» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்துக்கு வரவேண்டிய முதலீடு ஆந்திராவுக்குச் சென்றது கவலை அளிக்கிறது : பிரேமலதா பேட்டி

திங்கள் 17, நவம்பர் 2025 4:56:58 PM (IST)

தமிழகத்துக்கு வரவேண்டிய முதலீடு ஆந்திராவுக்குச் சென்றது கவலை அளிக்கிறது. உரியவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தேமுதிகவின் ‘இல்லம் தேடி, உள்ளம் நாடி’ சுற்றுப் பயணத்தின் 3-ம் கட்ட பிரச்சாரத்தை மதுரையில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று தொடங்கினார். முன்னதாக, மாநகர் தெற்கு மாவட்டம் சார்பில் கூடல்நகரில் நடந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: டிச. 28-ல் விஜயகாந்த் குருபூஜையும், ஜன. 9-ல் கடலூரில் கட்சி மாநாடும் நடக்கிறது. தமிழகம் முழுவதும் மற்ற கட்சிகளுக்கு இணையாக பூத் கமிட்டி அமைத்துள்ளோம். 

தேர்தலுக்கு தயாராகுங்கள். முன்கூட்டியே தேர்தல் வரலாம். எஸ்ஐஆர் குறித்து விமர்சனம் இருந்தாலும், தனக்கு மட்டுமின்றி குடும்பத்தினருக்கும் வாக்கை தவறவிடாமல் உறுதி செய்யுங்கள். நாம் இடம்பெறும் கூட்டணியே ஆட்சி அமைக்கும். இங்கு உள்ளவர்கள் எம்எல்ஏ ஆகலாம். கூட்டணி அமைச்சரவையில் இடம்பெறும் வாய்ப்பும் கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தேர்தலில் என்ன நடக்கப்போகிறது என்பதை கணிக்க முடியாது. தேர்தல் முடிவுக்கு பிறகு எதுவும் நடக்கலாம். 2026-ல் கூட்டணி அமைச்சரவை அமையவே நிறைய வாய்ப்பு உள்ளதாக சொல்கின்றனர். மதுரை மத்தி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் ஏற்கெனவே தேமுதிக வென்ற தொகுதி என்பதால், அங்கு என்னை போட்டியிடுமாறு கட்சியினர் விரும்புகின்றனர். கடவுள் அருள் இருந்தால் நானோ, எனது மகனோ போட்டியிடுவோம். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு நிதிஷ்குமார் மட்டுமின்றி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் காரணம்.

நாங்கள் தினமும் 3 செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்துகிறோம். அதேபோல் தவெகவும் நடத்த வேண்டும். விஜய் களத்துக்கு வர வேண்டும். தமிழகத்துக்கு வரவேண்டிய முதலீடு ஆந்திராவுக்குச் சென்றது கவலை அளிக்கிறது. உரியவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க தேர்தல் ஆணையம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory