» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீதிபதி குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு: அதிமுக-தவெக பிரமுகர்கள் 4 பேர் கைது!

செவ்வாய் 7, அக்டோபர் 2025 10:24:31 AM (IST)

கரூர் சம்பவம் தொடர்பாக நீதிபதி குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பியதாக அ.தி.மு.க. மற்றும்த.வெ.க. பிரமுகர்கள்4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்புவோர் மற்றும் அவதூறு கருத்துகளை பதிவிடுவோர் மீது தமிழக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக ஏற்கனவே 25 சமூக வலைதள கணக்காளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, த.வெ.க. தலைவர் விஜய் குறித்து கண்டனங்களை முன்வைத்தார். இதனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குறித்து சிலர் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பி வந்தனர்.

இது தொடர்பாக பரங்கிமலையில் சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து நீதிபதிகள் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்த சென்னையை அடுத்த அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப குழுவைச் சேர்ந்த சசி என்ற சசிகுமார் (48), த.வெ.க. தகவல் தொழில்நுட்ப குழுவைச் சேர்ந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் (25), கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட் (25), தூத்துக்குடி வேம்பூரைச் சேர்ந்த அந்தோணி சகாய மைக்கேல் ராஜ் (35) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

கைதான 4 பேரும் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 17-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கரூர் துயரம் குறித்தோ அல்லது நீதிபதிகள் குறித்தோ அவதூறு கருத்துகள் தெரிவிக்கும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory