» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் ரூ.750 கோடியில் காற்றாலை முனையம் : வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தகவல்!

புதன் 15, அக்டோபர் 2025 8:34:13 AM (IST)



தூத்துக்குடியில் ரூ.750 கோடி செலவில் காற்றாலை முனையம் அமைக்கப்பட உள்ளது என்று வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் தெரிவித்தார். 

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகம் சார்பில் வருகிற 27-ந் தேதி முதல் 31-ந் தேதி மும்பையில் இந்திய கடல்சார் வார விழா-2025 என்ற தலைப்பில் வர்த்தக மாநாடு நடக்கிறது. இதுதொடர்பாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையம் சார்பில் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கான விளக்க கூட்டம் தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. 

வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் தலைமை தாங்கி, புத்தகத்தை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய கடல்சார் துறையின் முன்னேற்றம், பசுமை வளர்ச்சி திட்டங்கள், தொழில்நுட்ப வளர்ச்சிகள், கொள்கை முன்னேற்றங்கள் குறித்து சர்வதேச கடல்சார் சமூகத்துக்கு விளக்கும் வகையில் இந்திய கடல்சார் வாரம்- 2025 வர்த்தக மாநாடு நடக்கிறது.

இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 1 லட்சம் வர்த்தக பிரதிநிதிகள், 500-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட உலகளாவிய கடல்சார் சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியாவில் உள்ள 12 பெரிய துறைமுகங்கள் மற்றும் தனியார் துறைமுகங்கள் பங்கேற்கின்றன.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகமும் இந்த மாநாட்டில் பங்கேற்று துறைமுகத்தின் வளர்ச்சி திட்டங்கள், தொழில் வாய்ப்புகள், பசுமை முயற்சிகள் உள்ளிட்டவற்றை விளக்க உள்ளது. இந்த மாநாட்டில் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

இதில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு மட்டும் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஈர்த்து கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம். இந்திய கடல்சார் துறை வளர்ச்சியில் இந்த மாநாடு மிக முக்கிய பங்கு வகிக்கும். எனவே, மாநாட்டில் தூத்துக்குடியை சேர்ந்த ஏற்றுமதி, இறக்குமதியாளர்களும் பங்கேற்று தங்களது பங்களிப்பை வழங்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

தூத்துக்குடியில் ரூ.750 கோடியில் காற்றாலை முனையம்

பின்னர் வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதில் வெளித்துறைமுகம் திட்டத்திற்கு ஏற்கனவே டெண்டர் விடப்பட்டது. ஆனால் போதுமான வரவேற்பு இல்லாததால், அந்த திட்ட மாதிரியை மறு சீரமைப்பு செய்து வருகிறோம். தற்போது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. வெளித்துறைமுக திட்டத்தில் மாதிரியை மாற்றி வருகிற மார்ச் மாதத்துக்குள் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, பணிகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

இதுதவிர பசுமை மெத்தனால் சேமிப்பு மற்றும் எரி பொருள் நிரப்பும் வசதி நடந்து வருகிறது. துறைமுகத்தில் இருந்து பயணிகள் படகு சேவை தொடங்குவதற்கு சில நிறுவனங்கள் ஆர்வம் காட்டி உள்ளது. எந்தெந்த பகுதிக்கு படகு சேவை தேவையாக உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தி சேவை தொடங்கப்படும்.

கடல் காற்றாலை திட்டம் புதுப்பிக்கத்தக்க எரிசத்தி துறையால் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் காற்றாலை முனையம் அமைக்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசு ரூ.300 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. துறைமுகம் சார்பில் ரூ.450 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மொத்தம் ரூ.750 கோடி செலவில் காற்றாலை முனையம் அமைக்கப்பட உள்ளது. அமெரிக்காவின் 50 சதவீதம் வரி விதிப்பு இருந்தாலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கன்டெய்னர்கள் 6 முதல் 7 சதவீதம் அதிகமாக கையாளப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

இந்நிகழ்ச்சியில் வ.உ.சி. துறைமுக ஆணைய துணை தலைவர் ராஜேஷ் சவுந்தரராஜன், போக்குவரத்து மேலாளர் விமல், செயலாளர் மோகன்குமார், தலைமை பொறியாளர் சீனிவாசராவ் சில்லி, நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி மித்ரா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory