» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வடமாநில நபரை கொன்று உடல் எரிப்பு : 3 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

செவ்வாய் 7, அக்டோபர் 2025 8:37:00 AM (IST)

குலசேகரன்பட்டினத்தில் வட மாநில நபரை கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழி அனல் மின்நிலையத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இங்கு ஜார்க்கண்ட் மாநிலம் ஜீம்ரி தில்லையா கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி நகரை சேர்ந்த மேகன் மத்தோ மகன் அர்ஜூன் பிரசாத் யாதவ் (53) என்பவர் தொழிலாளர் ஒப்பந்ததாரராக இருந்தார்.

கடந்த 2 வருடங்களாக அங்கேயே தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை சுமார் 6.30 மணிக்கு முகசவரம் செய்வதற்காக குலசேகரன்பட்டினத்திற்கு புறப்பட்டு சென்றார். இரவு 8.55 மணிக்கு அர்ஜூன் பிரசாத் யாதவ், தான் வேலைபார்க்கும் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஜெகதீசன் என்பவரை செல்போனில் தொடர்புகொண்டார்.

ஜெகதீசன் போனை எடுத்து பேசியபோது, அடையாளம் தெரியாத 3 பேர் கும்பல் தனது செல்போன் பாஸ்வேர்டை கேட்டு அடித்து உதைக்கின்றனர். என்னை காப்பாற்றுங்கள் என அர்ஜூன் பிரசாத் யாதவ் இந்தி மொழியில் கதறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெகதீசன் திரும்ப பேசுவதற்குள் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு ஜெகதீசன் தகவல் அளித்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்குள்ள டாஸ்மாக் அருகே அர்ஜூன் பிரசாத் யாதவ் தீக்காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையில், அர்ஜூன் பிரசாத் யாதவ் குலசேகரன்பட்டினம் டாஸ்மாக் கடையில் மதுவாங்கி அருந்தியுள்ளார். அப்போது அவருக்கும், அங்கு ஏற்கனவே மது அருந்திய 3 பேருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த அவர்கள், அர்ஜூன் பிரசாத் யாதவ்வின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். மேலும் அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தது தெரியவந்தது. எனவே, டாஸ்மாக் கடை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து அதனடிப்படையில் 3 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory