» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இந்தியா-ஐரோப்பிய ஒப்பந்தம்: தமிழகத்துக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
புதன் 28, ஜனவரி 2026 8:31:43 AM (IST)
இந்தியா-ஐரோப்பிய ஒப்பந்தத்தால் தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடு, ஏற்றுமதி வளர்ச்சி கிடைக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள நிலையில், இந்தியாவின் முக்கிய தொழில் மற்றும் ஏற்றுமதி மையமான தமிழகம், அதனால் பெரும் நன்மை அடையும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தகம் தற்போது ஆண்டுக்கு ரூ.6.4 லட்சம் கோடி அளவில் உள்ளது. இதில் 20 சதவீதம் வரை தமிழகத்தின் பங்கு இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக தோல், காலணி ஏற்றுமதியில் 40 சதவீதம் இருக்கும்.
தற்போது புதிய ஒப்பந்தத்தின் மூலம் இறக்குமதி வரி முழுமையாக நீக்கப்பட்டதால், தமிழகத்தின் முக்கிய ஏற்றுமதி துறைகள் அனைத்தும் நேரடியாக பலனடையும். திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் போன்ற நகரங்கள் இந்தியாவின் துணி மற்றும் ஆடை ஏற்றுமதியின் இதயம். ஐரோப்பிய யூனியன் சந்தையில் இதுவரை 8 முதல் 12 சதவீதமாக இருந்த சுங்கவரி பூஜ்யமாகிவிட்டதால், தமிழகத்தின் ஜவுளித்துறை உலக சந்தையில் அதிக போட்டித்திறன் பெறும். பெண்கள் அதிகமாகப் பணிபுரியும் இந்தத் துறையில் வேலைவாய்ப்பும் உயரும்.
தமிழகத்தின் ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை போன்ற தோல் தொழிற்சலைகள் மற்றும் காலணி தயாரிப்புக்கு இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி தளமாக இருக்கிறது. எனவே இந்த தொழில்களுக்கு, ஐரோப்பிய யூனியன் தடையற்ற ஒப்பந்தம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.
தற்போது இந்த பொருட்களுக்கு 10 சதவீத இறக்குமதி வரி நீக்கப்பட்டதால் நேரடி சந்தை திறப்பு கிடைத்துள்ளது. தூத்துக்குடி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி போன்ற கடலோர மாவட்டங்களில் உற்பத்தியாகும் இறால், நண்டு, மீன் வகைகளுக்கும் ஐரோப்பிய யூனியன் சந்தையில் கிராக்கி உள்ளது. தற்போது இந்த ஏற்றுமதி நடைமுறைகள் எளிதாக்கப்படுவதால், மாநிலத்தின் மீன்வள ஏற்றுமதி மேலும் மேம்படும்.
சென்னை மற்றும் கோவை நகரங்களில் உள்ள நகை மற்றும் ரத்தின உற்பத்தி துறைகள் ஐரோப்பிய யூனியன் சந்தையில் புதிய முன்னேற்றத்தை காணும். நகை மீது இருந்த 2 முதல் 4 சதவீத வரிகள் குறைந்து, சிலவற்றில் நீக்கப்பட்டதால், கைத்தொழில் நகை, வைரம் பதிக்கப்பட்ட நகை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி அதிகரிக்கும். பம்புகள், மோட்டார்கள், தொழில்துறை கருவிகள் போன்ற உபகரணங்களின் ஏற்றுமதியில் கோவை என்ஜினீயரிங் துறைக்கும் நல்ல வளர்ச்சி வாய்ப்பு உள்ளது.
ஓரகடம், ஓசூர், சென்னை பகுதிகளில் உள்ள ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் சந்தை பெரிய வர்த்தக வாய்ப்பை தர உள்ளது. அதனால் மாநிலத்திற்கு புதிய வெளிநாட்டு முதலீடுகளும் ஈர்க்கப்படும். சென்னை, கோவை போன்ற நகரங்களில் செயல்படும் ஐ.டி, மென்பொருள் சேவை, சைபர் பாதுகாப்பு, வடிவமைப்பு என்ஜினீயரிங் துறைகளுக்கு ஐரோப்பிய யூனியன் 144 சேவைத் துறைகளைத் திறந்துவைத்திருப்பது மிகப்பெரிய வாய்ப்பாகும். இந்த துறையில் உள்ள தமிழக நிபுணர்கள் தற்காலிகமாக ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பணிபுரிவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
பொள்ளாச்சி, தேனி, நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் பொருட்கள், மிளகு, மஞ்சள், பழச்சாறு, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் போன்றவற்றுக்கும் ஐரோப்பிய யூனியன் சந்தையில் தடைப்பட்டிருந்த இறக்குமதி வரிகள் குறைந்து, ஏற்றுமதி மேம்படும் வாய்ப்பு உள்ளது.
மதுரை, தஞ்சை, காஞ்சீபுரம் கைவினைப் பொருட்கள் ஐரோப்பிய யூனியன் சந்தையில் மேலும் விற்பனையை அதிகரிக்க செய்யும். ஒட்டுமொத்தமாக ஏற்றுமதி அதிகரித்தால் சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் கப்பல் போக்குவரத்து அதிகரித்து, மாநிலத்தின் சரக்கு போக்குவரத்து துறைகளுக்கும் புதிய வளர்ச்சி கிடைக்கும்.
மொத்தத்தில் புதிய ஒப்பந்தம், வேலைவாய்ப்பு, தொழில்துறை விரிவாக்கம், வெளிநாட்டு முதலீடு, ஏற்றுமதி வளர்ச்சி போன்ற அனைத்திலும் தமிழகத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மடிக்கணினிகளை 2 தினங்களில் பெற்றுக்கொள்ள வேண்டும்: ஆட்சியர் அழகுமீனா அறிவுறுத்தல்
புதன் 28, ஜனவரி 2026 5:41:21 PM (IST)

தமிழகத்தில் பிப்.1ஆம் தேதி மது விற்பனைக்கு தடை : தமிழக அரசு உத்தரவு
புதன் 28, ஜனவரி 2026 5:04:44 PM (IST)

கறிக்கோழி விலை உயர்வு படிப்படியாக குறையும்: உற்பத்தியாளர்கள் பேட்டி!
புதன் 28, ஜனவரி 2026 4:24:31 PM (IST)

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க கோரிக்கை!
புதன் 28, ஜனவரி 2026 3:18:10 PM (IST)

வெறிப்பிடித்த தெரு நாய் கடிதத்தில் 3 குழந்தைகள் உள்பட பலர் காயம் - மருத்துவமனையில் அனுமதி!
புதன் 28, ஜனவரி 2026 10:47:30 AM (IST)

திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை : ராகுல் காந்தியை சந்திக்கிறார் கனிமொழி
புதன் 28, ஜனவரி 2026 10:31:07 AM (IST)

