» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் பிரசாதம் அனுப்புவதாக மோசடி : கோவில் நிர்வாகம் போலீசில் புகார்!

செவ்வாய் 6, ஜனவரி 2026 8:33:20 AM (IST)



சமூக ஊடகங்களை பயன்படுத்தி திருச்செந்தூர் கோவில் பிரசாதம் அனுப்புவதாக கூறி மோசடி செய்து பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பெயர் மற்றும் அடையாளத்தை நிர்வாகத்தின் அனுமதியின்றி பயன்படுத்தி, இன்ஸ்ட்ராகிராம், யூடியூப், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக தவறான மற்றும் பொய்யான தகவல்களைப் பரப்பி பக்தர்கள் மற்றும் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நபர்கள் மீது கோவில் நிர்வாகத்தால் அவ்வப்போது போலீசில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் அந்த சமூக ஊடகப் பக்கங்களை முடக்குவதற்கும், அவற்றை நிர்வகிக்கும் நபர்களை அடையாளம் கண்டு, சட்டப்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் சமூக ஊடகப் பக்கத்தில் கோவிலின் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணாக முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாக கூறப்படும் பன்னீர் விபூதி, சந்தன காப்பு பிரசாதம், குங்குமம், திருநீறு, கயிறுகள் உள்ளிட்ட பொருட்கள் பக்தர்களின் வீடுகளுக்கு நேரடியாக அனுப்பப்படும் என பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும், கோவில் பெயரை தவறாக பயன்படுத்தி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மோசடியாக பணம் பறிக்கும் நோக்கில் காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த சமூக ஊடகப் பக்கத்தை உடனடியாக முடக்கவும், வெளியிடப்பட்ட காணொளிகளை நீக்கவும், இந்த மோசடி செயல்களில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும் கோவில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலின் ஆன்லைன் சேவைகள், தரிசன முன்பதிவு, நன்கொடைகள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களைப் பெற https//tiruchendurmurugan.hrcetngov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்துமாறும், சமூக ஊடகங்களில் பரவும் கோவில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்படாத, தவறான மற்றும் உண்மைதன்மையற்ற தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory