசையாக சென்று கடைசியில் மீண்டும் கிழக்கு மேற்காக சென்று பிரதான தெற்கு காட்டன் ரோட்டில் இணைகிறது. இந்த ரோட்டை ஒட்டிய பகுதியில் சுமார் 20 வீடுகள் உள்ளன. அதேபோல் முதலில் குறிப்பிட்ட குழந்தை ஏசு கோவில் ஒட்டி தெற்கு காட்டன் பிரதான சாலை அதிலிருந்து தெற்காக சென்று இறுதியில் உப்பளங்கள் உள்ள இடத்தில் முடிவு பெறுகிறது. இந்த ரோடு பகுதியில் சுமார் 20 வீடுகள் உள்ளன. இப்படியாக இந்த பகுதியில் மொத்தம் கிட்டதட்ட 55 வீடுகளில் நாங்கள் வசித்து வருகிறோம்.

ஆதியில் 1951ம் ஆண்டுகளில் இந்த பகுதி முழவதும் மத்திய அரசின் உப்பு இலாக்காவிற்கு சொந்தமான உப்பு உற்பத்தி செய்யும் இடமாக இருந்துள்ளது. இந்த இடம் சுமார் 3 ஏக்கர் 14 சென்ட் உப்பு நிலமாகும். இந்த இடம் முழுமையும் ஆதியில் மத்திய அரசிடமிருந்து உப்பளமாக குத்தகை அடிப்படையில் .கைத்தான்வில்லவராயர் என்பவர் பெற்று அனுபவித்து வந்து உள்ளார். இந்த குறிப்பிடப்பட்ட இடத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே கைத்தான் வில்லவராயர் காலத்தில் நான்கு திசையிலும் ஆங்காங்கே குடியிருப்புகள் இருந்துள்ளன. எங்களின் மீவை மக்கள் இந்த குடியிருப்புகளில் வசித்து வந்துள்ளனர்.

இக்குடியிருப்பு வாசிகளின் எதிர்காலத்திற்கு உதவிடும் வகையில் நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ளபடி அந்த புலஎண்களுக்கான நிலத்தை ஒதுக்கி வைத்துக் கொண்டு கைத்தான் வில்லவராயர் அந்த நிலங்களுக்கு அடுத்த நிலப்பகுதியை காளியப்ப நாடார் என்பவருக்கு உப்பு தொழில் செய்து வர அவருக்கு உள்வாடகைக்கு கொடுத்துள்ளார்.

கைத்தான வில்லவராயருக்கு பின்பு அவரது மகன் சூசையா வில்லவராயர் 25 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வாழ்வாதாரரும் கருதி, நாங்கள் தற்போது அனுபவித்து வரும் இந்த இடத்தை எங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இவ்வீடுகளில் வசிப்பவர்கள் நாங்கள் பெரும் அளவில் பணம் செலவு செய்து வீடுகளை கட்டி வாழ்ந்து வருகிறோம். தூத்துக்குடி நகர சர்வேயர்கள் இவ்மீனவ மக்களின் அனுபவத்தில் உள்ள இடங்களை அளந்து நான்கு மால் காட்டி, அவர்கள் பெயர்களை 10(1) அடங்களில் கணக்கில் எங்களுக்கு பட்டா பாஸ்புத்தகங்கள் வழங்கியுள்ளார்கள். இந்த இப்பகுதி மக்களுக்கு தூத்துக்குடி மாநகராட்சி மின்விளக்கு, ரோடு வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. சேர்த்து 06.11.1991ல்

மேலும் தூத்துக்குடி மாநராட்சிக்கு நாங்கள் வீட்டுத்தீர்வை, தண்ணீர் தீர்வை, நிலவரி ஆகிய வரி இனங்களை நாங்கள் செலுத்தி வருகிறோம். இவ்வீட்டு விலாசங்களில் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவைகளை பெற்றுக் கொண்டுள்ளோம். மேலே நாங்கள் குறிப்பிட்டுள்ளபடி கைத்தான் வில்லவராயர் உள்வாடகைக்கு ஒரு நிலப்பகுதியை காளியப்ப நாடார் என்பவருக்கு கொடுத்திருந்தார் என்ற விபரங்கள் தொடர்ச்சியாக அவர் அந்த இடத்தை அனுபவித்து வந்த நிலையில் அதனை 3 பகுதிகளாக பிரித்து, தனது மகன்களான .ராஜாரம், .ரகுராம், விஷ்ணுராம் ஆகியோர்களுக்கு கொடுத்துள்ளார்.

ஆகிய இதில் .ராஜாராம் என்பவருக்கு 1140, 1141 புலஎண்களுக்கான இடம் கிடைக்க பெற்றுள்ளது. இவர் காலபோக்கில் தனக்கு கிடைத்த அந்த நிலங்களுக்கு தான் உரிமையாளர் என 1987ம் ஆண்டுகளில் போலியாக ஆவணங்களை தயார் செய்து கொண்டுள்ளார். அதன்பிறகு அவைகளை குடியிருப்பு பகுதி என்பதாக பிளாட்டுகள் காட்டி அப்போதைய திருநெல்வேலி நகரமைப்பு துறையில் 96/87 என்ற பிளான் கொடுத்து பிளாட் அப்ரூவல் வாங்கியுள்ளார். மொத்தம் 31 பிளாட்களை அவர் ஏற்படுத்தி கொண்டுள்ளார். இதில் இவர் தற்போது வரை 28 பிளாட்டுகளை விற்பனை செய்து பணம் பெற்றுள்ளார். அவர் கைவசம் 3 பிளாட்டுகள் விற்க முடியாத நிலையில் அவரிடம் உள்ளது.

இந்த 3 பிளாட்டுகளும் தெற்கு காட்டன்ரோடு குழந்தை ஏசு சிற்றாலயம் பகுதி ரோட்டில் நாங்கள் குடியிருக்கும் 15 வீடுகளுக்கு பின் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பிளாட்டுகளுக்கு பாதை இல்லாததால், அந்த இடங்களை அவரால் விற்பனை செய்ய முடியவில்லை இதனால் நாங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள விபரப்படி நாங்கள் குடியிருந்து வரும் 55 வீடுகளுக்கு முன்புறபகுதியில் அமைந்துள்ள ரோடுகள் 40அடி ரோடுகளுக்கு நகராட்சி ஒதுக்கியுள்ள இடங்கள் என்றும், அதில் வீடுகளை கட்டி ரோட்டை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்றும், இவைகளை அகற்றப்பட வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவுகள் பெற வேண்டி 2005ம் ஆண்டு முதல் திரு.ராஜாராம் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் போட்டு வந்துள்ளார். இவருக்கு எதிர் வழக்காக போராடி வந்த எங்களுக்கு கடை ஆணை ஒன்றை நீதிமன்றம் வழங்கி இருந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை 22.12.2021ல் "மீண்டும இடைக்கால தடை அப்படியே உள்ளது" என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இவ்வாறான நிலையில் திடீரென தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் ராஜாராமுக்கு ஆதரவான நிலைப்பாடாக ரோட்டை விரிவாக்கம் செய்ய இப்பகுதி வீடுகள் இடையூராக உள்ளன என்றும், வட்டாட்சியர் கொடுத்துள்ள பட்டா ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வட்டாட்சியரை அறிவுறுத்தி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.

தனக்கே சொந்தமில்லாத நிலங்களை போலி ஆவணங்கள் மூலம், பிளாட் போட்டு விற்பனை செய்த தனிமனிதனின் பண ஆசைகளை நிறைவேற்றி கொடுக்க 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் இம்மீனவ மக்கள் வாழ்வாதரத்தை சீர்குலைக்க தயாராகும் மாநகராட்சி நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் ராஜாராம் விற்பனை செய்த பிளாட்டுகளுக்கு பத்திரபதிவின் ஆவணங்களை உண்மை தன்மைகளை ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட பத்திரபதிவுதுறைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory