» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றபோது கார் மோதி 4 பெண் பக்தர்கள் பலி!

ஞாயிறு 1, பிப்ரவரி 2026 9:37:24 AM (IST)

பெரம்பலூர் அருகே சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதியதில் 4 பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர். கடந்த சில நாட்களாகவே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் கூட்டம், கூட்டமாக நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.

அதன்படி கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, பெண்ணாடம் அருகே தொளார் குடிகாடு கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக நேற்று முன்தினம் மாலை புறப்பட்டனர். அவர்கள் நேற்று அதிகாலை பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

சென்னை மவுலிபாக்கத்தை சேர்ந்த கணபதியின் மகன் விக்னேஷ் (32). இவர் அந்த பகுதியில் கும்பாபிஷேகம் நடந்த ஒரு கோவிலின் பிரசாதத்தை திருச்சியில் உள்ள உறவினரிடம் கொடுப்பதற்காக தனது காரில் புறப்பட்டார். அவருடன், அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த விஜய் (36), சென்னை திரிசூலம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த சுரேசின் மகன் கவுதம் (24) ஆகியோரும் வந்தனர். காரை கவுதம் ஓட்டினார்.

நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் மேம்பாலத்தை தாண்டி அந்த கார் வேகமாக வந்தது. திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சாலையோரமாக நடந்து சென்ற பெண் பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்து, அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தொளார் குடிகாடு மெயின்ரோட்டை சேர்ந்த சுப்ரமணியனின் மனைவி மலர்க்கொடி (36), பாலசுப்ரமணியனின் மனைவி விஜயலட்சுமி (41), திருநாவுக்கரசின் மனைவி சசிகலா (47) மற்றும் இவர்களின் பின்னால் வந்த சேலம் மாவட்டம், கெங்கவல்லியை சேர்ந்த மருதமுத்துவின் மனைவி சித்ரா (40) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு, சாலையோர பள்ளத்தில் விழுந்ததில் பலத்த காயமடைந்தனர். 

இதில் மலர்க்கொடி, விஜயலட்சுமி, சித்ரா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். சசிகலா உயிருக்கு போராடினார். மேலும் தொளார் குடிகாட்டை சேர்ந்த பரமசிவத்தின் மனைவி ஜோதிலட்சுமி (57), சண்முகசுந்தரத்தின் மனைவி விஜயலட்சுமி (43), மருதமுத்துவின் மனைவி தமிழரசி (42) ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். பக்தர்கள் மீது மோதிய கார், சிறிது தூரம் சென்று நின்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீசாரும், பெரம்பலூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த சசிகலாவையும், காயமடைந்த 3 பேரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த 3 பேருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே உயிரிழந்த 3 பெண் பக்தர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரை ஓட்டிய கவுதம் மற்றும் அதில் பயணம் செய்த 2 பேரையும் பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்து பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதுதொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த கவுதமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory